‘மூன்றாம் அதிகாரத்தின்’ முழு கதைதான் என்ன?
‘மூன்றாம் அதிகாரம்’ மலேசிய திரைப்படம்.
பார்த்துவிட்டீர்களா? இன்னும் இல்லையெனில் இப்போதே நீங்கள் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச்
செய்யவேண்டும். 50க்கும் அதிகமான திரையரங்குகளில் இருந்து இப்போது ஏழு திரையரங்குகளில்
மட்டுமே இப்படத்தைப் பார்க்கும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறோம்.
நம் நாட்டுத் திரைப்படம் நாம்
தானே பார்க்கவேண்டும் என மற்றவர் சொல்வது போல நானும் சொல்ல நினைக்கவில்லை. ஆனால் நீங்கள்
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் மூன்றாம் அதிகாரம் திரைப்படத்தைத்
திரையரங்கில் பார்த்துவிட வேண்டும். இன்னும் கொஞ்சம் நாளில் அல்லது நாளையே கூட நடந்துவிடும்
அபாயம் இருக்கிறது. ஆட்களில் ஆதரவு இல்லை என்பதாலும், அடுத்தடுத்த திரைப்படங்கள் வந்துகொண்டிருப்பதாலும்
மூன்றாம் அதிகாரம் திரையரங்கில் இருந்து எடுக்கப்படலாம். அதன் பிறகு “ஐயோ நல்ல படம்ப்பா…
திரையரங்கில் பார்க்காமல் விட்டுவிட்டோமே..” என நீங்கள் யாரும் புலம்ப வேண்டாமே என
நினைக்கிறேன். அதனால்தான் விரைந்து திரையரங்குக்குச் செல்ல சொல்கிறேன். நல்லதொரு முயற்சிக்கு
நம் பங்கும் இருக்க வேண்டும் என்ற ரசிகனாக எனது எதிர்ப்பார்ப்பு இதுவே.
திரைத்துறையில் இருப்பவர்களே
மூன்றாம் அதிகாரம் திரைப்படத்தைப் பார்க்கும் ‘வாய்ப்பு’ கிடைத்தது; அதனால் பார்த்தேன்
எனப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் துறையில் இருக்கும் ஒன்றுக்கு வாய்ப்பு
கிடைத்தால்தான் போகவேண்டுமா? அது அவர்களின் கடமையல்லவா. உண்மையில் அது ரசிகர்களாக நாம்
சொல்ல வேண்டிய ஒன்று. நல்லதொரு திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இப்போது நமக்கு
வாய்த்திருக்கிறது, தவற விடலாமா ?.
யாரின் அனுதாபத்தின் பெயரிலும்
நாம் மூன்றாம் அதிகாரத்தைப் பார்க்க வேண்டாம். ஆனால் நாம் பார்க்க வேண்டும். ஏன்? அதற்கு
என்னிடம் சில காரணங்கள் இருக்கின்றன. உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நானும் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுடன்தான்
மூன்றாம் அதிகாரத்தைப் பார்த்தேன். தொடக்கத்தில் எனக்கும் இது வழக்கமான படமாக அமைந்திருக்கிறதோ
என்கிற ஐயம் எழுந்தது. ஆனால் அடுத்தச் சில நிமிடங்களில் அது அப்படியல்ல எனப் படக்குழு
நிருபிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இரண்டு விதமான தொடக்கம்; ஒன்று ருத்ரனை கண்டுபிடித்த காவல்துறை அதிகாரி துப்பாக்கியுடன் ருத்ரனின் இருப்பிடத்திற்கு நுழைவது, இன்னொன்று மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் கதைக்கான தேடுதலை தொடக்கி வைக்கும் அப்பாவி ஒருவர் என இரண்டு விதமான தொடக்கங்களை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.
மூன்றாம் அதிகாரத்தைப் பார்த்த
ஒவ்வொருவரும் அதன் இறுதி முடிவை சொல்ல வேண்டாம் என்கிறார்கள். அவர்கள் யாரும் சொல்லப்போவதும்
இல்லை. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாதே. சொல்லிவிடுவேனே. ஆனால் அதுதான் முடிவா
என நீங்கள் திரையரங்கில் சென்றுதான் கண்டுபிடிக்க முடியும். அதனால்தான் வழிந்து இந்தப்
விஷப்பரீட்சையை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
குற்றச்செயல்கள் தொடர்ந்து நடந்து
கொண்டுதான் இருக்கிறது. செய்திகளில் பார்க்கிறோம். நாளிதழ்களில் வாசிக்கிறோம். பல புரளிகளுடன்
சேர்ந்து வட்சப் செய்திகளாகவும் நம் கைகளைச் சுரண்டிக்கொண்டுதான் இருக்கின்றன.
கொலை, வழிப்பறி, வன்பகடி, வன்புணர்வு
போன்ற குற்றங்களைச் செய்கிறவர்கள் எங்கோ வேற்றுகிரகத்து ஏலியன்களா? இல்லையே நமக்கிடையில்
நம்வீட்டில் நமக்குள்ளே இருப்பவர்கள்தானே. அப்படியிருந்தும் நாம் ஏன் அவர்களைக் கண்டறிய
முடியவில்லை. ஏன் களையெடுக்க முடியவில்லை. இதற்கு நம்மால் என்னதான் செய்ய முடியும்
என்கிற ஆதார கேள்வியைத்தான் மூன்றாம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம். நாம் எங்கே தவறு
செய்கிறோம். எப்படித் தவறு நடக்கிறது. யாருக்காகத் தவறு நடக்கிறது என்கிற தேடுதலை பார்வையாளர்களின்
பார்வைக்கு விட்டிருக்கிறார்கள் படக்குழுவினர்.
தண்டனைகள் அதிகபட்சமானால் குற்றங்கள் குறையும் என்கிற அடிப்படை விதியை நாம் இன்றும் கூட முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. அதற்குக் காரணம் குற்றவாளிகள் விடுதலை ஆனாலும் நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்கிற தார்மீக எண்ணம்தான். ஆனால் விடுதலையான குற்றவாளிகள் குற்றத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கக் காரணிகளாவதை எப்படித் தடுக்கப்போகிறோம்.
மூன்றாம் அதிகாரத்தின் மையக்கதை; மேற்சொன்னதுதான்.
மூன்றாம் அதிகாரத்தின் கதைதான் என்ன? ஒரு கொலை நடக்கிறது. இளம்பெண் கழுத்தறுத்துக் கண்டத்துண்டமாக வெட்டப்படுகிறாள். அவளில் தலை அழுகிய நிலையில் கண்டெடுக்கப்படுகிறது. காவல்துறையினர்க்கே அந்தக் கொலை தீர்க்க முடியாத சிக்கலாக மாறுகிறது. அதனைத் தீர்ப்பதற்கான மேலும் திறமையான அதிகாரி காவல்துறையினருடன் சேர்கிறார். விசாரணை இன்னும் சூடு பிடிக்கிறது. அதே சமயம் அவர்களுக்குச் சவாலும் அதிகரிக்கிறது. குற்றவாளிகள் ஒவ்வொருவராகக் களையெடுக்கப்படுகிறார்கள். யார் அந்தப் புதிய குற்றவாளி எதற்காகப் பலிவாங்கப்படுகிறது என்கிற முடிச்சுகளில் கதை நம்மைக் கலங்கடிக்கிறது. இறுதி முடிவைத் திரையரங்கில் நீங்கள் பார்க்கும் போது உங்கள் மனதில் உங்கள் குழந்தைகளை நினைத்துக் கொள்வீர்கள். அவர்கள் மேலும் இன்னும் கவனத்தை வைப்பீர்கள்.
நம் நாட்டு மார்க்கண்டேயனான கே.எஸ்.மணியம்
கண்களால் நம்மையும் அழவைக்கிறார். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னை நிறுத்தி
தான் கலைத்தாயின் திருமகன் என நிரூபித்துவிடுகிறார். மகளைப் பறிகொடுத்த தந்தையாகத்
திக்குதெரியா மனிதனாக வாழ்ந்திருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் திருமணம் செய்யக் காத்திருந்த
தன் மகளின் தலை மட்டும் கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அது தன் மகள்தானா இல்லையா என்கிற
தெளிவின்மையில் பேச்சற்று நிற்கிறார். தான் கொண்டு வந்திருந்த வளையலை எடுத்து, கிடத்தியிருக்கும்
தலைக்குக் கீழ் உடம்பையும் கைகளையும் காணாது அவர் துடிப்பதும் அதனூடாக வரும் பாடலும்
நம்மையும் சேர்ந்து அழ வைக்கிறது. அர்த்தம் பொதிந்த பாடல் வரிகளில் சொல்ல வேண்டிய கதைகளைச்
சொல்லிவிடுகிறார் பாடலாசிரியர்.
இறுக்கமாகப் போய்க்கொண்டிருக்கும் கதையில் நம்மைச் சிரிக்க வைப்பதில் குபேன் தனியாகத் தெரிகிறார். உடல் மொழியாகட்டும், தான் பார்த்துப் பிரமித்த அதிகாரியுடன் சேர்த்து பணியாற்றுவதாகட்டும் கைத்தட்டல்களையும் சிரிப்புகளை வரவைக்கிறார்.
துடிப்பு மிக்க அதிகாரி அஷோக்காக
வருகிறார் ஜிப்ரேல் ; கதையின் முதுகெலும்பு இவர்தான். இவரின் பார்வையிலிருந்துதான்
கதை தொடங்குகிறது இவரின் பார்வையிலிருந்துதான் கதை முடிகிறது. கதை இறுதியில் இவர் எடுக்கும்
அதிரடி முடிவை சொல்லியும் சொல்லாமலும் தனது புன்னகையாய் காட்டுகிறார். உண்மையில் பார்வையாளர்களாக
நாமும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம் என்பது அவர் வாங்கும் கைத்தட்டல்களில் இருக்கிறது.
அவருடன் பணியாற்றும் இதர நான்கு அதிகாரிகளும் அவர்களின் கதாப்பாத்திரத்தை அளவாகவே செய்திருக்கிறார்கள்.
கதையின் நகர்விற்கு அவர்களின் உதவியுடம் அவசியமாகிறது.
முக்கியப் பொறுப்பிலும் எல்லோருக்கும்
பதில் சொல்லும் இடத்தில் இருக்கும் அதிகாரியாக வருகிறார் கவிதா தியாகராஜன். இதுவரை
அவரிடம் இருந்து நாம் பார்க்காத ஒரு முகம். பார்க்க நினைத்திருக்காத கதாபாத்திரம்.
பார்க்கின்றவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் தேவையும்
அதுதான் என்பதால் அதற்கு அவர் நன்றாகவே தயாராகியுள்ளார். அதிகாரி அஷோக்கிடம் ‘பிரியாணி
வாங்கச் சென்ற நாய்க்கதை’யை சொல்லும் இடத்தில் திரையரங்கே அமைதியாகிவிட்டது. ஏறக்குறைய
மூன்று நான்கு பக்கங்களுக்கான வசனத்தை ஒரே டேக்கில் அவர் செய்திருப்பது பாராட்டுக்குரியது.
உண்மையில் அதுதான் அஷோக்கை மேலும் கோபப்படுத்தி விசாரணையில் மறைந்திருந்த கறுப்பு ஆடு
யார் என்பதைத் தேட வைக்கிறது.
குற்ற தடயவியல் நிபுணர் (ஃபோரென்சிக்)
கல்கியாக வருகிறார் ஹரி தாஸ். தகுந்த உடல்மொழி அறிவார்ந்த உரையாடல் , எதனையும் சகஜமாகக்
கண்டறியும் திறமைசாலியாக மிளிர்கிறார். அவர் கதைக்குள் வந்த பிறகு திரைக்கதை இன்னும்
பரபரப்பாகிறது. புத்திசாலியான ஹீரோவுக்கும் அதிபுத்திசாலியான குற்றவாளிக்கும் இடையில்
ஏற்படும் ஆடு புலி ஆட்டமாக மூன்றாம் அதிகாரத்தில் களம் கண்டிருக்கிறது.
இம்மாதிரியான திரில்லர் கதைகளுக்கு
ஈடுகொடுக்கும் படி இருக்கும் இசையே பார்வையாளர்களை இன்னும் கவர்ந்து இழுக்கும். அந்த
வகையில் மூன்றாம் அதிகாரம் இசையிலும் நன்றாக வந்துள்ளது.
குற்றத்தடவியலில் எப்படி வேலை
நடக்கிறது, குற்றப்பின்னணியை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை நுணுக்கமாகக் காட்டியுள்ளார்
இயக்குனர். ஹீரோவிற்கு மட்டுமல்ல வில்லனாக வரும் ருத்ரனின் அறிவுத்திறனையும் தர்க்கப்பூர்வமாக
(லோஜிக்) காட்டியுள்ளார்.
ருத்ரன். யார் இது. நல்லவனா கெட்டவனா?
அவனுக்கென்று இருக்கும் நியாயங்கள் உண்மையில் நியாம்தானா? என்ற கேள்விகள் நிச்சயம்
நம்மை பின் தொடரும். ருத்ரனின் முகமூடி மற்று உடையலங்காரமும் அந்தக் கதாப்பாத்திரத்தின் தோரணையும் நமக்கு பயம் காட்டத் தவறவில்லை. நாங்கள் மூன்றாம் அதிகாரம் பார்த்துக்கொண்டிருக்கும்
போது ருத்ரன் அதே உடையலங்காரத்துடன் திரையரங்கில் நுழைந்துவிட்டார். நாங்கள் நிஜமாகவே
பயந்துவிட்டோம்.
நிறைகள் எவ்வளவு இருந்தாலும்
கண்ணில் தட்டுப்படும் சிறுசிறு குறைகளைச் சொல்வதால் அது அடுத்தடுத்த ஆக்கங்களில் தீர்க்கப்படும்
என்பதால் அவற்றையும் சொல்ல வேண்டியுள்ளது. ஆனால் இப்போது அதனைச் சொல்வதைக் காட்டிலும்,
நீங்கள் திரையரங்குக்குச் சென்று மூன்றாம் அதிகாரத்தைப் பார்ப்பதே முக்கியமானது. அதன்
பிறகு நாம் இன்னும் அதிகமாய் உரையாடலாம்.
இன்றைய சூழலுக்கு ஏற்ற திரைப்படத்தை
ஒரு பாடமாகவும் மூன்றாம் அதிகாரம் எனக் கொடுத்திருக்கும் படக்குழுவினர்க்கும், கல்கி
தயாரிப்பு நிறுவனத்திற்கும், தயாரிப்பாளரும் கதாசிரியருமான அகிலனுக்கும், இயக்குனர்
எஸ்.டி.புவனேந்திரனுக்கும் அன்பும் வாழ்த்துகளும்.
0 comments:
கருத்துரையிடுக