கதை வாசிப்பு - 'ஆப்பிள்'
கதை வாசிப்பு
கதை - ஆப்பிள்
எழுத்து - ஜீ.முருகன்
ஜீ.முருகனின் 'கண்ணாடி' சிறுகதை தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் 'ஆப்பிள்' என்னும் சிறுகதையை வாசித்தேன். அதன் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு சிரமத்தைக் கொடுத்துவிட்டது.
பழைய காதலியை பார்க்கும் போகும் காதலன் என்கிற பிம்பத்தில் கதையை ஆரம்பித்துள்ளார். அடுத்தடுத்து கதை நகர்ந்த விதம் வாசிக்கின்றவர்களை பாதிக்கவே செய்யும். நல்ல கதை என்பது காகிதத்தையும் தாண்டி நம்மை அழைத்துப் போக வேண்டும்.
இந்த 'ஆப்பிள்' சிறுகதை என் நினைவுகளின் பின்னோக்கி என்னை அழைத்துச் சென்றது.
அப்போது நான் மின்னல் பண்பலையில் (வானொலி) அறிவிப்பாளராக இருந்தேன். 'கண்ணாடித்துண்டுகள்' என்னும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியை தயாரித்து வழங்கி வந்தேன். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுடன் ஓர் உரையாடலை நடந்துவது நிகழ்ச்சியின் மையம்.
அவ்வாறு விளிம்பு நிலை மனிதர்கள் முதல், திருநங்கை, போதை பித்தர், கொலை செய்தவர், சிறையில் குழந்தை பெற்றவர், பேய் பிடித்தவர், பாலியல் தொழிலாளி என பல தரப்பு மனிதர்களை சந்தித்தேன்.
ஒரு முறை சிவப்பு விளக்கு பகுதியில் பாலியல் தொழிலாளி ஒருவரை சந்தித்தேன். உரையாடலுக்கு அவர் சம்மதித்தார். தகுந்த ஏற்பாடுகளுடன் சென்றேன்.
தனது தொழில் குறித்தும் கடந்த காலம் குறித்தும் பேசிக்கொண்டிருந்தவர் சட்டென பேச்சை நிறுத்தினார். தூரத்தில் நடக்கும் ஒரு பெண்ணை ஆழமாக பார்த்தார். ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவர் என்னிடம், "தோ அங்க பாரு தம்பி.. அவதான் என்னோட பொண்ணு.. அவளுக்காகத்தான் இந்த தொழிலுக்கே நான் வந்தேன். இன்னிக்கு என்னடான்னா.. என்னை பார்த்தாலே அசிங்கமா இருக்குன்னு.. எவனையோ கல்யாணம் பண்ணிட்டு எங்கயோ போய்ட்டா... கொழந்தை வேற இருக்காம்.. சொன்னாங்க.."
அவரின் கண்களில் ஏதோ ஒன்று வெளிபட்டது. உடனே என்னாலும் உரையாடலை தொடர முடியவில்லை. இருவரும் குடிப்பதற்கு காபியை ஆடர் கொடுத்து கொஞ்ச நேரம் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தோம்.
இன்று 'ஆப்பிள்' கதையை வாசித்து முடிக்கும் தருவாயில், அன்று நான் சந்தித்த அந்த பெண்ணில் முகம் வந்துவிட்டு போனது.
கதைக்கும் அந்த சம்பவத்திற்கும் நேரடி சம்பத்தம் இல்லை. ஆனால் ஆப்பிள் கதையில் நாயகியின் முகத்தில் என்னால் அந்த பெண்ணை பார்க்க முடிந்தது.
அப்படி என்னதான் இருந்தது 'ஆப்பிள்' கதையில்?
பழைய காதலியை சந்திக்க ஆப்பிள்களுடன் காதலன் செல்கிறான். அவனுக்கு திருமணம் ஆகிய பின் ஏற்பட்ட தொடர்புதான் இந்த காதல். அவனது மனைவிக்கு விசயம் தெரிந்துவிட்டதால் சண்டையிட்டு வேறொரு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்.
இன்று ஏன் பழைய உறவை புதுப்பிக்க காதலன் வருகிறான் என்கிற கேள்வியை கதையின் கடைசிவரை சொல்லவில்லை. ஆனால் வாசகரால் புரிந்துக்கொள்ள முடிகிறது.
அந்த காதலிக்கு ஒரு பொண்ணும் பையனும் இருக்கிறார்கள். கணவன் இறந்துவிட்டான். வேறு ஆணின் துணைக்காக கணவனை மனைவியே கொன்றுவிட்டதாக ஊர் பேசுகிறது.
தன் காதலியை தன்னைவிட யாராலும் பார்த்துக்கொள்ள முடியாது என்ற எண்ணமே காதலனுக்கு ஆரம்பத்தில் இருந்தாலும் மெல்ல அவனது சுயரூபம் வெளிவருகிறது.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. மனைவி அவனை தொட அனுமதிக்காததால், அவனது நண்பன் காதலனுக்கு ஒரு ஹோட்டல் அறையையும் அவனை மகிழ்ச்சிப்படுத்த ஒரு பெண்ணையும் ஏற்பாடு செய்திருக்கிறான். அந்த பெண் வேறு யாருமில்லை. தன் காதலியில் மகள்தான் என்பதை போட்டு உடைக்கிறான்.
காதலிக்கு அது பேரிடியாய் விழுகிறது. அது அவனது மகளாகக் கூட இருக்கலாம் என்கிறாள். ஏனெனின் அவனுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு தன் கணவனையே அவள் நெருங்கவிடவில்லை என்று அழுகிறாள். அவர்களில் சண்டை வலுக்கிறது. காதலன் அங்கிருந்து போகிறான்.
அதிர்ச்சியில் இருந்தும் வேதனையில் இருந்தும் மீள முடியாமல் காதலி தவிக்கும் சமயம், குளியலறையில் இருந்து மகள் வெளிவருகிறாள். இவ்வளவு நேரம் அவள் அங்கிருந்ததையே அம்மா மறந்திருந்தார்.
'எப்ப வந்த' என அம்மா கேட்கவும், தான் அந்த நபருக்காக ஹோட்டலுக்கு சென்றதை அவர் சொல்லும் போதே வந்துவிட்டேன் என சொல்கிறாள். பின்னர் அமர்ந்து அந்த நபர் வாங்கி வந்த ஆப்பிளை ஒரு கடி கடித்து அம்மாவிடம் நீட்டுகிறாள். கதை முடிகிறது.
அகதையை வாசிக்கின்றவர்களிடமே தான் பாதி கடித்த ஆப்பிளை காட்டி வேண்டுமா என கேட்டு அவள் கேட்டுச் சிரிப்பதாகவே தோன்றுகிறது.
கதை முடிந்தப்பின்னரும் ஏதோ ஒரு நெருடல் மனதில் தொற்றிக் கொள்கிறது.
வாய்ப்பிருப்பின் 'ஆப்பிள்' சிறுகதையை முழுமையாக வாசிக்க கேட்கிறேன். ஏனெனில் நான் சொல்லாத பல அதிர்ச்சிகளும் வலியும் அக்கதையில் இருக்கின்றன.
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக