மாயங்களின் அரசன்
வாசிப்பது எஸ்.ராமகிருஷ்ணனின் 'வாசக பர்வம்'. அதில் கோணங்கி பற்றிய தன் அனுபவத்தை 'கோணங்கி:மாயக்கதையாளன்' என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்.
கோணங்கியுடன் ஏற்பட்ட சந்திப்பு. இருவரும் சேர்ந்து பயணம் மேற்கொண்ட விபரங்கள். அவரின் இயல்பு என மிக நேர்த்தியாகச் சொல்லிச்செல்கிறார்
கோணங்கி அவர்களுடன் பழகியுள்ளதால், என்னால் எஸ்.ரா சொல்வதின் மிகையற்ற தன்மையைப் புரிந்துக்கொள்ள முடிகிறது.
சொல்லப்போனால், கோணங்கி செய்த விளையாட்டுகளை வாசிக்கையில் இயல்பாகவே என் மனம் குதூகலிக்கிறது. வயது வித்தியாசமற்ற அவரின் நட்பும் அவர் பாராட்டும் அன்பும் இன்றளவு அவருக்கான வாசகர்களை நேசிக்கின்றவர்களை அவர் பக்கம் கவர்ந்து இழுக்கத்தான் செய்கிறது.
'அவரது சட்டை, பேனா, பை என எதை எவர் கேட்டாலும் உடனே தந்துவிடுவார்' என சொல்கிறார் எஸ்.ரா.
எனக்கும் அவ்வாறான அனுபவம் உண்டு. நண்பர்களுடன் தமிழகம் சென்றிருந்த சமயம். அதற்கு முன்னமே அவரின் 'கல்குதிரை' சிற்றிதழலில் எனது 'இன்னொரு கிளை முளைக்கிறது' சிறுகதை பிரசுரமாகியிருந்தது. அதன் மூலம் அவர் என்னை அறிந்திருந்தார். என்னைப் பற்றி பலருடன் பேசியுமிருந்தார். மலேசியாவில் அவருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பூர்வகுடி கிராமத்தில் நாங்கள் இருவரும் செய்துகொண்ட பிரார்த்தனைகளைக் குறித்து எழுத இன்னும் அந்த மாயவித்தை கைகூடவில்லை. விடயம் அதுவல்ல.
தமிழகத்தில் நண்பர்களுடன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். மூலஸ்தானத்தை விட அதனை சுற்றியிருந்த கற்சிற்பங்களையும் அதன் மீது பட்டு அசையும் தீபத்தின் ஒளியையும் என்னிடம் காட்டிக்கொண்டிருந்தார். ஏனோ எங்களுக்குள் வயது ஒரு பொருட்டாக தெரியாமலாயிற்று. அப்போது விபூதி தட்டு கொண்டு வரப்பட்டது. விபூதியை எடுக்கும் போது அவரது கைகுட்டை கீழே விழுந்தது.
அதனை எடுத்தேன். அவரிடம் கொடுத்தேன். அதனை வாங்கிக்கொண்ட அவர், "உனக்கு பிடிச்சிருக்கா?" என கேட்டார். நானும் "அதன் வண்ணம் பிடித்திருக்கிறது" என்றேன். யோசிக்காமல் அதனை மடித்து என் கால்சட்டைப் பையில் வைத்துவிட்டு.
"இது உனக்கு நான் கொடுக்கும் பரிசு.. வச்சிக்கோ.. நிறைய எழுதனும் சரியா.." என்றார்.
இன்றும் எனக்கு ஏதும் சஞ்சலம் ஏற்பட்டால், கோணங்கியின் அந்த கைகுட்டையை எடுத்து நன்றாக திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்ச நேரத்தில் மனம் இலகுவாகிவிடுகிறது. சமயங்களில் அவரை அழைத்தும் பேசிவருகிறேன். அவர் சொல்லிக் கொடுக்கும் மந்திர வார்த்தை ஒன்றுதான்,
"எழுது.. எழுது.. எழுது.. அதான் உனக்கான தேவதை..."
எஸ்.ராவின் இந்த கட்டுரை எனக்கு, கோணங்கியுடனான சந்திப்புகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளாதாகத் தோன்றுகிறது. இப்போது கூட கோணங்கி என் அருகில் அமர்ந்து, "டேய் தம்பி.. என்ன எழுதிகிட்டு இருக்க.. " என அன்பு சூழ்ந்த வார்த்தைகளை என் மீது தெளிப்பதாக உணர்கிறேன்.
உண்மையில் கோணங்கி எழுதிக் கொண்டிருப்பது மட்டுமல்ல அவரும் கூட மாயங்களின் அரசன் தான். அட்சய பாத்திரம் போல அவருடனான அனுபவங்கள் அள்ள அள்ள வெவ்வேறு பரிணாமங்களில் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன.
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக