காத்திருத்தலின் வலி
பொம்மி. அவனுக்கு அவள் வாழ்வு. அவளுக்கு அவன் உலகம். வாழ்வில் எந்த அனுபவமும் பெற்றுவிடாத குழந்தை அவள். வாழ்வின் எல்லா துயரங்களையும் சந்தித்துவிட்ட மனிதன் அவன்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கதவை திறக்கப்போகிறான். உள்ளே இவனைக் கண்டதும் பொம்மி துள்ளி குதித்து ஓடிவருவாள். இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஒரு நொடியில் மறையப்போகிறது. வார்த்தைகளில் சொல்லிவிட முடியாத தருணம் அது. சட்டென பனி மழையில் இமைகள் மட்டும் நனையும் சமயம்.
சாவியை எடுத்தான். பூட்டைத் திறக்க எத்தணித்தான். ஏனோ கதவில் இருந்து சட்டென கையை எடுத்துவிட்டான். யாரோ அவனை பின் தொடர்ந்து வந்தது இப்போதுதான் புரிந்தது. சட்டென திரும்ப கூடாது என நினைத்தான். மெல்ல பின் வாங்குகிறான். கண்களை மூடி நீண்ட பெருமூச்சு விடுகிறான்.
யாரோ அவன் அனுமதியின்றி அவன் தோலில் கைவைத்து அவனை முன்னகர்த்த முயல்கிறார்கள். அந்த அழுத்தம் அவனின் இதயத்தை இரட்டிப்பாய் துடிக்கச் செய்தது. அதோடு நிற்கவில்லை. அவன் காதில் ஏதோ முணுமுணுப்பு கேட்கிறது. தன் பலம் கொண்டு பின்வாங்கினான். அது விடவில்லை. அவனும் விட நினைக்கவில்லை. மாடியில் இருந்து கீழே வேகமாக இறங்கினான். மோட்டாரில் ஏறினான். அப்போதும் அது அவனை விடவில்லை. தொடர்ந்தது. மோட்டார் புறப்பட்டது. மனதில் பல குழப்பங்கள் சூழந்தன.
அருகில் இருக்கும் மருத்துவமனையைக் கண்டான். மோட்டார் அங்கே செலுத்தினான்.
பலர் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தார்கள். மெல்ல முன்னகர்ந்து தான் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதைச் சொல்லி தன்னை பரிசோதிக்க வேண்டும் என்றான். அருகில் நின்றவர்கள் பின்னகர்ந்தார்கள். 'குரோனா வைரஸ்' பரிசோதனைக் கூடத்திற்கு அவனை அழைத்துச் செல்கிறார்கள்.
இதுவரை அவனை பின் தொடர்ந்த யாரோ தன் இயலாமையை நினைத்து அவன் காதில் அழுவது கேட்கிறது. அவனுக்கு மட்டும் கேட்கிறது.
- தயாஜி
0 comments:
கருத்துரையிடுக