பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 04, 2019

கதை_வாசிப்பு_2019 – 3 'காலத்தின் மறுபக்கம்'




கதை_வாசிப்பு_2019 – 3
கதைகாலத்தின் மறுபக்கம்
எழுத்துவைதீஸ்வரன்
இதழ்தீராநதி

திகதிஆகஸ்ட் 2019*

ஆகஸ்ட் மாத தீராநதியில் ‘காலத்தின் மறுபக்கம்..’ சிறுகதையை வாசித்தேன். வைதீஸ்வரன் எழுதியிருந்தார்.
கதைகளின் ஆண்பால் பெண்பால் இருக்கிறதா என்கிற ஐயத்தை இச்சிறுகதை தூண்டிவிட்டது. சிறுகதையை வாசிக்கையில் ஆண்பாலுக்கு நடப்பது போலவே தோன்றியது. இடையில் ஏற்படும் உரையாடல்வழி கதைமாந்தர் தாத்தா அல்ல பாட்டி என தெரிய வந்தது.
சொல்லபோனால் இருவிடங்களில் வந்துப்போகும் உரையாடலைத் தவிர கதை முழுவதும் தாத்தாவின் கதை சொல்லலாகவே நகர்ந்துச் செல்கிறது.
ஒருவரின் எழுபது வயது பிறந்தநாளில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் தனிமையை குறித்த மனவோட்டம்தான் கதை. பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இன்றுகூட தன்னிடம் இல்லையே என்கிற வருத்தம் இருக்கிறது. தன் பிறந்த நாள் குறித்த ஞாபகம் கூட இல்லாத உறவுகள் குறித்து மேலும் அவரது மனம் சங்கப்பட்டுகிறது.
‘எல்லோரும் எங்கோ தூரத்து மூலையில் ஒளிந்துக்கொண்டு நான் உயிரோடிருப்பதை வேடிக்கைப்பார்க்கிறார்கள். இல்லை இன்னும் உயிரோடு இருக்கிறேனா என்று கவலையுடன் பார்க்கிறார்கள். பார்க்காமலும் இருக்க பழைகிக்கொண்டுவிட்டார்கள்.’ என கதாப்பாத்திரம் நினைத்துக்கொள்ளும் போது, வாசிப்பவர் மனதிலும் ஒரு நெருடல் தோன்றத்தான் செய்கிறது. நமக்கு தெரிந்த வயோதிகர்ளை கடைசியாக எப்போது சந்தித்திருக்கிறோம். எந்த விழாக்காலத்திலாவது அவர்களுடன் சென்றதுண்டா..? குறைந்தது அவர்களின் பிறந்தநாளாவது தெரிந்துக் வைத்திருக்கிறோமா? போன்ற பல கேள்விகள் மனதில் தோன்றவே செய்கிறது.
அன்றைய தினம் எப்போதும் போலத்தான் அவருக்கான கடமைகளுடன் தொடர்கிறது. ஆனால், காலை உணவிற்கு வீட்டிற்கு வந்துச்சுற்றும் குருவிகள் கிளிகள் மைனாக்கள் அவர் கண்களுக்கு தன் பேரப்பிள்ளைகளாகவே தெரிகிறார்கள். திடீரென வந்து காலகளை உரசும் பூனைக்குட்டியும் அவருக்கு ஒருவகையில் நிறைவை தருகின்றது. சற்று முன் தான் உணர்ந்த தனிமையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறார்.
அப்போது பக்கத்துவீட்டுச்சுவர் தாண்டி பந்து வந்து விழுகிறது. அவருக்கு பழக்கமான பந்துதான் அது என்கிறார். சுவருக்கு அந்த பக்கத்தில் இருந்து சிறுவன் ஒருவனின் குரல், பந்தை எடுத்துப்போடும் படி கேட்டு அவரை விளையாட அழைக்கிறது. வயதான காலத்தில் அதெல்லாம் முடியாது என இவர் சொல்லவும், மீண்டும் சுவருக்கு அப்பாலிருந்து குரல் கேட்கிறது.
இன்றுதானே பிறந்திருக்கிறாய் எப்படி வயதாகும் என்கிறது அந்த குரல்.
சிறுவனிடம் எப்போதோ தனது பிறந்த நாளை சொன்னது நினைவுக்கு வருகிறது. குழந்தைகள் எதையும் மறப்பதில்லை யாரையும் வெறுப்பதில்லை. என நினைக்கிறார்.
அத்தோடு சிறுகதையும் நிறைவடைந்திருக்கவேண்டும். கதையில் அவர் சொல்லவந்ததும் அதுவாகத்தான் இருக்கிறது. குழந்தைகள் பெரியவர்களாகும் போது விட்டுப்போவது என்னவெல்லாம் என வாசகர்களை மீள்பரிசோதனை செய்வதற்கு இவ்விடம் போதுமானது ஆனால் அவர் அப்படி கதையை முடிக்கவில்லை.
தேவையில்லாமல் அடுத்து நகர்கிறார். சுவருக்கு பின்னால் இருந்த சிறுவனை போல யாரும் யாரையும் மறப்பதும் இல்லை வெறுப்பதும் இல்லை . தன் பிம்பத்தின் மீதுதான் குறை. மறைப்பது தன் மனச்சுவர்தானா என கேள்வியோடு முடிக்கிறார். நன்றாய் முடிந்திருக்கவேண்டிய கதையில் ஏதோ திணிக்க நினைத்து தவறவிட்டுள்ளார். கடைசி பத்தி கதை நமக்கு சொல்லிவந்த எல்லாவற்றையும் இல்லாமல் ஆக்கிவிட்டது. அதோடு நிற்காமல் வேறு ஒன்றை சொல்ல நினைத்து நம்மை குழப்பிவிட்டது.
இன்னொன்று கதை முழுக்க ஆணுக்கு நடப்பது போலவே இருக்கிறது. உண்மையில் தாத்தாவிற்கான கதையில் தேவையில்லாமல் பாட்டையை புகுத்திவிட்டார். அப்படி இக்கதைக்கு பாட்டிதான் அவசியம் என்றிருந்தால் கதைப்போக்கை இன்னும் அதிக நுணுக்கத்துடன் நகர்த்தியிருக்கவேண்டும்.
வெறுமே அவள் பெண் என சொல்வது கதைகளுக்கு அழகல்ல, கதைப்போக்கில் வாசகர்களுக்கு அது பெண் என தெரியும்படி அதிக சிரத்தை எடுத்து எழுத வேண்டும். சொல்லப்போனால், சிறுவர்கள் பாட்டியை பந்துவிளையாட அழைப்பைவிட தாத்தாக்களைத்தான் பந்து விளையாட அழைக்க விரும்புவார்கள்.
- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்