பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 16, 2019

அப்பா கண்டிப்பானவர்தான் ஆனாலும்…

இன்னும் அந்த சாலையில் பரபரப்பு ஆரம்பமாகவில்லை. தனக்கே உரித்தான இயல்பில் அது  அழகாகத் தெரிந்தது. காலை பனியில் அரைகுறை குளியல் போட்ட புற்களில் சில மட்டும்தான் தலையைத் துவட்டி நிமிர்ந்து நின்றன . சில ஏனோ பனித்துளி சுமந்த தலைகணத்தில் நிமிர்ந்துப்பார்க்க முடியாமல் தலைகுனிந்துக் கிடந்தன. தலைக்கணம் பனியால் சேர்ந்திருந்தாலும் அது பாராங்கல்லால் சேர்ந்திருந்தாலும் அதனை சுமந்துக் கொண்டு எப்படி நிமிர்ந்து நிற்க முடியும்.
சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக விடியலை கொண்டுவந்துக் கொண்டிருந்தது. சாலையின் இரு பக்கத்திலும் மனிதர்கள் நடை பயிற்சியும் மெது ஓட்டப்பயிற்சியும் செய்துக் கொண்டிருந்தார்கள். இவர்களை மனிதர்கள் என்றால் மனிதர்கள் என சொல்ல முடியாவதவர்களும் இருக்கிறார்களா என்ன?. இருக்கிறார்கள்தான். வாரத்தில் ஆறு நாட்களிலும் பொருளாதார சுழற்சியில் சூழ்ச்சியில் சிக்கிக்கொண்டு இயந்தரங்களாக மாறிப்போயிருப்பவர்களை எப்படி மனிதர்கள் என்பது. சாவி கொடுத்த இயந்திரம் போல காலை அலாரத்தில் எழுந்து, அடுத்தடுத்த கடமைகளை குறிப்பிட்ட நேரத்தில் செய்து சாலை நெரிசலில் மற்றவரை திட்டியும் மற்றவர்களிடம் இருந்து திட்டு வாங்கியும் அலுவலகம் சென்றுச் சேர்ந்து சிரிப்பதற்குக்குக் கூட அச்சம் கொண்டு கொடுக்கப்பட்ட வேலையையும் கொடுத்துவிட்ட வேலையையும் சரிப்பார்த்து மீண்டும் மீண்டும் அதனைச் செய்து, மாலை மணி ஐந்திற்கு வேலை முடிந்தாலும் அதற்கு அடுத்ததாய் இன்னும் சில மணி நேரங்களில் முயற்சித்து ஓவர் டைமை வாங்கியோ அல்லது அலுவலக வேலை முடிந்து பகுதி நேர வேலையையோ செய்து வீட்டிற்கு செல்லும் வழியில் மீண்டும் ஒரு வாகன நெரிசலில் சிக்கி காலையில் பார்த்த அரைகுறை சூரியனைக் கூட மீண்டும் அரைகுறையாக பார்த்துவிட்டு  வீட்டிற்கு வரவும் அசதியில் கொஞ்ச நேரம் அமர்ந்து பின்னர் காலை அலாரம் வைத்து தூங்கிவிடும் இயந்திர செயல்பாடுகளில் நாம் மனிதர்கள் என்பதை மறந்துவிட்டோம் சில தோலைத்து விட்டோம்.
என் குடும்பம் நன்றாக இருக்கா நான் இப்படியாக இருக்க வேண்டியுள்ளது என சொல்லிக்கொண்டு முகம் பார்க்கக்கூட நேரமில்லாமலும் அமர்ந்து பேசக்கூட வாய்ப்பு இல்லாமலும் அன்பு என்னும் பதம் நமது மூளை முழுக்கவும் பொருளியல் சிந்தனையாகவே மாறிவிட்டிருக்கிறது. விளையாட்டு பொம்மைகள் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் என நம்புகிறொம். தொலைக்காட்சி நாடகங்கள் பெரியவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என நம்புகிறோம். கைச்செலவுக்கு பணம் கொடுப்பது இளைஞர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என சொல்கிறோம். ஆனால் அதுவெல்லாம் மாயை என்பது கொடுக்கும் நமக்கும் தெரியும் பெற்றுக்கொள்ளும் நபர்க்கும் தெரியும்.
எல்லோருக்கும் இப்படி யோசிப்பதற்கான வாய்ப்புகளைக்கூட பொருளாதார பந்தைய ஓட்டத்தில் கிடைப்பதில்லை. ஆனால் மணிக்கு அது கிடைத்தது.
துரித உணவுகளால துருத்திக் கொண்டு வெளி வந்திருக்கும் இளந்தொந்தியைக் குறைப்பதற்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் இந்த சாலையில் மெது ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கிறார். வாரத்தின் ஆறு நாட்களில் சேமித்து வைத்த செரிமாணம் ஆகாத கொழுப்புகள் ஞாயிறுகளின் சில மணி நேர மெது ஓட்டத்திலா குறைந்துவிடப்போகிறது.  குறையலாம குறையாமலும் போகாலாம். ஆனால் மணி இப்படி ஞாயிறுகளில் ஓடுவது தொந்தியைக் குறைக்க மட்டுமல்ல, தனக்குள்ளே கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வியில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள. சிந்திக்க முடியாத இயந்திரம் போலவே இருந்துவிடுவதில் நமக்கு லாபம் உண்டுதான். யாருக்கும் உதவிட வேண்டாம் அதில் நமக்கு லாபம் இல்லை, உறவுகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டாம் அதில் நமக்கு சம்பளம் கிடைப்பதில்லை . இப்படியாக பொருள் ஈட்ட முடியாத எதனையுமே செய்யவோ யோசிக்கவோ வேண்டாம்.
மெது ஓட்டத்தில் இருந்த மணி சற்று ஓய்வெடுக்க அங்குதான் அந்த குழந்தையைக் கண்டான். ஏதேதோ சித்தனையில் ஓடி ஓய்வெடுக்க அமர்ந்தவன் பக்கத்தில் யாரும் இருக்ககிறார்களா என கவனிக்கவில்லை. இன்றாவது வயிறு குறைந்திருக்கிறதா என வயிற்றை தடவிக்கொண்டிந்தான். “என்ன அங்கிள் வயித்துல பேபி இருக்கா..?” எனும் குரல் மணியைத் திடுக்கிட வைத்தது. 
கடுப்புடன்  யாரென திரும்பினான். அங்கு ஒரு அழகான குழந்தை அமர்ந்திருந்தாள். பக்கத்தில் பள்ளிப்பை, கையில் புத்தகம் , அருகில் வண்ண பென்சில்கள். குழந்தை இன்னும் மணியின் முகத்தை பார்க்கவில்லை. ஏனெனில் இன்னமும் மணியில் வயிற்றை தடவுவதை நிறுத்தவில்லை. சட்டென கைகளை அசைத்து எதையோ விரட்டுவது போல பாவணை செய்தான்.
“ஹாய் பாப்பா.. இங்க என்ன செய்றிங்க… ஆமா இங்க யார் கூட வந்திருக்கிங்க…?”
என மணி கேட்கவும் மணியின் வயிற்றில் இருந்த தனது பார்வை அவனது முகத்தில் சில வினாடிகள் வைத்து பின்னர் எதையும் பேசாமல் மீண்டும் தனது வண்ணம் தீட்டும் வேலையில் அக்குழந்தை ஈடுபட்டது. மணிக்கு இப்போது ஒரு சந்தேகம் எழுந்தது , உண்மையில் வயிற்றைக் குறித்து பேசியது இந்த குழந்தைதானா இல்லை மனப்பிரம்மையா? கேட்டது என்னவோ குழந்தையின் குரல்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த குழந்தையோ எதுவுமே நடக்காதது போல அதன் வன்ணம் தீட்டும் வேலையைச் செய்கிறது  சுற்றி முற்றிப் பார்த்தான்.  கண்களுக்கு தெரிந்த தூரத்தில் அந்த குரலுக்கு ஏற்ற எந்த முகமும் தெரியவில்லை. ஆனால் மணிக்கு கோவம் வராமல் சிர்ப்புத்தான் வந்துக் கொண்டிருக்கிறது.
அந்நேரம் பார்த்து காற்று சற்றே பலம் கொண்டு வீசுகிறது. அக்குழந்தை கையில் இருந்த புத்தகம் தவறி கீழே விழுகிறது. அதனுள் இருந்த ஏதோ தாள் காற்றில் பறக்கத்தொடங்கியது. பதற்றமடைந்த குழந்தை அழ ஆரம்பித்தது. மணி கீழே விழுந்த புத்தகத்தை எழுத்து குழந்தையிடம் கொடுத்துவிட்டு அவள் அருகில் இருந்த வண்ண பென்சில்களை எடுத்து அதற்கேற்ற பெட்டியில் வைத்துவிட்டு ,
“அழாத பாப்பா.. அங்கிள் போய் அந்த தாளை கொண்டு  வரேன்… இங்கயே இருக்கனும் சரியா…”
என சொல்லிவிட்டு, இன்னமும் காற்றில் வலதும் இடதும் என ஏறி இறங்கி பறந்துக் கொண்டிருக்கும் தாளை பிடிக்க ஓடினான். ஆச்சர்யம்தான் சில மீட்டர் தூரம் வரை அந்த தாள் காற்றில் மிதந்துக் கொண்டே போகிறது. ஒரு வழியாக எம்பி குதித்து அந்த தாளைக் கைப்பற்றினான். பெரிதாக எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் மீண்டும் நாற்காலிக்கு வந்துச்சேர்ந்தான். அங்கு அந்த குழந்தை இல்லை.
அதற்குள் அக்குழந்தை எங்கு சென்றிருக்கும் என முடிந்த தூரம் வரை எட்டிப்பார்த்தான். கையில் அக்குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய தாளை சுருட்டிக் கொண்டு வேகமாக நடக்கலானான். இங்குதான் எங்காகினும் சென்றிருக்கும் அல்லது மெது ஓட்டம் சென்றிருந்த பொற்றோர் திரும்ப வந்து அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் ஏன் இத்தனை அவசரம். பறந்த நாளை பிடித்து வர ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்கவில்லை. பாவம் அந்த குழந்தை அழுதுக் கொண்டே சென்றிருக்குமே என தனக்குத்தானே பேசிக்கொண்டு பார்வையை மேலும் அகலப்படுத்தினான்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த குழந்தையும் படவில்லை. மீண்டும் முன்பு அமர்ந்திருந்த நாற்காலிக்கே வந்து அமர்ந்தான். கொஞ்ச நேரம் இங்கு அமர்ந்திருக்கலாம். ஒருவேளை குழந்தை இங்கு வந்தாலும் வரலாம்.
அமர்ந்தவன் கைகளில் சுருட்டிப் பிடித்திருந்த தாளை திறக்கலானான். சுருட்டிய தாளை கொஞ்சம் கொஞ்சமாக திறக்கலானான். அப்படி திறக்கையில் முதலில் அவன் கண்களில் பட்ட வாக்கியம் அவனை ஸ்தம்பிக்க வைத்தது.
‘அப்பா கண்டிப்பானவர்…’
வாக்கியத்தைப் படித்ததும் மேற்கொண்டு திறந்துப்படிக்க மனம் வரவில்லை. அந்த குழந்தையின் மனம் எப்படி பாதிக்கப்பட்டிருக்கும் என யோசிக்கலானான். ஆமாம், ஏன் எல்லா அப்பாக்களும் கண்டிப்பானவர்களாக இருக்கிறார்கள் என தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். அவனும் அந்த அனுபவம் இருந்தது. இன்னும் அந்த வலியை அவனது மனம் சுமந்துக் கொண்டுதான் இருக்கிறது. மணியின் தந்தைக்கும் ஏனோ மணியை பிடிக்கவில்லையோ என அப்போதெல்லாம் நினைத்து அழுததும் உண்டு. மற்ற நண்பர்களுக்கு கிடைத்திருக்கும் அப்பா போல தனக்கு இல்லாததது அவனது பால்ய காலத்து ஏக்கம் இன்னமும் அதற்கு ஒரு பதில் கிடைக்கவில்லை.
ஒரு முறை பள்ளிக்கு தேர்வு முடிவுகளை வாங்குவதற்கு பெற்றோர்கள் வந்திருந்தார்கள். மணியின் வகுப்பில் பெற்றோர்க்கான நாற்காலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. வகுப்பு ஆசிரியர் அமர்ந்து வரும் பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளின் தேர்ச்சி குறித்தும் மேற்கொண்டு எடுக்கவேண்டிய முயற்சிகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு மாணவனின் பொற்றோரும் மிடுக்கா உடையணிந்தும் அதில் சிலர் நுணி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்களாகவும் இருந்தார்கள். சமயங்களில் வகுப்பு ஆசிரியர்கூட ஆங்கிலத்தில் திக்கி திணறுவது போல தெரிந்ததும் மாணவர்கள் தங்களுக்குள்ளாக ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.
கொஞ்ச நேரத்தில் வகுப்பில் சலசலப்பு. யாரோ சாயம் போன சட்டையுடன் த்லையில் தலைக்கவசத்துடன் அரைகுறை தாடியுடன் வாசலில் வந்து நிற்கிறார். வகுப்பு மாணவர்கள் ஆளுக்கு ஆள் ஏதேதோ பேசி சிரிக்கலானார்கள். மணி செய்வதறியாது அப்படியே முன்னால் இருந்த மாணவனின் முதுகில் தன்னை  மறைத்துக் கொண்டான்.
ஆசிரியரும் அமர்ந்த இடத்தில் இருந்து யார் நீங்க என பார்வையில் கேட்க, “வணக்கம் டீச்சர் நான் மணியோட அப்பா.. ரிப்போட் கார் எடுக்க வந்திருக்கேன்” என்றார். அவரது உடையினை மீண்டும் ஒரு முறை முழுதாகப் பார்த்துவிட்டு உள்ளே வரும்படி அழைத்து, மணியை கவனித்தார். மணி தன்னை மறைத்துக் கொண்டது ஆசிரியர்க்கு தெரிந்தது. தெரியாமல் இருக்குமா ? இந்த நான்கு ஆண்டுகளில் அவர்தான் இந்த வகுப்பிற்கு வகுப்பாசிரியராக இருக்கிறார்.
மற்ற பெற்றோர்களை சந்திக்கும் பொழுது அந்தந்த மாணவனையும் ஒன்றாக அமரவைத்து பேசிய ஆசிரியர் இம்முறை அப்படி செய்யவில்லை. மணியின் அப்பா பேசுகையில் ஒரு வகை பதற்றம் தெரிந்தது. இத்தனைக்கும் அவருக்கு தெரிந்த ஒரே மொழி தமிழ் மொழி அதிலும் அவர் உளறிக்கொண்டிருந்தார். ஆசிரியரும் கொஞ்சம் நேரம் எடுத்துத்தான் அவரிடம் பேசினார். கடைசியில் புறப்படும் போது,
“டீச்சர் என் பிள்ளையை நீங்க கண்ணைத்தவிர வேற எங்க வேணும்னாலும் அடிங்க.. அவன் படிச்சி நல்லா வந்தா அதுவே எனக்கு போதும்”
என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டார். வகுப்பு மாணவர்கள் அனைவர் காதிலும் அது விழுந்தது. மணியை பரிதாபமாக அவர்கள் பார்க்கலானார்கள். மணிக்கு அது இன்னும் அவமானத்தைக் கொடுத்தது. அப்பாவை ஏன் பள்ளியில் கூப்பிடுகிறார்கள் நம்மை அவமானம் படுத்தத்தானோ என பள்ளியை நொந்துக் கொண்டான். பக்கத்தில் இருந்த நண்பன் மணியின் காதருகில் வந்து,
“என்னடா உங்கப்பா இவ்வளோ கண்டிப்பாக இருக்காரு… ஏற்கனவே இந்த டீச்சருக்கு அடிக்கவே தெரியாது இதுல இதுவேறயா… எங்க அப்பால்லாம் என் மேல அடி விழுந்ததுன்னு சொன்னாலே ஸ்கூலு ரெண்டாக்கிடுவாரு தெரியுமா..?” என்றான்
மணியின் அப்பா வகுப்பை விட்டு வெளியேறினார். வகுப்பு ஆசிரியர்  மணியை அவரிடம் அழைத்தார் . மணியும் வகுப்பில் அனைவரும் அவனை கேலி செய்வதாக கற்பனை செய்துக் கொண்டு மெல்ல மெல்ல ஆசிரியரிடம் வந்து நின்றான்.
“மணி உங்க அப்பாவை உனக்கு பிடிக்காதா..?”
என கேட்டதும் மணிக்கு அதிர்ச்சியானது . இதெப்படி ஆசிரியைக்கு தெரியும் என குழப்பமானான். அப்பாதான் எதையாவது சொல்லியிருக்கவேண்டும் என கண்கள் பிதுங்க ஆசிரியையே பார்த்தான்.
“மணி, எந்த அப்பா அம்மாவும் பிள்ளைகள் மீது வெறுப்பு காட்டமாட்டாங்க… அக்கறையாக இருப்பாங்க.. ஆனா அந்த அக்கறை ஆரம்பத்துல கண்டிப்பாகவும் கோவமாகவும் வெறுப்பாகவும் நமக்கு தோனும்… நாளாக நாளாக அது நமக்கு புரியும்… நீ நல்லா படிக்கனும்னுதான் அப்பா எதிர்ப்பார்க்கறாரு..”
ஆனால் மணியின் காதுகளில் எதுவும் கேட்கவில்லை. அவனுக்கு அழுகை மட்டுமே  வந்துக் கொண்டிருந்தது.
சமயங்களில் வயதும் ஒரு காரணமாக இருக்கும் என புரிந்துக் கொண்ட ஆசிரியை மணிக்கு தனது கைப்பையில் இருந்து மிட்டாய் ஒன்றை எடுத்துக் கொடுத்தார். அழுகையைத் துடைத்துக் கொண்ட மணி
“நன்றி டீச்சர்”
எனச் சொல்லிக்கொண்டு மிட்டாயை அப்போதே பிரித்து வாயில் போட்டுக்கொண்டு அதனை மென்றுக்கொண்டே மிடுக்காக நடந்து தனது நாற்காலியில் அமர்ந்தான்.
தனது குழந்தை அப்படி இல்லையே இப்படி இல்லையே என குறைபடும் பெற்றோர் போல, சில பிள்ளைகளும் தனது பெற்றோர் அப்படி இல்லையே இப்படி இல்லையே என மனதில் அவமானத்தை விதைத்துக் கொள்கிறார்கள். அடுத்த வாரம் இதையொட்டிய ஒரு தலைப்பில் மாணவர்களுக்கு பாடம் போதிக்க வேண்டும் என முடிவெடுத்த ஆசிரியை அதனை தனது குறிப்பு புத்தகத்தில் குறித்துக் கொண்டார். அந்த குறிப்பு புத்தகத்தில் இவ்வாறு பேச வேண்டிய பல தலைப்புகளை எழுதி வைத்திருக்கிறார். ஆனால் பாடதிட்டத்தை போதிக்கவே நேரம் சரியாக இருக்கும் பட்சத்தில் மேற்கொண்டு பேசுவதற்கு என்றாவது நேரம் கிடைக்காமலா போய்விடும் என்ற நம்பிக்கையில் அந்த குறிப்பு புத்தகத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறார்.
மணிக்கு அவனது அப்பா மற்றவர் போல நேர்த்தியாக தலை சீவி, விலை அதிகம் உள்ள காலணியை அணிந்துக் கொண்டு கோர்ட் சூட் போட்டுக்கொண்டு தன்னுடன் வரவேண்டும் என்ற ஆசை இருந்தது.  தனது சுற்றத்தையும் பள்ளியில் இதர சில மாணவர்களின் பெற்றோரையும் பார்த்ததாலோ அல்லது அப்படியானவர்கள்தான் நல்லவர்கள் என்கிற சினிமா ஏற்படுத்திய பிம்பத்தாலோ இப்படியான ஆசை மணியின் மணதின் வேரூன்றியிருக்கலாம். தினமும் இரவு வரை வேலை செய்து வியர்த்துப்போய் வீடு வரும் அப்பாவை நெருங்கவும் அவன் விரும்பவில்லை.
ஒரு முறை பள்ளியில் கட்டுரை எழுத வேண்டியிருந்தது. பல மாணவர்களுக்கு அந்த தலைப்பு சுவாரஷ்யத்தைக் கொடுத்தது. மணிக்கு அது எரிச்சலைக் கொடுத்தது. ‘என் தந்தை’ என்ற தலைப்பில் தந்தையைக் குறித்தும் அவரது வேலையைக் குறித்தும் அவரது குணநலன் குறித்து எழுத வேண்டும்.
இது நாள் வரை தன் தந்தை குறித்தும் அவரது வேலையைக் குறித்தும் யேர் கேட்டாலும் பல வித பொய்களைச் சொல்லி வந்தவன் இப்போது எந்த பொய்யில் எழுதலாம் என குழம்பினான்.  இந்த கட்டுரையை மாணவர்கள் வகுப்பின் முன் நின்று வாசிக்க வேண்டும். அப்படி மணி வாசிக்கும் பொழுது, என்ன தொழிலை அப்பா செய்வதகாச் சொன்னாலும் அது ஆளுக்கு ஆள் குழப்பத்தை கொடுத்து , இது நாள் வரை சொல்லி வந்த பொய் உடைந்துவிடும். 
துப்புரவு வேலை செய்யும் தன் அப்பாவைப்பற்றி எப்படி எழுதுவது என பென்சிலை கையில் பிடித்து யோசித்துக் கொண்டே இருந்த மணியை கவனித்த வகுப்பு ஆசிரியர், இந்த சமயத்தை பயன்படுத்த நினைத்தார். மணியை வகுப்பின் முன் வரச்சொல்லி அழைத்தார். கட்டுரை எழுதுவதற்கு முன்னதாக சில மாணவர்கள் வகுப்பின் முன் வந்து நின்று அவரரவர் தந்தையைக் குறித்து பேசச்சொன்னார். இருந்தும் முதல் பெயரே மணியின் பெயர் அழைக்கப்பட்டதால் கூனிக்குறுகி வகுப்பின் முன் நின்று தந்தையைக் குறித்து பேச ஆரம்பித்தான், வகுப்பு யாரோ “உங்கப்பா என்ன வேலை செய்யராரு..?” என கேட்டதுதான் தாமதம்.
மணி தேம்பித்தேம்பி  அழ ஆரம்பித்தான். இருந்தும் ஆசிரியரும் அதே கேள்வியைக் கேட்கலானார், இப்போது மணிக்கு வேறு வழி இல்லை.
“எங்கப்பா… எங்கப்பா… ம்ம்ம்ம்… அள்ளூர் கூட்டற வேலை செய்யராரு”
என சொல்லிவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தான். வகுப்பு மாணவர்களில் சிலர்  முகம் சுழித்து பக்கத்து நண்பர்களிடம் எதையோ பேசி வாயை மூடிக்கொண்டு சிரிக்கலானார்கள். ஆசிரியை எழுந்தார். மணியின் அருகில் வந்து நின்றார். மணியை தலை முடியைக் கோதிவிட்டு. மணியை சமாதானம் செய்தார்.
“பசங்களா.... மணியோட அப்பா செய்யற வேலை அள்ளூர் கூட்டர வேலை இல்லை. அது துப்புரவு பணி. ஆசிரியர்கள் எப்படி உங்களுக்கு பாடம் போதிக்கிறாங்களோ… காவல் துறையினர் எப்படி கெட்டவங்க கிட்ட இருந்து நம்மை காப்பாத்தறாங்களோ அந்த மாதிரிதான்… துப்புரவு பணி செய்யறவங்க.. நமக்கு நோய் ஏற்படாம இருக்க நம்மோட சுற்றுச்சூழலை சுத்தமா வச்சிக்கறாங்க.. எந்த தொழிலும் குறைந்தது அல்ல… பொய் சொல்லாத , அடுத்தவர் சொத்தை அபகரிக்காத , மற்றவரை ஏமாற்றாத எந்த உழைப்பும் நல்ல உழைப்புதான்… பசங்களா நாம செய் தொழில் பழிக்கக்கூடாது…. எங்க சொல்லுங்க…”
என்றதும் வகுப்பு மாணவர்கள் ஒன்றாக முழங்கினர்,
“செய் தொழில் பழிக்கக்கூடாது”
அன்று பள்ளி  முடிந்ததும் தந்தையைக் குறித்து மணி அவனுக்குள்ளாக ஏற்படுத்தி இருந்த மன பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக உடைய ஆரம்பித்தது. யோசிக்கலானான். இது நாள் வரை ஒருமுறை கூட மணியின் தேர்வு காலங்களில் அப்பாதான் அவனை பள்ளிக்கூடத்திற்கு கூட்டிக் கொண்டு வருவார். பல மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை. பள்ளிக்கூட தேவைக்காகவும் படிப்பின் தேவைக்காகவும் மணி அம்மாவிடம் என்ன கேட்டாலும் மறுநாளே அப்பா அதனை ஏற்பாடு செய்து கொடுப்பார். தன்னிடம் இருக்கும் ஆடைகள் நைந்திப்போயிருந்தாலும் , அம்மா என்னதான் சொன்னாலும் மணிக்காக செலவு செய்திருக்கிறாரே தவிர அவரின் சொந்த செலவுக்கு அவர் செலவு செய்ததில்லை. அன்று அவருக்கு உடல் நலமில்லை. அம்மாவும் வேலைக்கு விடுமுறை எடுக்க சொல்லிக் கேட்டார். அதற்கு அப்பா சொன்னார்,
“ஒரு நாள் உடம்பு சொல்ற பேச்சை நாம கேட்டுட்டு வீட்டுல இருந்தா அப்பறம் அது அடிக்கடி நம்ம கிட்ட லீவு போட சொல்லிடும்… இன்னும் கொஞ்ச நாள்தானே மணி படிச்சி பெரிய ஆளா ஆனப்பிறகு ஓய்வு எடுத்தக்கறேன்.”
ஆமாம், அப்பா கண்டிப்பாக நடந்துக்கொண்டவராக இருந்தாலும், அப்பா என்கிற பொறுப்பில் இருந்து அவர் விலகியதே கிடையாது. தான் என்ன வேலை செய்தாலும் தன் மகன் நாளை நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருந்த அப்பாவை தவறாக புரிந்துக் கொண்டோமே என மணி வருந்தினான். அதன் பிறகு மணியின் அப்பாதான் மணியின் உலகமானார்.
நினைவுகளில் மணி மிதந்துக் கொண்டிருந்த சமயத்தில் அந்த குழந்தை அங்கு வந்து நின்றது.
“அங்கிள் என்னோட தாள் கிடைச்சதா…?”
“ஹை… பாப்பா வந்துட்டிங்களா.. இந்தாங்க.. உங்க தாளு ஆமா அதில் என்ன எழுதிருக்குன்னு கொஞ்சம் பாக்கவா…”
என மணி கேட்கவும், அந்த குழந்தை மணியிடம் இருந்து வாங்கிய தாளில் சுருக்கத்தை திறந்தது, அதில் ‘என் அப்பா கண்டிப்பானவர் ஆனால் அவர் என்னோட சூப்பர் மேன் என இருந்தது’
மணி சிரித்துக் கொண்டே “ஆமா பாப்பா… அப்பாக்கள் எல்லோரும் நமக்கு கிடைச்சிருக்கற சூப்பர்மேன்கள் தான்…”
என சிரித்துக்கொண்டே அழைப்பு வந்த கைபேசியை எடுத்தான்,
மறுமுனையில் “ ஐயா மணியாகுது இன்னும் நீ வீட்டுக்கு வரலை… எங்கய்யா இருக்கா… ” என்று அப்பா கேட்கவும்.
“தோ வந்துகிட்டே இருக்கேன் பா…” என்றான். பிறகு அப்பாவின் பெயரை கைபேசியில் சூப்பர் மேன் என மாற்றிக்கொண்டான் அந்த குழந்தைப் பார்க்க, அக்குழந்தை அங்கில்லை. தனது பழைய நினைவுகளை மீட்டுணர வாய்ப்புக்கொடுத்த அந்த குழந்தைக்கு ஒரு நன்றி சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. இந்த கதை தனது சூப்பர் மேனிடம் சொல்லவேண்டும் என்று யோசித்தவாரே வீட்டிற்கு நடக்கலானான்.
-தயாஜி
(2018-ல் மின்னல் பண்பலைக்கு எழுதிய தந்தையர் தின சிறப்புச் சிறுகதை)

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்