வார்த்தைகளுடன் வாக்குவாதம்; வார்த்தையாகும் முயற்சி
இன்னமும் நான்
வார்த்தைகளை பிடித்து
தொங்கிக் கொண்டிருக்கவும்
வார்த்தைகள் எல்லாம்
என
தேங்கிக் கொண்டிருக்கவும்
என்ன
ஆதாரக் காரணம்
இருக்க முடியும்
இயலாமல்
அழும் போதும்
இயன்றவரை
அடக்கும் போதும்
வார்த்தைகளே முன்நிற்கின்றன
மூக்கின் கீழிருந்து
முன்னேருகின்றன
அவை எனக்கு
காவலா
நான் அவைக்கு
அடிமையா
வார்த்தைகள்
வாயினையும்
நாக்கினையும்
எச்சிலையும்
பல் இடுக்குகளையும்
பயன்படுத்தி பரவசமாகின்றனவா
என்னை பயன்படத்துகின்றனவா
எப்போது தீரும்
எனக்கும்
வார்த்தைகளுக்கு
மூண்டிருக்கும்
யுத்தம்
“போடா பொட்டை”
“நீயெல்லாம் மனுசனா”
“பொம்பள பொருக்கி”
“நாயே உனக்கு நல்ல சாவே வராது”
“பார்க்கறேன் நீ எப்படி வாழ்றேன்னு”
காதின் கதவு சாத்தியபடியால்
வாயின் வாசலில் வந்து
அனுமதிக்க சொல்லி
மறியலிட்ட வார்த்தைகளுடன்
“நன்றி அண்ணே”
“நல்லா இருப்பிங்க”
“உங்களைத்தான் எனக்கு தெரியுமே”
“நீங்க என்னோட அதிஷ்டம்”
“நல்ல நேரத்துல வந்திங்க”
காதின் கதவு திறந்திருந்தும்
வாயின் வாசலில் வந்து
அமர்ந்திருக்கும் வார்த்தைகளுடன்
பேச்சு வார்த்தை
எப்போதுதான் முடியுமோ
சொற்கிணற்றில்
தவளையாய்
தலைநிமிர்கையில்
வார்த்தைகளே
வரவேற்கின்றன
எப்படித்தான் இந்த
வார்த்தைகள்
என்னை அடையாளப்படுத்துகின்றனவோ
குழம்பிய குட்டையில்
மீன் பிடிக்கும் வார்த்தைகளுக்கு
வார்த்தைகளே
கிடைக்கின்றன மீன்களாய் - அவை வார்த்தைகள்
வடிவமற்ற
என் எழுத்துகளின்
வாசம் வீசும் வார்த்தைகள்
எதுகை உடன் மோனைகளை
எதிர்ப்பார்ப்பது இல்லை
என்
வார்த்தைகள்
ஆடையற்றவை
என்
கட்டுக்கும்
எந்த
திட்டுக்கும்
பயந்தவையல்ல
இவை போர் வீரர்கள்
நிர்வாணமேயானாலும்
நிராயுதபாணிகளல்ல
எத்தனை தூரத்தில்
எவ்வளவு துரத்தலில்
என்னை வைத்து விட்டுவந்தாலும்
எஞ்சியிருக்கும் வார்த்தைகள்
மீண்டும் மீண்டும் வார்த்தைகளையே
பிரசுரிக்கும்
எந்த புத்தகத்தை திறந்தாலும்
எந்த வார்த்தைகள் இருந்தாலும்
ஒவ்வொரு வார்த்தையும்
சங்கிலிக் கோர்வையாய்
நான் தொட
ஓரிடம் குவியும்
அதிசயம்
எனக்கும் ஆனந்தம்
அதனால்தான் என்னமோ
என் புத்தகங்கள்
இரவலை
விரும்புவதில்லை
ஏனெனில்
வார்த்தை குவிந்த
வாக்கிய அமைப்பை
படிக்கவும்
அந்த சொற்களை
ஒவ்வொன்றாக நுகரவும்
நீங்கள்
நானாக இருந்திடல் வேண்டும்
இல்லை வார்த்தைகள்
சபித்திடல் நேரும்
என் தீயென்ற வார்த்தை
தொட்டால்
சுடும்
என் நீரென்ற வார்த்தை
விரல்
நனைக்கும்
என் அழகியென்ற வார்த்தை
கண்ணை
மயக்கும்
என் காமமென்ற வார்த்தை
இரவில்
புணரும்
என் சோகமென்ற வார்த்தை
எல்லாம்
அழும்
என் காதலென்ற வார்த்தை
கணிதமற்ற
ஆழம்
எழுதவைப்பதும்
போதுமென்று
எட்டியுதைப்பதும்
நான் அல்ல
நானாக முயற்சிக்கும்
வார்த்தைகள்
வேறுவழியில்லை
வார்த்தைக்கும்
எனக்கும்
வித்தியாசம் வேண்டும்
இல்லையேல்
என் மனித தொடர்பு
தன்
கொஞ்சநஞ்ச
இருப்பையும்
மறந்திடும்
நானும் கோடான கோடி
லட்சத்தையும் தாண்டி
ஏதாவது மொழியில்
ஏதாவது ஊரில்
ஏதாவது கையில்
ஏதாவது காகிதத்தில்
ஏதாவது மையில்
ஏதாவது வாயில்
ஏதாவது பொய்யில்
ஏதாவது மெய்யில்
ஏதாவது எழுத்தில்
என்னை வைத்துவிடுவேன்
இன்னொரு வார்த்தையாய்
- தயாஜி -
0 comments:
கருத்துரையிடுக