- காணாமல் போகிறவர்கள் -
அரைமுழுக்க
ஆயிரம் புத்தகங்கள்
இருந்தாலும்
நமக்கு தேவைப்படும்
ஏதோ ஒரு
புத்தகத்தை மட்டும்
நண்பனொருவன்
எப்போதோ
இரவல் வாங்கி
காணாமல் போயிருப்பான்...
அரசியலில் இருக்கும் இலக்கியவாதியை
கண்டுகொள்ளலாம்
இலக்கியத்தில் இருக்கும் அரசியல்வாதியை
அவ்வளவு எளிதாக
அடையாளம் காண முடியாது
முதல் வகைக்கு
தன்னை வெளிகாட்டுவதுதான்
விளம்பரம்
இரண்டாம் வகைக்கு
தன்னை வெளியில் காட்டாததுதான்
வியாபாரம்
இருவருக்குமே
நாம்தான் வாடிக்கையாளர்கள்
பல சமயங்களில்
வேடிக்கையாளர்கள்...
வாழ்வதற்கான
பால பாடங்களில்
முதன்மையானது
எவ்வளவு வலித்தாலும்
கண்களைத் துடைத்துவிட்டு
எல்லா பற்களையும் காட்டி
"அப்பாவுக்கு வலிக்கல பொம்மி..."
என்றதும்
பொம்மி நம்பிவிடுவது போல
நாமுமே நம்மை
நம்பிவிட வேண்டும்
வலிக்கவில்லை என....
சரி சகாவே
நாம் தோற்றுவிட்டோம்
அவர்கள் ஜெயித்துவிட்டார்கள்
அதனால் என்ன
வா
கொஞ்ச தூரம்
நடக்கலாம்
கொஞ்ச நேரம்
ஏதாவது புத்தகத்தை வாசிக்கலாம்
முடிந்தால் கவிதை எழுதலாம்
பிறகு
அப்படியே
நிம்மதியாய்த் தூங்கலாம்
காலை சூரியன்
வந்துதான்
நம்மை எழுப்பி விடட்டுமே....
#தயாஜி
சாமானியன் செய்யும்
தப்புத்தவறுகளுக்கு
கடவுள் அவர்களை
மன்னிக்கவே மாட்டார் என்கிறீர்கள்
மதவியாதிகள் செய்யும்
தப்புத்தவறுகளுக்கு
கடவுள் அவர்களை
ரொம்பவும் சோதிக்கிறார் என்கிறீர்கள்
ஏன்
இந்தக் கடவுள்
எங்களைச் சோதித்து
அவர்களை மன்னிக்காமல்
இருக்க மாட்டரா?