பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 31, 2025

- சொல்லாததே சொற்களின் அர்த்தம் -



என் கவிதைகள்

உங்களை

ஆறுதல் படுத்துவதாகச் சொல்லி

எழுதியெழுதி

என்னை நானே

ஆறுதல் படுத்திக்கொள்கிறேன்


எந்தவித 

குழப்பமும் இல்லாமல்

கவிதைகள் வந்து நிற்கின்றன

நான் மட்டும்

வார்த்தைகளின் இடைவெளியில்

சிக்கி

வழியறியாது தவிக்கின்றேன்


தண்ணீரில் பிறந்து

தண்ணீரிலே இறக்கும்

உப்பென 

கண்ணீரில் கரைந்து

கண்ணீரிலே பிறக்க

கவிதைகள்

உண்டு இங்கு


கவிதைகளின் இடைவெளிக்கு

கடவுளாலும் 

ஒரே பொருளை

வைக்க முடியாது


அது கண்ணுக்கு கண்

மாறி

கண்டறியும் பொருளுக்கு

பெயர் வைத்துக்கொள்கிறது


ஒரே பெயரில்

பல முகங்கள்

கவிதைகளுக்கு உண்டு


சொற்களில் மட்டுமல்ல

சொற்களுக்கிடையே சிதறும்

இடைவெளியிலும்

ஆயிரம் அர்த்தங்கள்

குறைந்தபாடில்லை...



மார்ச் 29, 2025

- மனிதரற்ற வீடுகள் -


தன் வாழும்நாள்  முழுக்க 

சொந்தமாய் 

வீடொன்று இல்லாத ஒருவனின்

இறுதி ஊர்வலம் அது


வாடகை கட்டியே வாழ்க்கையைத்

தொலைத்தவன் அவன்

வாடகை கட்டாமல் வசைகளைச்

சுமந்தவன் அவன்


வீடே இல்லாமல்

சாலையோரத்தில் 

சாய்ந்திருந்தவன் அவன்

இரவு நேரம் மட்டும் 

கூரையுள்ள பேருந்து நிலையத்தில்

அவனைப் பார்க்கலாம்


பனியோ மழையோ புயலோ பூகம்பமோ

அவன் எங்கிருப்பான் என

அவனுக்கும் தெரியாது


இருந்தால்

மறுநாள் அவனைப் பார்க்கலாம்


இன்னமும் வாடகை வீடுதானா

என்ற கேள்விகளால்

அவமானப்பட்டவன் அவன்

வீடீல்லாத ஆண்களை நம்பி

எப்படி பெண் கொடுப்பதென

எல்லோரும் கேட்பதால்

பிரம்மச்சாரியானவன் அவன்


வீடே இல்லாததால்

வீட்டில் வளர்க்க எதையுமே

வாங்கவில்லை

அவனுக்கு அவன்தான் செல்லப்பிராணி

அவனுக்கு அவனே

கொல்லும் பிராணி


வீடற்றவனின் பிணத்தை

எடுத்துச்செல்லும்

இரண்டாவது வரிசை வீடுகள்

முழுக்க

காலியாக 

புதர்கள் மண்டி

கண்ணாடிகள் உடைந்து

சுவர்களெல்லாம் பாசி படர்ந்து

வாசல் கதவுகள் இத்துப்போய்க்

கிடக்கின்றன


இறுதி ஊர்வல பயணி

இதன் பிறகும்

நிம்மாதியாய் விடைபெறுவானா


வாழும் போது மட்டுமல்ல

வாழ்ந்து முடித்த பின்னும்

பதில் கிடைக்காத 

கேள்விகளுக்காகத்தான்

மீண்டும் மீண்டும் பிறந்து

மீண்டும் மீண்டும் சாகிறோம்


வீடில்லாத மனிதர்களையும்

மனிதர்கள் இல்லாத வீடுகளையும்

நாணயத்தில்

இருபக்கங்களாக செதுக்கிச் 

சென்றவன் எவன்


மனிதரற்ற வீடுகளின்

மரண ஓலங்கள்

உங்கள் காதுகளில் விழுவதில்லையா..


#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மார்ச் 27, 2025

- வண்ணமிழக்கும் பகல்கள் -

 

அது ஒரு 

வித்தியாசமான கனவு

என்னைச் சுற்றிலும் 

எத்தனையோ பேர்

வருகிறார்கள் போகிறார்கள்

நன்கு கொழுத்த தேகத்தில்

அவர்கள் பக்கத்தில் நான்

துரும்பிலும் துரும்பென

சுருங்கி கிடக்கிறேன்


என் முன்

நீண்டதொரு சாப்பாட்டு மேசை

முழுக்க முழுக்க

உணவுகளால் மூழ்கடிக்கப்பட்டிருந்தது


உலகின் ஒட்டுமொத்த 

உணவு வெள்ளத்தின் முன்னே

நானும் நீந்தி போக

வேண்டும்


கடலில் விழுந்தவன்

ஆக கடைசியாய்க் 

கைகளை மட்டுமே 

தூக்கி  காட்ட முடிந்தவன் போல

ஏதோ ஒரு பெயர் தெரியாத

தின்னத்தகுந்த தாவர இலைகளின் 

தலைகள் மேஜையெங்கும்

ஆங்காங்கு துடித்தபடி தெரிகின்றன


இத்தனை இருந்தும்

எனக்கு பசியில்லை


வண்ணமடித்த 

இரவுகளில் மட்டுமல்ல

வண்ணமிழந்த 

என் பகல்களிலும்

கைக்கு கிடைத்த மிச்சமீதிகளைப் பார்க்கையில்

இப்போதுமே பசிப்பதில்லை 


கனவில் கூட 

காலத்தோடு வயிறை 

நிறைக்க தெரியாத 

ஏமாளிகளில் நானுமே ஒருவன் 


மார்ச் 26, 2025

- நிலமென்னும் நல்லூழ் -


ஒரு நிலத்தில்

பெரும்பான்மை மனிதர்கள் 

எதற்காக கொண்டாடப்படுகிறார்களோ

எவர்களை பந்தாடுகிறார்களோ

எப்படி ஏளனப்படுத்துகிறார்களோ


இன்னொரு நிலத்தில் 

சிறும்பான்மை மனிதர்கள் அதற்காகவே திண்டாடப்படுகிறார்கள்

அடுத்தடுத்து பந்தாடப்படுகிறார்கள்

அப்படியே ஏளனப்படுகிறார்கள்


நிலமென்பது 

எதையும் புதைப்பதற்கு  மட்டுமல்ல 

எவரும் கைக்கோர்த்து வாழ்வதற்கும் 

என்பதனை  

இன்னும் எத்தனை இலக்கியங்களில் சொன்னால் கேட்போம்


வீடும் வாசலும் 

வேறென்றபோதும்

நீயும் நானும் 

வாழும் தேசமென்பது ஒன்றுதானே


ஆதிக்கங்களை விரட்டிவிட்டு

இன்று

அரசியலில் சிக்கி கொண்டோம்


இது உன் தேசமும் அல்ல

இது என் தேசமும் அல்ல

உன்னை என்னையும் நம்பி

உயிர் விட்ட 

நம் முன்னோர்களின்  நேசம்


அது 

ஒருபோதும் பொய்க்காதிருக்கட்டும்....

மார்ச் 25, 2025

- கனவுத்தின்னிகள் -


இன்றொருநாள்

ஓய்வெடுக்கலாம் என

உறங்க நினைத்தால்

உள்ளுக்குள்ளிருந்து கனவொன்று

எக்கி குதித்து

வெளியே வருகிறது


சிறுவயதின் கனவது

ரொம்பவும் பிடித்த கனவது


எப்போதெல்லாம் பரீட்சையில்

லட்சியம்

எதிர்கால ஆசை என 

எழுதச் சொல்லி கேட்கிறார்களோ

அப்போதெல்லாம் 

அச்சு அசலாய்க்

கொஞ்சமும் பிசகாமல்

ஒரே மாதிரி எழுதி எழுதி

புள்ளிகளுக்கு பதிலாய்த்

திட்டுகளை வாங்கியிருக்கிறேன்


இதெல்லாம் ஒரு கட்டுரையா 

என

கிழித்தும் எறியப்பட்டேன்


ஆசைகளெல்லாம் நிராசையாய்

மாறிவிட்ட 

இன்றைய நாட்களில்

எதிர்காலம் என்பது 

இன்றிரவுக்கான  சாப்பாடு 

என சுருங்கிவிட்ட வாழ்க்கையில்


கனவாவது கண்ணீராவது

எல்லாமே காய்ந்து போவதற்குத்தான்


குழந்தைகளிடம்  ஒருபோதும் எதிர்கால ஆசைகளைக்

கேட்டு 

ஏளனமாய்ச் சிரிக்காதீர்கள்


உங்கள் பல் பட்டு

பாழாய்ப் போன கனவுகளின்

நகல்களை நாங்கள்

தினம் தினம் பார்த்து 

பயப்படுகின்றோம்


சிறுவயதின்  கனவை

எங்கள் வாழ்நாளின் சாபமாக 

மாற்றிவிடாதீர்கள்

மார்ச் 24, 2025

- சதிரங்க வினையாட்டு -

 

இதுநம்நாடு

இது நம் நாடு

இ து நம் நாடு

இ து ந ம் நாடு

இ து ந ம் நா டு

இ   து   ந   ம் நா   டு

இ +@(&*:]@?#&#-@(@(℅©©=¢[>  டு

மார்ச் 23, 2025

- கையும் வாயும் -

 

பசிக்கிறதா என 

கேட்காமல்

பசிக்கிறது எனவும்

சொல்லாமல்


தட்டு நிறைய

எதையாவது எடுத்து 

வாயில் தினிக்கும் கைகளுக்கும்


வாயில் தினித்த 

எல்லாவற்றையும் தின்று தீர்க்கும் வாய்களுக்கும்


இருக்கும் உறவை 

புரிந்து கொள்ள 

தாயாகவும் சேயாகவும்

இருக்க வேண்டுமென்பதில்லை


கொடுக்கும் கையாகவோ 

கேட்கமுடியாத வாயாகவோ கூட

இருக்கலாம்....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்