பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 30, 2020

உன் வெளிப்பாடுதான் உன் மொழி


    நண்பர்கள் தொடர்ந்து zoom மூலமாக முக்கியமான சந்திப்புகளை முன்னெடுத்து வருகிறார்கள். நான்காவது நிகழ்ச்சியாக, தோழர் லீனா மணிமேகலையுடனான சந்திப்பாக அமைந்திருந்தது.

   முன்னமே தோழர் லீனா மணிமேகலை எனக்கு பழக்கம். அவரை கவிஞராகவும் இயக்குனராகவும் அறிந்திருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் அவர் மலேசியா வந்திருந்தார். அப்போது அவரின் இயக்கத்தில் வெளிவந்த 'செங்கடல்' திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. முதலில் என்னால் அதனை உள்வாங்க முடியவில்லை. மெல்ல நானும் ஒரு கதாப்பாத்திரமாக உள் செல்ல ஆரம்பித்துவிட்டேன். அதனை அடுத்து அவர் இயக்கிய சில ஆவணப்படங்களையும் வாங்கிக்கொண்டேன்.

    எந்த படைப்பாளியை சந்திக்க வேண்டும் என்றாலும் குறைந்த பட்சம் அவர் படைப்புகளை வாசித்திருக்க/தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் அவருக்கு நாம் கொடுக்கும் முதல் மரியாதை என நம்புகிறேன். இன்றளவும் அதனை தவறாது செய்தும் வருகிறேன். அப்படி தோழர் லீனா மணிமேகலையை சந்திப்பதற்கு முன்னதாக அவரின் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். சினிமா சார்ந்து அவரது போராட்டங்களைத் தெரிந்துக் கொண்டேன். மெல்ல அவர் மீது இனம் புரியாத ஓர் அன்பு எனக்கு வந்திருந்ததை உணர்ந்தேன். இன்றளவும் அது தொடரவே செய்கிறது.

   ஒவ்வொரு முறை பேசும் போதும் நமக்குள் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரக்கூடியவர்.

   இன்று நடந்த zoom கலந்துரையாடலில் அவரை சந்தித்தேன். முதல் முறை பார்த்தது போலவே தெரிந்தார். அதைவிட முக்கியம் நான் இன்னமும் அவர் நினைவில் இருக்கிறேன்.

   தனது கடந்த காலம், இயக்கிய ஆவணப்படங்கள், 'மீ டூ'  சர்ச்சை என பலவற்றைப் பகிர்ந்துக்கொண்டார். சமீபத்தில் அவர் இயக்கிய 'மாடத்தி' திரைப்படம் குறித்தான பயணம் தொடர்பாக பேசினார்.  'மாடத்தி'யை குறித்தும் அந்த கதையில் மையத்தை எங்கிருந்து தான் பெற்றுக்கொண்டார் என்பதை பற்றியும் நேர்மையாக பகிர்ந்துக் கொண்டார். அப்படத்தைத் திரையில் காணவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டவே செய்கின்றது

  பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தோழர் லீனா மணிமேகலை கொடுத்த பதில்கள் ரசிக்க வைத்தன. 

"இயக்குனராக உங்கள் இலக்கு என்ன?"
என்கிற கேள்வியை முன் வைத்தேன்.

"தான் தேடி கண்டுணர்ந்ததைப் பகிர்ந்துக் கொள்வதுதான்...." என தொடங்கி மேற்கொண்டு பேசினார்.

   சிங்கப்பூரில் இருந்து நண்பர் ஒருவர் தான் வளர்ந்து வரும் இயக்குனர் என்றும், தனக்கான அறிவுரையை கேட்கலானார்.

"கலை என்பதே தனக்கான வழியை தானே தேடி கண்டடைவதுதான். தனக்கான குரலை தானே கேட்டுணர்வதுதான்" என்று மேற்கொண்டு பேசலானார்.  

   இடையில் அவர் கூறிய "உன் வெளிப்பாடுதான் உன் மொழி.." என்பது என் மனதோடு ஒட்டிக்கொண்டது. ஒரு மந்திரம் போல அதனை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்கிறேன்.

   அவருடைய சந்திப்பு மட்டுமின்றி, இந்த zoom நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைவரின் உரையாடல்களையும் தொகுத்து விரைவில் மீண்டும் வெளிவரவிருக்கும் 'நேர்கோடு' இணைய இதழில் வெளியிடவுள்ளார்கள். அதன் பொருட்டே என்னால் இங்கு தோழர் லீனா மணிமேகலையின் சந்திப்பை குறித்து அதிகமாய் சொல்ல இயலவில்லை. 

   நேர்கோடு இணைய இதழில் நீங்கள் அதனை முழுமையாக வாசிக்கலாம்.

பின்குறிப்பு zoom உரையாடலில் தோழரின் சிரிப்பை கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்க முயன்றேன். அப்போது,


ஒரு கவிதையே
தன்னை 
வாசித்துக் கொண்ட - தாய்
தெரிந்தது...'


#தயாஜி

மே 28, 2020

100-வது பதிவு


         எனது வலைப்பூவில் இவ்வாண்டு தொடங்கி எழுதிய பதிவுகளில் இது 100வது பதிவு. கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத எண்ணிக்கை. இதில் அப்படியென்ன இருக்கிறது என்கிற கேள்வியும் சந்தேகமும் உங்களுக்கு மட்டுமின்றி எனக்கும் இருக்கவே செய்கிறது. அதனையே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

       மேலும் சொல்வதென்றால் நம்மை நாமே பார்த்து ‘நீயா செய்தாய்…’ என தோல் தட்டிக்கொள்ளும் செயல்பாடுதான். பலரைப் போலவே எனக்கும் பல கனவுகளில்தான் இந்த 2020 தொடங்க வேண்டியதாக இருந்தது. அதற்குள் விபத்து!!! . ஒரு மாத மருத்துவமனை கட்டில். அதன் பிறகு  வீட்டிலேயே முடங்க வேண்டியதாக்கிப் போனது. வாழ்ந்துக் கொண்டிருந்த அடுக்குமாடி வீட்டில் வசதி குறைவாக இருந்ததாலும், பார்க்கின்றவர்கள் பலரும் அந்த விபத்து!!! குறித்து நடத்திய விசாரணைகளாலும் இன்னொரு வீட்டில் தங்கவேண்டி வந்தது.

      எல்லா வித தொடர்பு எல்லைகளுக்கும் அப்பால் சென்றிருந்தேன். தனிமையும் காயங்கள் கொடுத்த வலியுமே எனக்கு துணையாக இருந்தன. காலில் அடிபட்டு ஊன்றுகோலுடன் அறையில் நடந்துக் கொண்டிருந்தேன். முதலில் கை முட்டிகள் ஒத்துழைக்க மறுத்தாலும் சில தினங்களில் பழவிவிட்டது. ஆனால் தலையில் அடிபட்டிருந்ததால் அடிக்கடி மறதி என்னைத் தாக்கியது. திரும்பத்திரும்ப எனக்கு நானே சொல்லிக்கொண்டும் குழம்பிக் கொண்டும் இருந்தேன். சில புத்தகங்களை பழைய வீட்டில் இருந்து ‘இல்லாள்’ எடுத்து வந்திருந்தாள்.  வாசித்த பக்கத்தையே திரும்பத்திரும்ப வாசிக்கவும் செய்தேன். ஒவ்வொரு முறையும் அதுவெல்லாம் எனக்கு புதிதாகவே தெரிந்தன. ‘இல்லாளைப்’ பார்த்து, ‘நமக்கு கல்யாணம் ஆகிடுச்சா?’ என கேட்டு அவளை கலங்கச் செய்த சம்பவங்களும் நடந்தது.  

         மருத்துவ உதவிகளாலும் சில பயிற்சிகளாலும் நிலமையை மெல்ல மெல்ல சரிகட்டிக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே வாசித்த புத்தகங்கள் பற்றிய நினைவுகள் மங்கலாகவே இருந்தன. அதோடு நான் எழுதியிருந்த படைப்புகளை வாசிக்கையில் எந்த சிந்தனையில் எதன் பொருட்டு எழுதினேன் என புரிந்துக் கொள்ள முடியவில்லை. ‘எழுதியவன் இறந்துவிட்டான் என்ற கோட்பாட்டை’ அப்போதுதான் உணர்ந்தேன். நானே ஒரு வாசகனாக, விரும்பி வாசிப்பவனாக அவற்றை படித்துப் பார்த்து பாராட்டினேன். கேலி செய்தேன். 

        நல்லவேளையாக வாசித்த புத்தகங்களைப் பற்றியும் சில அனுபவங்களைப் பற்றியும் எழுதியவற்றை தொடர்ந்து வாசிக்கையில் சில நினைவுகள் பிடிபட ஆரம்பித்தன. அதோடு தினமும் கனவில் சில உருவங்கள் தோன்றி பல விசித்திரங்களை நடத்திக் கொண்டிருந்தன. விசாரித்ததில் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மருந்துகளின் வீரியம் அதிகம் என்றும் அது உள்ளுக்குள் பல ரசாயன மாற்றங்களை செய்யும் என்றும் தெரிந்துக்கொண்டேன். சில நாட்களில் அவை விழித்திருக்கும் போதும் வரத் தொடங்கின.

    சில கருத்த உருவங்கள் அறை முழுக்க என்னை பின் தொடரச் செய்தன. ‘இல்லாள்’ ஒரு சாய் பாபா படத்தைக் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னாள். அதோடு வீட்டில் இருந்த சிலையொன்றையும் கொண்டு வந்து கொடுத்திருந்தாள். நாளடைவில் கருப்பு உருவங்கள் என்னுடன் சகஜமாக உரையாட ஆரம்பித்தன. எனக்கு நடந்தது விபத்து அல்ல, சூழ்ச்சி என பேசிக்கொண்டன. நடந்து முடிந்த சம்பவங்களை என் முன் திரைப்படம் போல காட்டத் தொடங்கின. யார் இதற்கெல்லாம் காரணம் என சில முகங்களைக் காட்டின. ‘கம்பியூட்டர் ஸ்கிரீன்’ போல ஒவ்வொரு முகத்திலும் கோடு கிழித்து அதன் மையத்தில் எதற்காக இப்படி செய்திருக்கக்கூடும் என எழுதினார்கள். காட்டிய முகங்களில் கணிதத்தில் வரும் கிட்டிய பத்து கிட்டாத பத்து போல, கிட்டாத காரணங்கள் கொண்ட முகங்களை ‘டிலேட்’ செய்து கிட்டிய காரணங்கள் கொண்ட முகங்களை ஒன்று இரண்டு என வரிசைப்படுத்தின. அந்த அதிர்ச்சியைச் சொல்வதற்கு வார்த்தையில்லாமல் போனது. அவரவர் செயல்களுக்கான சுமைகளை அவர்களே சுமப்பார்கள் என என் தோல் தட்டி ஒருவர் அன்பாகப் பேசினார். எனக்கு மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏதோ ஒரு வகையில் இந்த சுழற்சிக்கு சிறகசைத்த பட்டாம்பூச்சியாக நான் கூட இருந்திருக்கலாமோ என்று என்னை நானே சமாதானம் செய்துக் கொள்ள முயன்றேன். இவ்வளவு நேரம் சுவரையே வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தது வீட்டில் உள்ளவர்களை அச்சப்படுத்தியது. அவர்களும் அவர்கள் விரும்பும் தெய்வத்திடம் எனக்காக பிரார்த்தித்துக் கொண்டார்கள்.  

      மனதில் தோன்றுவதையெல்லாம் எழுத ஆரம்பித்தேன். கையெழுத்து கூட மனதிற்கு பரிட்சயம் அற்று இருந்தது. ஆனாலும் மனதில் தோன்றுவதை மறைவதற்கு முன்னதாகே எழுதிக் கொண்டேப் போனேன். எழுதி முடித்த பின் திரும்பத் திரும்ப அதனை வாசிக்கவும் செய்தேன். அவற்றை அப்படியே சேமித்தேன். சில நாட்கள் கழித்து மீண்டும் வாசித்ததில் அதில் எனக்கான செய்தி மட்டுமல்ல என்னை சுற்று உள்ளவர்களுக்கான செய்திகளும் இருப்பதாகப் பட்டது. அப்படியே சேமித்து வைத்தேன்.

     ‘இல்லாள்’ வேலைக்கு சென்று வருவதற்கு இரவாகிப்போனது.  அவள் இல்லாத தனிமையில் என்னுடன் உரையாட வந்திருந்த கருப்பு உருவங்கள் மெல்ல மெல்ல வெள்ளை உருவங்களாக மாறி என்னை சுற்றிக் கொண்டிருப்பது தெரிந்தன. பழைய சம்பவங்கள், நியாயங்கள், கோவம், பழி தீர்த்தல், ரகசியங்களை அம்பலபடுத்துதல், அடுத்து என்ன என்பது போன்ற பலவற்றைப் பற்றி உரையாடல் செய்தோம். முன்பு போல அந்த உருவங்கள் என்னிடம் கடினமான குரலில் பேசுவதில்லை. ஒவ்வொரு உரையாடல் முடியும் போதும், எனக்கும் உனக்கும் உள்ள தூரம் அன்பு மட்டுமே. அப்படித்தான் உனக்கும் மற்றவர்களுக்கு உள்ள தூரம் அன்பினால் நிரப்பு, என சொல்லி முடிப்பார்கள். அங்கிருந்து ஏனோ அன்பு என்னும் சொல் மீது எனக்கு அதீத காதல் தொற்றிக்கொண்டது. எல்லா இடங்களிலும் காற்று போல சூழந்திருப்பது அதுவாகத்தான் இருக்கிறது. காற்றே புகாத இடத்திலும் கூட அன்பு அதுவாகவே இருப்பதாகத் தெரிந்தது.

          ஒவ்வொன்றையும் கடந்து வருவதற்கு என்னைச் சுற்று உள்ளவர்கள் அவர்களாகவே வந்து உதவ ஆரம்பித்தார்கள். உடைந்துப் போன கைபேசிக்கு பதிலாக அம்மா ஒரு கைபேசியை வாங்கிக் கொடுத்தார். மீண்டும் அதில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன்.

   ‘இல்லாள்’ கொடுத்த புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். தனியே அமர்ந்து வாசித்த கதைகளைப் பற்றி பேச ஆரம்பித்தேன். அதில் எனக்கு எழுந்த கேள்விகளுக்கு சில வினாடிகளில் பதில் கிடைக்கவும் ஆரம்பித்தது.

     இந்த சமயத்தில்தான் ‘இல்லாளுடன்’ பழைய வீட்டிற்கு வந்தோம். அறை முழுக்க இருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து தூசு தட்டி சுத்தம் செய்தேன். பால்கனியில் வளர்ந்து வந்த செடிகள் காய்ந்துவிட்டிருந்தன. அதனை வீசிவிடச் சொன்னார்கள். அதற்கு மனமின்றி தினமும் தண்ணீர் ஊற்றி அவற்றுடன் பேச ஆரம்பித்தேன். கொஞ்ச நாளில் அவை மீண்டும் துளிர்த்தன. புதிய விதைகளில் இருந்தும் செடிகள் முளைவிட்டன. அதில் அப்பா அம்மா கொடுத்தனுப்பிய நித்தியக்கல்யாணி செடியும் அடக்கம். ஒன்றிலிருந்து இன்னொன்றாய் அவை இரண்டாவது தலைமுறைத் தொட்டுவிட்டன.

        பலதரப்பட்ட புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். இனி வாசித்த புத்தகங்கள் குறித்து பழையபடி சிறு குறிப்புகள் எழுத முடிவெடுத்தேன். அவ்வாறே மீண்டும் அவற்றை எனது ப்ளாக்கிலும் முகநூலிலும் பகிர ஆரம்பித்தேன். அவை சிறு குறிப்புகளுக்குள் அடங்காமல் வரத் தொடங்கின. கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதைகள், பத்திகள், வாசிப்பு அனுபவங்கள் என எழுதினேன். அவற்றில் சில இணைய இதழ்களிலும் சில பத்திரிகைகளிலும் வெளிவர ஆரம்பித்தன. ஒவ்வொன்றையும் எழுதி முடிக்கும் போது மனதில் அத்தனை மகிழ்ச்சி எழுந்தது. வாசித்தவை குறித்து முகநூலில் நேரலையாகவும் பேசி வருகிறேன்.

        இன்று பார்க்கையில், இந்த 2020-ல் மட்டும் வலைப்பூவில் 99 பதிவுகள் எழுதிவிட்டதை கவனித்தேன். இதில் எது சிறப்பு எது தேவையற்றது என்கிற கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல், என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதை தொடர்ந்து செய்து வருகிறேன் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

    தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் குறுங்கதைகளை வாசித்தவர்கள் அதனை புத்தகமாக தொகுக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக   நான் நேசிக்கும் எழுத்தாளர் ஒருவரும் குறுங்கதைகளை வாசிக்கக் கேட்டார். வாசித்தவர், சிலவற்றை பகிர்ந்துக் கொண்டார். அதிஷ்டமிருந்தால் அவரே கூட அந்த தொகுப்பிற்கு முன்னுரை எழுதலாம் என நான் என்னைச் சுற்றி உள்ளவர்களிடம் சொல்லிக்கொண்டேன். சொல்லும் போதே அது அத்தனை அழகாக இருக்கிறது. யார் அந்த எழுத்தாளர் என்பது அவர் எழுதும் முன்னுரையில் இருந்து தெரிந்துக் கோள்ளலாம். இதற்கிடையில் மனம் கவர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் உடன் மின்னஞ்சல் வழி அவ்வபோது பேசி வருகிறேன். மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது.


  2009-ல் எழுதத் தொடங்கிய வலைப்பூ 2018-ல் எதுவும் எழுதப்படாமல் இருந்தது. மற்ற ஆண்டுகளில் அவ்வபோது எழுதிவந்திருந்தாலும், 2012-ம் ஆண்டு முழுக்கவே 71 பதிவுகள்தான் செய்திருக்கிறேன். அப்படி திரும்பிப் பார்த்த பிறகு இந்த ஆண்டு பல இன்னல்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் இடையில் 100வது பதிவாக இதனை எழுதிக் கொண்டிருப்பதில் மனதிற்கு நெகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

      நான் எழுதுபவற்றை எனக்கும் என மனதிற்குமான உரையாடலாகப் பார்க்கிறேன், அவ்வுரையாடலை கொஞ்சம் சத்தமாகவேச் செய்கிறேன். அவைதான் நீங்கள் வாசிக்க கிடைக்கிறது. ஏனெனில் எனக்கும் உங்களுக்கும் இடையில் இருப்பது அன்பு ஒன்றுதான்.

 

-  தயாஜி

 

   

   


மே 27, 2020

வெறும் நாய்தான்...


   தீ வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. மின்சார கம்பிகள் வெடித்தன. பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஏதோ சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள். தீயணைப்புப் படையினர்க்கு அழைத்தார்கள்.

   ஆயினும் காத்திருக்கக் கூடாது என்பதை புரிந்திருந்தார்கள். வெளியில் சென்றிருந்த மேரிக்கு அழைத்தார்கள். அவளில் வீடு எப்படியோ தீப்பிடித்து எரிவதைச் சொல்லவும் செய்தார்கள்.

   வெளியில் இருந்தவர்கள் முடிந்தவரை வாலிகளில் தண்ணீர் நிரப்பி,  தீயை அணைக்க முயல்கிறார்கள்.

   நல்லவேளை வீட்டில் யாருமில்லை. தப்பு. வீட்டிலிருந்து ஏதோ சத்தம் கேட்கிறது. வீட்டில் எரியும் தீக்கு  நடுவில் யாரோ மாட்டிக்கொண்டார்கள். வெளியில் அதற்கு ஆதாரமாய் சத்தம் கேட்கின்றன.

   மேரியும் அலறிக்கொண்டே வந்துச் சேர்கிறாள். அக்கம் பக்கத்தினர் அவளிடம் விசாரிக்கிறார்கள். 
உள்ளே அவளது நாய்க்குட்டி இருப்பதைச் சொல்லி அழுகிறவள் உள்ளேச் செல்லப் பார்க்கிறாள். யாரும் அவளை அனுமதிக்கவில்லை.

   தொடர்ந்து அருகில் வசிப்பவர்கள் ஒரு சேர  தீயை அணைக்க முயல்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் தீயணைப்புப் படையினர் வந்துவிடுவார்கள். அதற்கான அபாய ஒலி கேட்கத் தொடங்கியது.

    உள்ளே இருக்கும் நாய்க்குட்டியின் சத்தம் அதிகமாகிறது. மேரிக்கு எங்கிருந்து வந்த வேகமோ தெரியவில்லை. எல்லோரையும் தள்ளிவிட்டு வீட்டு வாசலை நோக்கி ஓடுகிறாள். அருகில் இருந்த பூ ஜாடியை எடுக்கிறாள். ஜன்னலில் வீசுகிறாள். மெல்லிய கம்பிகள் அப்படியே பிய்ந்து பின்னால் விழுந்தன.

   யோசிக்காது உள்ளே குதிக்கிறாள். வீடு முழுக்க புகையாகவும் அனலாகவும் இருந்தது. தீயின் எரிச்சல் அவள் உடலை சுட்டது. எப்படியோ அவளது நாய்க்குட்டியைக் கண்டுபிடித்துவிட்டாள்.

   வெண்ணிற பஞ்சு நாய், இப்போது ரோமங்கள் பொசுங்கி பீதியுடன் துடித்துக் கொண்டிருந்தது. தன்னைக் காப்பாற்றிய தோழியின் முகத்தை ஈரப்படுத்த முயன்ற குட்டியை மேரி கட்டியணைத்துக் கொண்டாள்.

   அவள் வந்த வழி இப்போது தீயினால் சூழ்ந்துவிட்டது. எப்படியோ வாசல் கதவை திறக்க முயல்கிறாள். பாதி கதவு மட்டும் உடைந்து விழுகிறது.

   உள்ளே, தீ எல்லாவற்றையும் விழுங்க ஆரம்பித்து விட்டது. வேறு வழி தெரியவில்லை. பாதி உடைந்த கதவின் வழியே தனது குட்டியை முதலில் தூக்கி வீசுகிறாள். அது அங்கிருந்து வெளியே புல் தரையில் உருண்டுபோய் விழுகிறது.

    உள்ளே  வெடிப்பு. மேரி மீது ஏதோ பலம் கொண்டு மோதுகிறது. அலறுகிறாள். 

  வெளியில் விழுந்த, குட்டி தன் தோழியின் அலறல் சத்தம் கேட்டு, வெளியேறிய வேகத்தைக் காட்டிலும் அதிக வேகமாக மீண்டும் பாதி உடைந்த கதவின் வழி உள்ளே குதிக்கிறது.

     மீண்டும் பெரிய வெடிப்பு ஏற்பட அருகில் இருந்தவர்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடுகிறார்கள்.

#தயாஜி

மே 25, 2020

BMW-வும் Viva காரும்


  காலையிலேயே கடனைக் கட்டச் சொல்லி குறுஞ்செய்தி வந்திருந்தது.  வரிசையாக நான்கு நாட்களாக வந்துக் கொண்டிருப்பதுதான். அதற்காகவே தயாரானவன் போல வேகமாக கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

   கேசவனுக்கு ஊரைச் சுற்றி கடன். இப்போதைக்கு பார்த்துக் கொண்டிருந்த வேலையும் இல்லை. என்ன செய்வது என்றே பிடிபடவில்லை. யோசித்துக் கொண்டே தனது வீவா காருக்குச் சென்றான். காருக்கு ஊற்றிய பத்து வெள்ளி எண்ணையில் கடந்த நான்கு நாட்களாக ஒவ்வொரு இடமாக காரை மாற்றி மாற்றி நிறுத்தி வருகிறான். 

    எப்போது வேண்டுமானாலும் தவணை கட்டாத தனது காரை யாராவது இழுத்துக் கொண்டுப்போக வாய்ப்புள்ளது. அதற்காகவே தினம் தினம் காரை வெவ்வேறு இடமாக நிறுத்திக் கொண்டிருக்கிறான். யார் கண்ணுக்கும் சட்டென தெரியாத இடத்தைதான் கேசவன் தேர்ந்தெடுப்பான்.

    வீட்டு வாடகை, மளிகை சாமான் கடன், வாகன தவணை என சில மாதங்களாக  'நாளைக்கு..' 'நாளைக்கு..'  என்றே நான்கு மாதங்களை கடத்திவிட்டான். 

   போதாததிற்கு நண்பர்களிடம் கடனும் வாங்கிக் கொண்டிருக்கிறான். நிலமை எப்படியும் சரியாகும் என அவனது மனைவி சொல்வது ஆறுதலாக இருந்தது. ஆனாலும் அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் இல்லாமலில்லை.

  எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டே தனது வீவா காரை மறைவான இடத்தில் நிறுத்திவிட்டான். காரை விட்டு இறங்கினான். இப்போதுதான் கவனித்தான். அவனது காருக்கு பக்கத்தில் வெள்ளை நிற பி.எம்.டபள்யு. அத்தனை அழகு. அதன் வடிவம் அதன் வளைவு அதன் அந்தஸ்த்து என நின்றவாக்கிலேயே ஆசையாசையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். தன் வீவா-வை அங்கு நிறுத்துவது அவனுக்கு அவமானமாக இருந்தது. காரின் கறுப்பு  கண்ணாடியில் உள்ளே இருப்பது எதுவும் தெரியவில்லை.

   கேசவனின் முகத்தையே கண்ணாடி பிரதிபலித்தது.  கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருந்தான். அந்த  அசிங்கமான கடன்கார முகத்தை அவனால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. 

    தன்னால் எப்போதும் வாங்க முடியாத கார் அது. அதன் அருகில் கூட தன்னால் நிற்க முடியாது என நினைத்தான். கோவப்பட்டான். ஏதாவது செய்ய வேண்டும் என அவனது கைகள் அரித்தது.

   கீழே கிடந்த கல்லொன்றை எடுத்து பி.எம்.டபள்யூ-வில் ஒரு கோடு கிழித்தான். யாரும் பார்ப்பதற்குள் விறுவிறுவென நடக்கலானான். 

    தூரத்தில் நடந்துக் கொண்டிருக்கும் கேசசனை அந்த பி.எம்.டபள்யூ காருக்குள்ளே இருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது கண்களில் எந்த சலனமும் இல்லை. அவனது உடம்பில் எந்த அசைவும் இல்லை. கடன் தொல்லையால் தன் காரிலேயே விஷம் குடித்து அவன் தற்கொலை செய்து இன்றோடு மூன்றாவது நாள் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.


#தயாஜி

Children of Heaven


       இந்த நேரத்தில் இதனை பார்த்திருக்க கூடாது. மனதை கலங்கடித்துவிட்டது. உண்மையில் அவர்கள் சொர்க்கத்தின் குழந்தைகள்தான். அந்த சிறுவனின் கண்களில்தான் எத்தனை வலி. அவனது தங்கையில் முகத்தில்தான் எத்தனை கேள்விகள்.

     
   காணாமல் போவது அவர்களது காலணி மட்டுமல்ல. என் நிகழ்கால துக்கங்களும்தான். இப்போது இவர்களுக்காக கண்கள் கலங்குகின்றன.

     ஒரு படைப்பு சக மனிதர்கள் மீது அன்பை விதிக்கின்றன என்பதுத்தான் எத்தனை நிதர்சனம்.


    இப்போதைய மனநிலையில் என்னால் மேற்கொண்டு ஏதும் எழுத முடியவில்லை. மீண்டும் சொர்க்கத்தின் குழந்தைகளை நினைக்குக் கொண்டிருக்கிறேன்...

#தயாஜி

இரத்தக்கறை..... (Sharing is killing)


   மிகவும் அசந்துவிட்டான். கண்கள் கலங்கி இருந்தன. தலை முடிகலெல்லாம் எங்கெங்கோ பார்த்துக் கொண்டிருந்தன. கால்கள் நடந்து நடந்து பலமிழந்துவிட்டன. தூக்க கலக்கத்தில் கண்கள் சொருகியது. கலங்கிய கண்களில்  இருந்து கண்ணீர்தான் வழிந்ததேத் தவிர தூக்கம் வருவதற்கு வழியில்லை.

  தன்னைச் சுற்றிலும் நடந்துக் கொண்டிருப்பதை அவனால் உணரவும் உள்வாங்கவும் முடியவில்லை. வீசி எறிந்திருந்த கைபேசியைப் பார்த்தான். ஏதோ ஓர் கறுத்த உருவம் கைபேசியில் மேல் அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அதிர்ந்தேப்போனான்.

   சூதாரித்துக் கொண்டுப் பார்க்கிறான். அங்கு கைபேசி மட்டுமே இருந்தது. மீண்டும் அந்த வாடையை அவன் உணர்ந்தான். அவனுக்கு குமட்டியது. கைகளைப் பார்க்கிறான். இரத்தம். ஆமாம் இரத்தம் அவனது இரண்டு கைகளில் இருந்தும் வழிந்துக் கொண்டிருந்தது.

  பதறியடித்துக் கொண்டு எழுந்தான். மீண்டும் கழிவறைக்கு ஓடினான். குழாயைத் திறந்தான். அதிலும் இப்போது இரத்தம் வரத் தொடங்கியிருந்தது. பீதி அவனை பீடித்துக் கொண்டது. முன்னே இருந்த கண்ணாடியில் ஏதோ அசைவதாகத் தெரிந்தது. நிமிர்ந்தான். அவன் முகம் முழுக்க இரத்தமாக இருந்தது.  இரத்தம் வழிந்து அவன் மேலாடை முழுக்கவும் சிவப்பாக்கிக் கொண்டிருக்கிறது.

   வெளியே ஓடி வருகிறான். கீழே கிடந்த கைபேசியை எடுக்கிறான். அதில் அவனது முகநூல் பக்கம் திறந்தே இருந்தது. அவன் பகிர்ந்திருந்த அந்த பெண்ணின் 'டிக்டாக்' வீடியோவை அழிக்க முயன்றான். 

  அவன் அழிக்க அழிக்க அடுத்த நொடியில் அதே வீடியோ அவனது முகநூலில் மீண்டும் மீண்டும் பதிவாகிக்கொண்டே இருந்தது. அந்த பெண் மீண்டும் மீண்டும் டிக்டாக்கில் ஆடிக்கொண்டே இருக்கிறாள்.

  யாரோ அழுகிறார்கள். நிமிர்கிறான். நின்றுவிட்ட காற்றாடியில் அந்த 'டிக்டாக்' பெண் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருக்கிறாள். 

  அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. மண்டியிட்டு கதற ஆரம்பித்தான்.

" ஐயோ என்னைய மன்னிச்சிடு நான் சும்மாதான் உன் வீடியோவை போட்டேன்... நீ யார்னு தெரியாமலே உன்னை பத்தி தப்பு தப்பா எழுதிட்டேன்.. உன் சாவுக்கு நான் காரணமில்ல.. நிறைய பேரு அப்படிதான் எழுதனாங்க... உன் சாவுக்கு நான் மட்டும் காரணமில்ல.. என்னைய விட்டுடு......'

  அவன் அறை முழுக்க மீண்டும் அந்த வாடை ஆரம்பமானது. அவன் உடல் முழுக்க இப்போது இரத்தம் வழியத் தொடங்கியது.

     தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தவள் தொங்கியவாரே அவனைப் பார்க்கிறாள். அந்த டிக்டாக் வீடியோவில் செய்த பாவனையை மீண்டும் செய்யத் தொடங்கினாள்.

  அதிலிருந்து தப்பிக்க வேகமாக ஓடியவன் முன்னே, பதினாறாவது மாடி ஜன்னல் திறந்தே இருந்தது...

#தயாஜி

மே 23, 2020

அனாதை



   ரேணுகா தனியாய் இருந்தாள். அவளுக்கு அம்மாவின் மீது அத்தனைக் கோவம். ஏன் இந்த அவசரம். "இப்படி அனாதையாய் விட்டுப்போகவா பெத்துப்போட்டாய்", என அவள் மனம் கொதித்தது. யார் யாரோ அழுதார்கள். ஆனால் அவளுக்கு அழுகை வரவேயில்லை. அம்மா தன்னை அனாதையாக்கி இப்படி ஒரு துரோகம் செய்துவிட்டதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.

    கோவிட் 19 காரணமாய் எல்லா இடத்திலும் ஊரடங்கு. நன்கு அறிமுகமான அம்மாவின் இறுதி நாளில் இருபது பேர் மட்டுமே கலந்துக்கொண்டனர். பலரால் வரமுடியவில்லை என்ற தகவல்கள் மட்டுமே தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தன.

   அம்மாவின் இறுதி சடங்குகளெல்லாம் முடிந்தன. வந்திருந்த சொந்தங்கள் ஒவ்வொன்றாக விடைபெற்றார்கள்.  ஆயிரம்தான் இருந்தாலும் இறப்பு நடந்த வீட்டில், ஒரு பெண் பிள்ளையை தனியாய் விடுவதில் யாருக்கும் விருப்பம் இல்லை. இந்த வட்டாரத்தில் சில திருட்டு பயல்கள் இருப்பதை அறிந்திருந்தார்கள். அதற்காகவே அருகில் வசிக்கும் உறவினர்களை சில நாட்களுக்கு இங்குத் தங்கச்சொல்லி பேசிமுடித்தார்கள்.

   என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. இன்று தங்குவதாக வாக்களித்தவர்களும் கடைசி நேரத்தில் ஏதோ காரணம் காட்டி காலையில் வருவதாகச் சொல்லி கிளம்பிவிட்டார்கள்.

   வெளியில் இருந்து, வீட்டில் நடப்பதையே சில கண்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தன. இப்போது வீட்டில் ரேணு மட்டுமே. 

      பின்னிரவு மணி 1. வீட்டில் ஏதோ சத்தம் கேட்டது. அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. எழுந்தவள் கைபேசியை எடுத்தாள். 'ச்சார்ச்' போட மறந்திருந்தாள். பேட்டரி இன்னும் 2 சதவீதம் மட்டுமே இருந்தது.

    மெல்ல எழுந்தாள். அறைக் கதவில் காதை வைத்து கவனமாகக் கேட்டாள். யாரோ நடமாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவளுக்கு வியர்த்தது. அம்மா தன்னை அனாதையாக்கிய முதல் நாளிலேயே இப்படியொரு ஆபத்தா.! மீத வாழ்க்கை என்னாகுமோ? இனி என்ன நடக்குமோ? என அவளின் மனம் பதட்டம் கொண்டது.

     பேச்சுக்குரல் கேட்க ஆரம்பித்தது. எந்த இடத்தில் என்ன இருக்கிறது என நன்கு தெரிந்த ஆட்கள்தான் போல இருந்தார்கள். ஆனாலும் அந்த குரலை அவளால் அடையாளம் காண முடியவில்லை.

    வீட்டு வரவேற்பறையில் அம்மாவின் புகைப்படம் உள்ளது. அதன் கீழ் அம்மாவின் அனைத்து நகைகளையும் உறவினர்கள் கொடுத்த உதவிப்பணத்தையும் வைத்திருந்தாள். 

     பொருட்கள் உடையும் சத்தம் கேட்கிறது. பக்கத்து அறை கதவை உடைத்து திறக்கிறார்கள். அடுத்து அவளது அறைக்குத்தான் வருவார்கள்.

    'படீர்'. எதைக்கொண்டோ கதவை அடித்தார்கள். கதவு திறந்துக் கொண்டது. ரேணுகா அப்படியே பின்னால் விழுந்தாள். ஒருவன் உள்ளே நுழைந்தான். கையில் நீண்ட கத்தியை வைத்திருந்தான். நேராக அவளது கழுத்தில் வைத்து அவளை வெளியே வரவைத்தான்.

    வரவேற்பறையில் ரேணுகாவை நிற்க வைத்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளும் தன் அம்மாவிடம் செல்லப் போவதை நினைத்துக் கொண்டு கண்களை மூடினாள்.

    "ஐயோ...!!" அலறல் சத்தம். அவனது கத்தி கீழே விழுந்தது. ரேணுகா கண்களைத் திறக்கிறாள். முகமூடி அணிந்த இரு உருவங்கள் எதையோப் பார்த்து தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 

    அவள் அம்மாவின் நகைகளைப் பார்க்கிறாள். அவை பணத்துடன் அங்கேயே இருந்தன. ஆனால், அம்மாவின் புகைப்படம் மட்டும் வைத்த வாக்கில் இல்லாமல், அவர்கள் ஓடிய திசையைப் பார்த்துக்கொண்டிருந்தது.

   இனி எப்போதும் ரேணுகா தான் அனாதையல்ல என்பதைப் புரிந்துக்கொண்டாள். அவள் கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன.

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்