கொலைக்கப்படுவதும் கதைக்கப்படுவதும் யாதெனில்
இதில் என்ன தவறு. நான் உருவாக்கினேன். நானே அழிக்கப் போகின்றேன். உரு கொண்ட உறவில் கரு கொண்ட வடிவமல்ல கொலைக் குற்றம் சொல்ல. நான் கொலையாளியும் அல்ல.
விஞ்ஞானி நான். நம்ப மறுப்பீர்கள். விஞ்ஞானிகளுக்கு கதை எழுத நேரமேது. உண்மைதான் நான் விஞ்ஞானியல்ல. பெயர் குறிப்பிட முடியாத பெயர் குறிப்பிடவும் கூடாத விஞ்ஞானியின் உதவியாளன்.
எங்களின் ஆராய்ச்சி விசித்திரமானது. விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் வந்திருக்கும் எல்லாவற்றையும் உதரித் தள்ளும் வகையானது. யார் யாரெல்லாம் தங்களை விஞ்ஞானிகள் என சொல்லி மார்த்தட்டுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் இனி வேலை இல்லை. எங்கள் ஆராச்சி அவர்களுக்கெல்லாம் எட்டாத எட்டவே முடியாத ஓர் ஏணிப்படி.
இந்த உலகமே எங்களைத் தேடிவரும் என்பது எங்களின் அசாத்திய நம்பிக்கை. அதுதான் நிஜமும் கூட.
கோவம். காமம்.
இரண்டும் வார்த்தைகள் மட்டுமல்ல. வாழ்வின் வேட்கைகள். தொடர்ந்துக் கொண்டிருக்கும் பயணம்.
இந்த இரண்டுக்கும் வடிகால் இல்லாததால்தான் என்னென்னவோ நடக்கிறது. கொலை முதல் கற்பழிப்பு வரை. எங்கள் கண்டுபிடிப்பு அதனை தகர்த்தெரியும். விருப்பையும் வெறுப்பையும் நுகரச்செய்யும். ஆசை தீர வழி பிறக்கும். உங்கள் ஆன்மா சுத்திகரிக்கப்படும். ஆசைக்கு தீனி கிடைத்தால், ஆன்மாவில் அழுக்கு படியாதே. சேர்த்து வைக்க சேர்த்து வைக்கவே சேற்றின் படிமமாகிறது மனது.
இது ஒன்னும் ஆன்மிகமில்லை. எங்களுக்கு அதற்கும் எந்த சம்பந்தமும் தொடர்பும் இல்லை. நாங்கள் விஞ்ஞானி. கடவுள் கொள்கைகளை கேள்விக்கு உட்படுத்துவதுதான் எங்கள் முதல் வேலை. கேள்விதானே பதிலை தேடவைக்கும் சூட்சுமம்.
தொடக்கத்தில் சொன்ன கோவம் , காமம் இனி யாரையும் அடிமைப்படுத்தாது. நாங்கள் விஞ்ஞானிகள், சாதித்துவிட்டோம். அடிக்கடி நாங்கள் விஞ்ஞானி, நாங்கள் விஞ்ஞானி என சொன்னாலும் நான் அவருக்கு உதவியாளந்தானே என எண்ணிடாதீர்கள்.
வெளியில் இருப்பவர்களுக்கு விஞ்ஞானியின் வெற்றியும் கண்டுபிடிப்புகளும்தான் தெரியும். என் போன்ற அல்லது எங்களை போன்ற உதவியாளர்களுக்குத்தான் பலம் முதல் பலவீனம் வரை தெரியும். அவரது இந்த கண்டுபிடிப்புக்கு கூட அவரின் பலவீனம்தான் காரணம்.
தன்னை விஞ்ஞானியாக ஒப்புக் கொள்ளாதவர்கள் மீது கொண்ட கோவம்தான் காரணம் என்றாலும், அவர் கொஞ்சம் அப்படி.
கொஞ்சம் அப்படியென்றால், அப்படித்தான். அதும் பெண்கள் விசியத்தில், சரச சல்லாப சாமியார்களையும் மிஞ்சக் கூடியவர். வீடியோ ஆதாரத்தைக் கூட ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் பயனில்லை. அது தனிக்கதை.
இப்படித்தான் ஒரு முறை, எப்படித்தான் எந்த முறை என கேட்காமல் படிக்கனும் சரியா.
என் வேலை செய்யும் விஞ்ஞானிக்கும் அவரது நண்பருக்கும் வாக்குவாதம். கொஞ்சம் விட்டிருந்தாலும் அடிபுடி சண்டை வந்திருக்கும். இவர்கள் தமிழ் சினிமா விஞ்ஞானிகள் அல்ல. ஹாலிவுட் பாணி விஞ்ஞானிகள் அவர்களே ஆராய்வார்கள் அவர்களே ஆள்வைத்து அடிப்பார்கள் சிலசமயம் அவர்களே அடிக்கவும் செய்வார்கள்.
அந்த வாக்குவாதம் இவருக்கு தோல்வியைக் கொடுத்தது. அன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாள்கள் ஆராய்ச்சி கூடாரத்திலேயே கதியாய் கிடந்தார். எனக்கும் அந்த நாள்களில் வேலை குறைவாகத்தான் இருந்தது. எல்லா வேலைகளையும் அவராகவே செய்தார். ஆச்சர்யமாக இருந்தது அவரது வேகம். அன்று நடந்த அந்த வாக்குவாத தோல்விதான் அவரது அசுர வேகத்துக்கு காரணம் என புரிந்தது.
மூன்றாம் நாளில் இறுதியிலும், நான்காம் நாளின் தொடக்கத்திலும் அறையில் கூச்சலிடும் சத்தம் கேட்டது. சத்தத்தோடு நின்றிருந்தால் நானும் எட்டிப் பார்த்திருக்க மாட்டேன். ஆனால் யாரையோ வெறி கொண்டு அறைவது போலவும் குத்துவது போலவும் வெளியில் இருக்கும் எனக்கு தெரிந்தது. என் இருக்கையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சத்தமிடும் அறைக்கு சென்றேன். அனுமதியின்றி அவரது அறைக்கு நான் செல்லக்கூடாது. ஒருமுறை திட்டும் வாங்கியிருக்கிறேன். ஆனால் இந்த முறை அதெல்லாம் நினைக்கவில்லை. கூச்சல் சத்ததின் கூப்பிடு அப்படி.
அவரது அறைக்கதவில் அவருக்கே தெரியாமல் ஒரு ஓட்டையை தயாரித்து வைத்திருக்கிறேன். உள்ளே நுழையத்தானே உத்தரவு வேண்டும் ஓட்டை போட தேவையில்லையே. இல்லையென்றால் அவரது அந்த வீடியோ காட்சி சிக்கியிருக்குமா என்ன. இதில் கூட ஆச்சர்யம் எனக்கு. அவரும் சல்லாபிக்கும் எந்த பெண்ணும் முகம் தெரியாதவர்கள் அல்ல. நன்கு அறிமுகமான முகங்கள். நடிகைகள். பிரபலங்கள். மற்ற விஞ்ஞானிகளின் மனைவிகள்.
முதல் நாளில்தான் அவர்களுடனான சந்திப்பு நடந்திருக்கும். அப்போதெல்லாம் நான் உடனிருப்பேன். ஆனால் இப்போது எல்லாம் தனியாக இருப்பார். என்னை மறந்துவிட்டாரா இல்லை, நான் மறக்கப்பட்டேனே என்பதில் குழப்பம் உண்டு.
இப்போதைய துவாரவழியில் பார்க்கையில் தலையில் நங்கென்று யாரோ கொட்டுவது போல இருந்தது.
அன்றைய வாக்குவாதம் , உங்களுக்கு நினைவு இருக்கிறதா..? நீங்கள் மறந்திருந்தாலும் நான் எப்படி மறப்பேன். அந்த விஞ்ஞானிதான் அறைக்குள் இருக்கிறார். இருக்கிறார் என்றால் வெறுமனே இருக்கிறார் இல்லை, சரியா உதை வாங்கிக் கொண்டிருக்கிறார். எங்கள் விஞ்ஞானியின் நடுநடுங்கும் கையால் அவ்வளவு அடிவாங்கியும், அசராமல் நின்றவாரே இருக்கிறார்.
என்ன மனுசன் அவன், அதான் அந்த அடிவாங்கும் விஞ்ஞானி. அன்னிக்கு என்னமோ வீரன் மாதிரி பேசி எங்க விஞ்ஞானியை மூக்கொடிச்சாரு. இப்போ என்னான்னா இப்படி அறையும் அடி உதையும் வாங்கிட்டு நிக்கறாரே.
ஆசை தீர அடித்தவராய் விஞ்ஞானி மூச்சிரைக்க அமர்ந்தார். உட்காந்த இடத்தில் இருந்தே கையில் எதையோ எடுத்தார். ஏதோ ரிமோட் போலதான் எனக்குத் தெரிந்தது. அடிவாங்கியிருந்த விஞ்ஞானியின் முன் ரிமோட்டை நீட்டி அதன் விசையை அழுத்தினார். என்ன ஆச்சர்யம்..!
தொலைக்காட்சி படம் போல பொறிப்பொறியாக மாறி , மாறி, மாறியே காணாமலே போய்விட்டார். நிச்சயம் காணாமல்தான் போய்விட்டார். ஒரு முறைக்கு பலமுறை கண்ணை கசக்கி, கசக்கி , கசக்கியே கண்ணீர் வந்தும் காணும் இடத்தில் அந்த விஞ்ஞானி இல்லை.
அந்த நேரம் எங்கள் விஞ்ஞானி சிரித்த சிரிப்பு இருக்கிறதே. சமீபத்திய தமிழ் சினிமாவில்கூட அந்த அளவுக்கு சிரிக்கும் நடிரகர்கள் இல்லை.
இன்னமும் இப்படி துவாரத்தில் பார்த்தால் ஆபத்து என ஆழ்மனம் சொல்லியது. உடனே வீடியோவை தட்டிவிட்டு என் இருக்கையில் அமர்ந்தேன். வேலை செய்வது போல நடித்தேன். அது என்னமோ வழக்கமானதுதான். எது? நடிப்பது. நான் மட்டுமா. சரி அதை விடுங்கள். நான் உட்காரவும் விஞ்ஞானி வெற்றிக் கழிப்புடன் வெளிவரவும் சரியாக இருந்தது. முன்று நாளாய் தேய்ந்துப் போயிருந்த முகம் இப்போது பிரகாசமாய் இருந்தது.
அவர் என்னைப் பார்த்த பார்வை, திருப்தி கலந்த சாதித்தப் பார்வை. வந்த வேகத்தில் என்னைப் பார்த்த வேகத்தில் வெளியேறிவிட்டார். உடனே நான் தட்டிவிட்டிருந்த வீடியோவை நான் விட்ட இடத்தில் இருந்து பார்க்க ஆரம்பித்தேன்.
ரிமோட்டின் விசையை அழுத்திய பிறகு அந்த விஞ்ஞானியின் உருவம் மறைந்தது. மீண்டும் அந்த ரிமோட்டில் வேறு ஒரு விசையை அழுத்த அதே இடத்தில் அடிவாங்கிய விஞ்ஞானியின் மனைவி தோன்றினாள். இவரும் அவள் அருகில் செல்கிறார். அவள் கன்னத்தை வருடி ஏதோ சொல்கிறார். பின் மீண்டும் கையில் இருக்கும் ரிமோட்டின் விசையை அழுத்துகிறார். விஞ்ஞானியின் மனைவியும் பொறிப்பொறியாக மாறி மறைய ஆரம்பித்தாள். அவர் வெளியாகிறார்.
ஒன்றுக்கு இரண்டு முறை அந்த வீடியோ காட்சியைப் பார்த்தேன். எனக்குத் தெரியாமல் விஞ்ஞானி செய்திருக்கும் கண்டுபிடிப்பு இப்போதுதான் புலப்படுகிறது.
என்னை அருகில் வரவிடாமல் , விஞ்ஞானி செய்த கண்டுபிடிப்பு இதுதான். உங்களுக்கு புரிகிறதா...? தெரிகிறதா..?
தெரியாவிட்டாலும் சரி , புரியாவிட்டாலும் சரி. எனக்கே இத்தனை மாதம் கழித்துதானே தெரிந்தது. சொல்கிறேன் கவனமாக கேளுங்கள்.
கோவமாக இருந்தாலும் காமமாக இருந்தாலும், வடிக்காலாய் தேவை இன்னொரு மனிதர்கள். ஆம். மனிதர்கள். அதுவும் இன்னொரு மனிதர்கள். அதைத்தான் உருவாக்குகிறார் எங்கள் விஞ்ஞானி. அன்று நான் பார்த்ததாக சொன்னது நினைவில் இருக்கிறதா..? இவர் சல்லாபித்த நடிகைகள், பிரபலங்கள் , மற்ற விஞ்ஞானிகளின் மனைவிகள் எல்லாமே நிஜம் அல்ல. அனைவரும் இவரால் உருவாக்கப்பட்டவர்கள்தான்.
யாரையெல்லாம் அடிக்கவேண்டுமோ அவர்களையும் , யாரையெல்லாம் அணைக்க வேண்டுமோ அவர்களையும் நாமே உருவாக்கலாம். இனிமேல் கோபமும் காமமும் நம்மை அடிமைப்படித்தாது. இனி எந்த சாமியாரும் ஆன்மிக பரிசோதனை செய்யலாம் , கேள்விகளுக்கு இடமே இருக்காது. எப்படி இருக்கும், ரிமோட்டில் ஒரு விசைதானே.... ஒரு விசை... ஆமாம் எந்த விசை. நினைவில் வரவில்லையே.... வீடியோவிலும் இருக்கவில்லையே. இனி............
முதல் நாள்,
மறுநாள்,
இப்படியே சில நாட்கள்.
ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டேன். ரொம்ப சுலபம்தான். முதலில் நமக்கு தேவைப்படுகிறவரை கண்டறிய வேண்டும். நான் கண்டறிந்தது மூன்றெழுத்து நடிகையை. என் வயது அப்படிங்கோ. நடிகையின் முழு உருவப் புகைப்படத்தை கொண்டுவரவேண்டும். கணினிக்கு அருகில் இருக்கும் வெள்ளை பெட்டியில் புகைப்படத்தை சொருகனும். முதலில் ரிமோட்டின் விசையை அழுத்திக்கொண்டே புகைப்படத்தின் மீது சிகப்பு விளக்கை படும்படி பார்க்க வேண்டும். பிறகு ஐந்தே நிமிடம்தான். ஆமாம் ஐந்தே நிமிடம்தான். புகைப்படம் தானாகவே வெளியில் வந்துவிடும்.
உடனே நாம் விரும்பிய மனிதரின் உருவம் வந்துவிடும். இதோ நான் விரும்பிய மூன்றெழுத்து நடிகையும் வந்துவிட்டாள். அட, அட என்ன அழகு, எத்தனை அழகு. அப்படியே சாப்பிடலாம் போல இருக்கிறாள்.
ஐயோ யாரோ வருகிறார். யாராக இருக்கும், வீணாய் போன விஞ்ஞானியாகத்தான் இருக்கும். இன்னமும் நான் ஒன்னுமே ஆரம்பிக்கலையே, அதற்கு முன்னாலேயே எல்லாம் முடிந்துவிடும் போலிருக்கிறதே. என்ன போலிருக்கிறதே..! எல்லாம் முடிந்தேவிட்டதே.
எந்த விசையை அழுத்துவது என தெரியவில்லையே. என்ன செய்வேன். எப்படி இவளை மறைய வைப்பேன். பதட்டமாய் இருக்கிறதே. அவர் வந்துக் கொண்டிருக்கிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார். அதற்குள் என்ன செய்யலாம். கண்டிப்பாக எதையாவது செய்யனும்.
புகைப்படத்தை சொருகிய வெள்ளை பெட்டியை திறந்தாகிவிட்டது. முன்பு வந்த விளக்கு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறதே. அதோ, அதோ அவளும் மறைகிறாள். தப்பித்தேன். இது என்ன கொலையா..? நானே உருவாக்கி நானே அழித்தேன். என்ன இது இந்த வெள்ளை பெட்டிக்குள் எனது புகைப்படமும் இருக்கிறதே. அப்படின்னா நானும் உருவாக்கப்பட்ட மனிதனா. யார் நான். அவர் கதவை திறக்கிறார். சத்தம் கேட்கிறது. நான் தப்பித்திடுவேன். நிச்சயமாய் தப்பித்திடுவேன்.
பாருங்கள் நானும் கொஞ்சம் கொஞ்சமாக பொறிப்பொறியாகிறேன். மறையப்போகிறேன். மறையும் முன்பாகவே என் புகைப்படத்தை ஏதாவது செய்யனும். எப்படி..? நான், மறைந்துவிட்டானே. இனி...
- தயாஜி -
0 comments:
கருத்துரையிடுக