உயரம் என்றால் உள்ளூர பயம். அது உள்ளே ஊறும் சமயம் உடம்பு வியர்த்து கொட்டும். ஏணியின் ஏறி நிற்பதற்கு முன்னமே உடல் உரோமங்கள் எல்லாம் நின்றுவிடும். இது போதாதென்று ஒரு முறை தலையில் அடிபட்டதால் உயரம் ஏறுதல் எனக்கு கூடுதல் பயத்தையும் மயக்கத்தையும் கொடுக்க ஆரம்பித்து விட்டது.
ஆனால், எனக்கு உயரம் ஏறுவது சிறுவயதில் இருந்து மிகவும் பிடித்த ஒன்று. ஆரம்பத்தில் நண்பர்களுடன் எங்கள் தோட்டபுற வீடுகளுக்கு அருகில் இருக்கும் காடு மலைகளில் ஓடிப்பிடித்து விளையாடுவோம். மலைகளில் ஆளுக்கு ஒரு பக்கமாக பாறைகளை பிடித்து ஏறி நிற்போம். மரத்தின் உச்சியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்போம்.
நாளாக நாளாக இன்னும் சொல்லப்போனால் நாளை என்ன நடக்கும் என்ற எண்ணம் தோன்றியதும் பல பயங்கள் வந்து சேர்ந்து கொண்டன. மலையில் சறுக்கி விழுந்தால் என்ன ஆகும்? மரக்கிளை ஒடிந்து கீழே விழுந்தால் என்ன ஆகும்? வீட்டில் தெரிந்தால் இன்னொரு காலையும் ஒடித்துவிடுவார்களே எப்படி நொண்டிக்காலுடன் பள்ளிக்கூடம் போவது? போன்ற அடிப்படையற்ற குழப்பங்களுக்கு பதில் கிடைக்காது பயம்தான் எங்களுக்கு கிடைத்தது.
ஆனால், எது நமக்கு பயம் காட்டுகிறதோ அதுதான் நம்மை வளரவும் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால், நம்மை பயங்காட்டுவதை நாம் பயம் காட்ட வேண்டும். எதுவெல்லாம் என்னை பயமூட்டுகிறதோ அதனை ஒவ்வொன்றாக நேருக்கு நேர் சந்தித்து வருகிறேன். ஆனால் சொல்வது போல எளிமையாக அதனை சாத்தியப்படுத்த முடியாது.
உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் வீடியோக்களாக இருக்கட்டும், கயிறை பிடித்துக்கொண்டு மலைகளில் இருந்து விழுவதாக இருக்கட்டும், வான்குடையுடன் குதித்து பறப்பதாக இருக்கட்டும் எனக்கு சட்டென ஒரு புல்லரிப்பை ஏற்படுத்திவிடும். ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் நானும் இப்படி காற்றில் பறந்து காட்டுகிறேன் என்று இல்லாளிடம் பேசினேன். எப்போதோ பேசியதை சமயம் பார்த்து நிறைவேற்றும் வாய்ப்பை இல்லாள் ஏற்பாடு செய்திருந்தார். ‘WINDLAB INDOOR SKYDIVING’ மூலமாக காற்றில் பறப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தாள்.
இல்லாளின் தோழிக்கு அவரது வேலையிடத்தில் கிடைத்த வாய்ப்பை அவரது நண்பர்களுக்கு அவர் பயன்படுத்த; இல்லாள் அதனை எனக்காக பயன்படுத்தினாள்.
குறிப்பிட்ட இடத்திற்கு சீக்கிரமே சென்றுவிட்டோம். உடலில் உற்சாகம் இருந்தாலும், அங்கு எங்களுக்கு முன்னே காற்றில் மிதப்பவர்களைப் பார்க்க வயிற்றில் ஏதோ சுழன்றது. அடுத்த நாள் பார்க்கலாம் என மனதில் நினைத்து என்ன சொல்லி சமாளிக்கலாம் என நினைத்தேன். அப்போதுதான் தோழியின் உறவினர்கள் பிள்ளைகளுடன் வந்தார்கள். எல்லோரும் ஜாலியாக பறக்கலாம் என்றுதான் வந்தார்கள்.
ஆனால் அங்கு வந்ததும் ஆளுக்கு ஆள் பயம் தொற்றிக்கொண்டது. அவர்களுடன் சுவர் காற்றாடியின் காற்றுக்கே பறக்கக்கூடிய பையன் ஒருவனும் வந்திருந்தான். ஒருமுறை குழு புகைப்படம் எடுக்கும் போது அந்தப்பையன் சரியாக நிற்காததால், இடது கையினாலேயே அந்தப்பையனைத் தூக்கி எனது வலது பக்கத்தில் நிற்க வைத்துவிட்டேன். இன்று அவனும் இருந்ததால் என் மானத்தைக் காப்பாற்றும் கட்டாயம் வேறு வந்துவிட்டது. மனதில் தைரியத்தை வரவைத்துக்கொண்டேன்.
குழுவாக பேசி உற்சாகத்தை ஏற்படுத்திக்கோண்டோம். எங்களுக்கான நேரம் வந்தது. பறப்பதற்கு ஏற்ற ஆடைகளை அவர்களே கொடுத்தார்கள். தலைக்கவசம், காதுக்குள் வைக்க வேண்டிய தக்கை, கண்ணாடி போன்றவற்றை உடலில் பொருத்திக்கொண்டோம்.
பதினைந்து நிமிடத்திற்கு எங்களுக்கு வகுப்பும் நடந்தது. முக்கியமாக காற்றில் மிதக்கும் போது கால்கள் மூலம் எப்படி மேலே போவது கீழே வருவது, கைகளைப் பயன்படுத்தி எப்படி வலது இடது பக்கங்களுக்கு திரும்புவது என தெரியப்படுத்தினார்கள். உள்ளே பேச முடியாது என்பதால், முக்கியமான கை கால் அசைவுகளை எப்படி செய்ய வேண்டும் என்கிற குறியீட்டு மொழிகளைக் கற்றுக்கொடுத்தார்கள். என்ன ஒன்று, சொல்லிக் கொடுத்து பறக்க தயாரான உற்சாகத்தில் குறியீடுகள் மறந்துவிட்டன. நல்லவேளையே உள்ளே அதனை ஓவியமாக ஒட்டி வைத்திருந்தார்கள்.
எங்கள் முறை வந்தது. பெயர்களை வரிசையாக அழைக்கத்தொடங்கினர். ஒவ்வொருவராக சென்றோம்.
பெரிய குழாய் வடிவிலான அறை. கீழே ராட்ச்சச காற்றாடி, உள்ளே ஓர் உதவியாளர். குழாயின் கதவு திறந்ததும் கைகளைத் தூக்கிகொண்டு அப்படியே சாய வேண்டும். நாம் சாய்வதை காற்றோடு இணைந்து உதவியாளரும் நம்மை தாங்கி பறக்கவிடுவார். நம்மால் நம் கை கால்களை கட்டுப்பாட்டில் வைத்து காற்றில் பறக்க முடியும் என அவர் நம்பினால் அவர் விலகுவார். இல்லையெனின் ஒரு கை எப்போதும் நம் மேல் இருக்கும்.
முதல் சுற்றில் என்னால் எதனையும் சரிவர செய்ய முடியவில்லை. ஆனால் கற்றுக்கொள்ள முடிந்தது. புதிய அனுபவம். ஆனால் இரண்டாம் முறை கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தினேன். உடல் எடை அற்ற மனிதனாய் காற்றில் அப்படியே சுற்றுச்சுற்றி பறந்தேன். வித்தியாசமான அனுபவமாகவும் அது அமைந்தது. ஒரு தியானம் போல சுற்றி நடப்பது, சுற்றி இருப்பவர் என எதுவும் கண்களுக்கு தெரியவில்லை. பறவை போல முழு சுதந்திரமாக பறந்து கொண்டிருந்தேன்.
அதிக செலவில்லை, ஆனால் அளவிட முடியாத அனுபவமாய் அது அமைந்தது. வாய்ப்புள்ளவர்களும் ஒரு நாள் பறவை போல காற்றில் மிதந்து பாருங்களேன். விவரிக்க முடியாத அனுபவமாக அது அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக