- மாணவர்களுடன் ஒரு நாள் சந்திப்பு -
சமீபத்தில் செர்டாங் ஆரம்பநிலை தமிழ்ப்பள்ளிக்கு தோழர் பொன் கோகிலத்துடன் சென்றிருந்தேன். அவ்வப்போது இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு இப்படி செல்வது வழக்கம். ஆரம்பநிலை பள்ளி மாணவர்களிடம் பதின்ம வயதை எதிர்க்கொள்வதும் குறித்தும் ‘நல்ல தொடுதல் கெட்ட தொடுதல்’ குறித்தும் உரையாடுவோம்.
மாணவிகளுக்கு தோழர் பொன் கோகிலமும் மாணவர்களுக்கு நானும் தனித்தனி குழுவாக பிரித்து மாணவர்களுடன் உரையாடுவோம்.
என்னைக் குறித்த அறிமுகத்தை பொறுப்பாசிரியர் சொன்னதும் நான் உரையாடலைத் தொடங்கினேன். மாணவர்களின் குறும்புகள் ரசிக்கும்படி இருந்தன.
பத்தாண்டுகளுக்கு முந்தைய மாணவர்கள் வாழ்ந்த சூழலையும் இன்று மாணவர்கள் வாழும் சூழல் அதன் வழி அவர்கள் எதிர்நோக்கும் மறைமுக சிக்கல்களைக் குறித்து பேசினேன்.
மாணவர்கள் நமது பேச்சைக் கேட்க வேண்டும் என்றால் முதலில் அவர்களின் கவனத்தை நம் பக்கம் இழுக்க வேண்டும், அதோடு நமது பேச்சின் மீதான அவர்களின் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். அவற்றுடன் மணவர்களுக்கு சில பரிசு பொருட்களையும் எடுத்து வைத்திருந்தேன். என் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் மாணவர்களுக்கு பரிசு கொடுத்து மற்ற மாணவர்களையும் உற்சாகப்படுத்தினேன்.
உடல் சுத்தம். சுற்றுப்புற தூய்மை. பெற்றோரை மதித்தல். கல்வியில் கவனம் செலுத்துதல். நல்ல நட்பு. பெண் தோழிகளில் நட்பும் அவர்களுக்கான மரியாதையும். லட்சியத்தை அடைவதற்கான அடிப்படைகள். சமூக ஊடகங்களின் மோகம் எப்படி நம்மை தொந்தரவு செய்கிறது போன்றவற்றைக் குறித்து பேசினேன்.
என்னதான் தினமும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் சொல்லிக்கொண்டிருக்கும் விடயங்கள்தான் என்றாலும் புதிதாக ஒருவர் நன்கு அறிமுகமான ஒருவர் மாணவர்களுடன் பேசும்போது மாணவர்களுக்கு அது கொஞ்சம் நெருக்கமாக அமைகிறது.
மாணவர்களுடன் கலந்து பேசும் வாய்ப்பை எங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த செர்டாங் ஆரம்பப்பள்ளிக்கும் தலைமையாசிரியர்க்கும் பொறுப்பாசிரியர்களுக்கு அன்பும் நன்றியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக