சமீபத்தில் உள்ளூர் தனியார் தொலைக்காட்சி ஆஸ்ட்ரோ விண்மீனில் ‘மகரந்தம்’ என்னும் தொடர் நாடகம் ஒளியேறியது. உங்களில் சிலர் அதனைப் பார்த்திருப்பீர்கள். உங்களில் சிலர் உள்ளூர் நாடகம்தானே எதுக்கு பார்த்துகிட்டு என நினைத்திருப்பீர்கள். என்னதான் தரமான படைப்புகளை நம் கலைஞர்கள் கொடுத்தாலும் வெளிநாட்டு குப்பைகளுக்கு கொடுக்கும் கவனத்தில் பாதியைக் கூட பலரால் உள்ளூர் படைப்புகளுக்குக் கொடுக்க முடிவதில்லை. கொடுக்கவும் அவர்கள் விரும்புவதில்லை.
இங்கு கலைஞர்களே சக கலைஞர்களின் படைப்புகளைக் குறித்து பேசுகிறார்களா இல்லையா என ஆராய்வதிலிருந்து சிலவற்றைக் கண்டுகொள்ளலாம் அதையொட்டியப் பார்வைதான் இது. இவர்களுக்குள் என்ன போட்டியா இருக்கிறது? போட்டி யாருக்கிடையில் ஏற்படுகிறது என யோசியுங்கள். இரண்டு பலசாலிகளிடம்தானே. ஆக போட்டி போடுவதற்கு பலசாலிகள் வேண்டும் அவர்களிடம் பலமும் வேண்டும். அங்கு நடப்பதுதான் போட்டி. “ஒன்னு நீ.. இல்ல நானு” என சொல்லு இடம் அது.
ஆனால் நம் நாட்டு கலையுலக சூழலில் இது சாத்தியமா? சாத்தியமா என கேட்பதைவிட அவசியமா என கேட்கும்படிதான் நிலைமை இருக்கிறது. இன்றும் கூட நம் நாட்டு திரைப்படங்களுக்கு தினம் தினம் கூவிக்கூவி டிக்கட் விற்றுக்கொண்டிருக்கிறோம். டிக்கட்டுகளுக்கு ஸ்பான்சர் வாங்கிக்கொண்டிருக்கிறோம்.
இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்து மக்களிடம் நம்பிக்கையை வாங்கி அதனை காப்பாற்றுவதற்குள் அந்த நம்பிக்கையை இன்னொரு திரைப்படம் மூலம் உடைத்து விடுகிறார்கள். “என்னமா படம் எடுத்திருக்காங்க..!” என பிரமிக்கும் அதே நேரத்தில் “என்னா படம் எடுத்திருக்காங்க..?” என கோவக்கேள்வியையும் கேட்கிறோம் இரண்டுக்குமான கால இடைவெளிதான் மக்களிடம் உள்ளூர் கலைபடைப்புகள் மீதான ஐயத்திற்கு காரணம்.
சரி இனி தொடர்ந்து உள்ளூர் தொடர் நாடகமான மகரந்தம் என்னும் தொடர் குறித்து என் பார்வையைப் பகிர்கிறேன். இந்நாடகம் என்னை ஈர்ப்பதற்கான காரணங்களில் முதற்காரணம் அதன் தலைப்புதான். இரண்டாவது காரணம் இந்நாடகத்தின் அடிநாதத்தை தலைப்பிலேயே சொல்லிவிட்டார்கள். மகரந்தம் என்பதை தாவரங்களின் இனப்பெருக்கத்தை மகரந்த சேர்க்கை என சொல்கிறோம். அதன் செயல்முறையைப் பேசினால் கூட அவ்வளவு அழகாக இருக்கும். அதனை சுருக்கமாக இப்படி புரிந்து கொள்ளலாம் இரு தரப்பின் சேர்க்கை. இந்நாடகத்திற்கு அது ரொம்பவும் பொருந்தி வந்துள்ளது.
மகரந்தம் தொடர் நாடகத்தின் கதையைச் சுருங்க பார்க்கலாம். மனமுறிவு பெற்ற ஆணும் பெண்ணும் அவர்களின் பெற்றோர்/உறவுகள் மூலம் மறுமணத்தில் இணைகிறார்கள். எற்கனவே மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர்களால் அவ்வளவு சீக்கிரத்தில் மறுமணத்தில் இணைய முடியவில்லை. அவர்கள் அந்தச் சிக்கலை எப்படி எதிர்க்கொள்கிறார்கள். மறுமணத்தில் மனம் மீண்டும் காதல்வயப்படும் போது முன்னாள் காதலியும் (காதலனும்) வாழ்க்கைக்குள் வருகிறார்கள். மீண்டும் பழைய வாழ்க்கையைப் போலவே சிக்கல்களை இவ்வாழ்விலும் எதிர்க்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் செய்த அதே முடிவை (விவாகரத்தை) மீண்டும் எடுக்க நினைக்கிறார்கள். பிறகு உண்மை தெரிகிறது. தவறுகளைத் திருத்திக்கொள்கிறார்கள். புதிய காதல் அவர்கள் வாழ்க்கையை வசந்தமாக்குகிறது. அந்த சமயத்தில்தான் மனைவியின் முன்னாள் காதலன் அவர்கள் வீட்டு வாசலில் நிற்கிறான்.
ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கான கதாப்பாத்திரத் தேவையை இயல்பாகவே பூர்த்தி செய்திருக்கிறார்கள். நாயகனும் நாயகியும் தவிர மற்ற கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவையும் குடும்ப சிக்கலும் அவசர முடிவும் நல்ல நட்பும் என எல்லாவிதப் பார்வையாளர்களையும் திருப்திபடுத்த முயன்று அதனை சாதித்தும் இருக்கிறார்கள் படக்குழுவினர்.
மனமுறிவு பெற்றவர்கள் மீதும், மறுமணம் செய்பவர்கள் மீதும் சமூகம் ஒரு தவறானப் பார்வையையே வைத்திருக்கிறது. எடுத்தவுடன் அவர்கள் மீது விமர்சனத்தை வைப்போமே தவிர அவர்களின் பின்னணி குறித்து அறிந்து கொள்ள விரும்ப மாட்டோம். அதே சமயம் யாரோ ஒருவர் குற்றவாளியாகத்தான் இருக்க முடியும் என முன்முடிவு எடுத்துக்கொள்கிறோம். அடுத்தவர் வாழ்க்கையில் நமக்கான எல்லை எதுவென நமக்கு எந்த ஒரு அறிதலும் இருப்பதில்லை. மாறாக நாம் எவ்வளவு நல்லவர்கள் என காட்டுவதற்கு யாரோ ஒருவர் மோசமானவர் என காட்டி காட்டி பழகிவிட்டோம்.
மகரந்தம் தொடர் நாடகம் அதன் பார்வையாளர்களுக்கு சொல்ல வந்த விடயங்கள் ரொம்ப முக்கியமானது. வாழ்க்கை அதன் போக்கில் நமக்கு ஒரு செய்தி சொல்வதாக நான் நம்புகிறேன். அது இன்று நமக்கு புரியாவிட்டாலும் நாளை நமக்கு ஒரு சிறு புரிதலைக் கொடுக்கும்.
தன்னால் எந்தப் பெண்ணையும் உடலளவில் திருப்தி படுத்த முடியாது என தெரிந்தும் ஒரு பெண்ணை திருமணம் செய்து தனது குறையை மறைக்க மனைவி மீது சந்தேகம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தும் நாயகியின் முன்னாள் கணவன். உண்மையில் இது கவனிக்க வேண்டிய ஒன்றாகவே பார்க்கிறேன். திருமணத்திற்கு கண்ணுக்குத் தெரியாத கிரகங்களின் நிலவரங்களை பார்க்கத்தெரிந்த நமக்கு கண்ணுக்கு தெரிந்த உடற்கூறுகள் பற்றிய மருத்துவ பரிசோதனை மீது அக்கறை இருப்பதில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒரு சமயத்தில் திருமணத்திற்கு முன் ஆண் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்ட பெண் பற்றிய குறும்படம் வெளிவந்திருந்தது. ஏய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு குறும்படம் அது. மகரந்தம் என்னும் நாடகத்தில் இயல்பாகவே ஒரு சிக்கலுக்கான விழிப்புணர்வைக் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு இத்தொடரின் கதையும் கை கொடுத்திருக்கிறது.
மனமுறிவுக்கு பின்னர் வாழ்க்கை இருப்பதைக் காட்டும் கதையம்சம் கொண்ட மகரந்தம் என்னும் தொடர் நாடகம், மனமுறிவுக்கு அவசரப்படவேண்டாம் எனவும் சொல்கிறது. அதுதான் இந்நாடகத்தைக் குறித்து என்னை எழுதவும் வைத்திருக்கிறது. அதோடு இன்னொன்றும் இருக்கவே செய்கிறது. மனமுறிவு பெற்ற பின் மறுமணம் செய்துக்கொள்பவர்களின் வாழ்க்கையில் முன்னாள் மனைவியோ முன்னாள் கணவனோ மீண்டும் வருவதற்கான சாத்தியங்களின் பின் விளைவுகளையும் இக்கதையின் மேலடுக்கில் காட்டியுள்ளது.
நல்ல கதை. கதையைச் சிதைக்காத திரைக்கதை. திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வசனங்கள். வசனங்களுக்கு உயிர்கொடுக்கும் நடிகர்கள். நடிகர்களை அழகாகவும் எதார்த்தமாகவும் காட்டிய இயக்குனர், என ஒன்றின் பின் ஒன்றாக தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றி பார்வையாளர்களின் மனதில் குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்டது மகரந்தம்.
மகரந்தம் தொடர் நாடகத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனர்க்கும் கதை/திரைக்கதை/வசனம் எழுதியவர்க்கும் நடிகர்களுக்கும் வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக