Pages - Menu

Pages

ஏப்ரல் 28, 2021

- நிழற்குடை -

 #குறுங்கதை 2021 - 9

- நிழற்குடை -


"குழந்தைகள்னா அப்படிதான் இருக்கும்..."

"இல்ல டாக்டர்....."

"பாருங்க குமார். கவலைப்பட ஒன்னுமில்ல. முதல் முதலா நிழலை பார்க்கற குழந்தைங்களுக்கு பயம் ஏற்படறது இயல்புதான்...."

"ஆனா டாக்டர், இவன் சின்ன குழந்தை இல்லையே..."

    "உங்களுக்குத்தான் அப்படி தோணுது. எங்களுக்கு குழந்தைகள்தான். அப்படிதான் நாங்க அணுக முடியும். எனக்கு என்னம்மோ உங்களைதான் செக் பண்ணனும்னு தோணுது.."

    மேற்கொண்டு பேச்சை இருவரும் வளர்க்கவில்லை. அது தேவையில்லாத சிக்கலைக் கொடுக்குமென குமார் தெரிந்துக்கொண்டார். வெளியில் காத்திருக்கும் மகனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.

" சிவா... டாக்டர் மருந்து கொடுத்திருக்காங்க... சாப்டனும் சரியா.."

" எனக்கு மட்டும்தான் கொடுத்தாரா..? "

" இப்படிலாம் பேசக்கூடாதுன்னு சொல்லிருக்கேன் தான..."

" என் பிரண்டுக்கும் தானப்பா காய்ச்சல்.. அவன் பாவமில்லையா.. இருமிகிட்டே இருக்கான்..."

    இருவரும் வீட்டிற்குள் வந்தார்கள். அங்கும் இங்கும் சில உருவங்கள் கிடந்தன. ஓர் உருவம் ஆர்வமாய் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கிறது. ஓர் உருவம் கைபேசியில் எதையோ நோண்டிக் கொண்டு இருக்கிறது. ஓர் உருவம் கண்ணாடி முன் தன்னை அழகுப்படுத்தி கொண்டிருக்கிறது. வந்தவர்களை யாருமே கவனிக்கவில்லை.

    இருவரும் எந்த சத்தமும் எழுப்பாமல் மெல்ல நகர்ந்தார்கள். சுவரின் ஓரத்தில் அவர்களுக்கான இடத்தில் கரையலானார்கள். ஒரு சிறுவன் இருமலுடன் சுவர் பக்கம் வருகின்றான். அவனைப்போலவே அசைந்துக் காட்டிக்கொண்டிருந்தது சிறு நிழல்.

    வழக்கம் போல அந்த நிழலைப் பார்த்து பேசத் தொடங்கினான். சுவரில் இருந்து குரல் வந்தது,
"டாக்டர் உனக்கு மருந்து கொடுக்கலயாம்... சாரி பிரண்ட்.. என் மருந்தை நீ சாப்டுக்கோ...."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக