Pages - Menu

Pages

மே 01, 2021

- உயிரோவியம் -

 #குறுங்கதை 2021 - 10


- உயிரோவியம் -

    இன்னும் இரண்டு நிறுத்தங்கள்தான் உள்ளன. இறங்க வேண்டியவர்களுக்கு ஆர்வம் அதிகமானது. நல்ல வேளையாக இரயிலில் ஆட்கள் இன்று அதிகமில்லை. இருப்பவர்கள் அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இறங்குவதற்குள் வரைந்துவிடுவானா?

    அந்த ஓவியன் எதனையும் கண்டுகொள்ளவில்லை. இவ்வளவு அழகாய் ஒருத்தி எதிரில் அமர்ந்திருக்க கவிஞனுக்கும் ஓவியனுக்கும் கண்ணும் கவனமும் வேறெங்கே செல்லும். ஒரு நொடியும் தாமதிக்காமல் வரைய ஆரம்பித்தான் ஓவியன்.

    முதலில் அவனின் ஆடையையும் நடவடிக்கைகளையும் விசித்திரமாய் பார்த்தவர்கள் மெல்ல மெல்ல அவன் வரைந்துக் கொண்டிருந்த ஓவியத்தால் கவரப்பட்டார்கள்.

    எந்த சலனமும் இன்றி நொடிக்கு நொடிக்கு நொடி எதிரில் எதிர்ப்பட்ட தேவதையைப் பார்த்துப்பார்த்து வரைந்துக் கொண்டிருந்தான். ஓவியம் முழுமையடைவதற்குள் தத்தம் நிறுத்தம் வந்தவர்கள் அரைகுறை மனதுடனும் பலப்பல கேள்விகளுடனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே இறங்கினார்கள்.

    ஓவியன் வரைந்துக் கொண்டே இருந்தான். கடைசி நிறுத்தம் வரப்போகிறது. பயணிகளுக்கான அறிவிப்பை செய்துவிட்டார்கள். ஓவியம் முழுமையானது.

    பயணிகள் அனைவரும் ஓவியத்தை லயித்து பார்த்தார்கள். பைத்தியத்தால் இப்படி வரைய முடியுமா என்கிற சந்தேகமும் சிலருக்கு வந்தது. எழுந்த ஓவியன் எதிரில் இருப்பவளிடம் சென்றான்.

அவள் எழுந்தாள். சிரித்தாள். ஓவியத்தை வாங்கிக்கொண்டாள்.

    யாருமில்லாத இருக்கையில் ஓவியன் ஒற்றையாளாய் நின்றுக் கொண்டு பேசுவதை எல்லோரும் அதிர்ச்சியாய் பார்க்கலானார்கள். அவன் முன், வெற்றிடத்தில் ஓவியம் அப்படியே மிதந்துக் கொண்டு நிற்பது அதைவிட ஆச்சர்யத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக