#குறுங்கதை 2021 - 8
- கடைசி காபி -
எத்தனை நாட்கள்தான் தாங்கிக்கொள்ள முடியும். இதுதான் முடிவு. வேறு வழி இல்லை. கணவனிடம் சொல்லியும் பலனில்லை. இதுவெல்லாம் மாமியார் மருமகளுக்கு நடப்பதுதான். கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என்று விட்டுவிட்டார்.
வேலைக்கு போகக்கூடாது. ஆனால் வீட்டில் எல்லா வேலையையும் ஒருவரே செய்து முடிக்க வேண்டும். மருமகள் போல இல்லாமல் வேலைக்காரியை விடவும்
கீழாக நடத்துகிறார். மூச்சுக்கு முன்னூறு தடவையல்ல ஒவ்வொரு மூச்சுக்கும்,
"சாந்தா...!",
"சாந்தா...!!",
"சாந்தா..!!!" தான்.
அவளும் எதைத்தான் செய்து முடிப்பாள். ஒரு வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னமே பல வேலைகளின் பட்டியல் வந்துவிடும்.
எந்த கடுப்பில் இருந்தாரோ, காலையில் இருந்து சாந்தாவை படுத்தி எடுத்துவிட்டார். அவளால் இனி முடியாது. முடியவே முடியாது. வயதாகிவிட்டது. விட்டுக்கொடுக்க நினைத்தாள். ஆனால் அந்த எல்லையை மாமியார் தாண்டி விட்டார்.
கண்கள் கலங்கிய நிலையில் கனவுகள் கலைந்து விட்ட நிலையில் காபியில் விஷத்தைக் கலக்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு தேவை நிம்மதி. அது கிடைத்தால் போதும் என்கிற நிலைக்கு வந்துவிட்டாள். காபியைக் குடிக்க எடுத்தாள்.
"சாந்தா...!"
"சாந்தா...!!"
"சாந்தா.....!!!"
மாமியார் ஆரம்பித்துவிட்டார். கடைசியாக அவருக்கு எதையாவது செய்துவிட நினைத்தாள். அருகில் சென்றாள்.
கையில் காபி இருப்பதை பார்த்த மாமியார், "இதுக்குத்தான் கூப்டேன். பரவாயில்லையே. கையோடவே எடுத்து வந்துட்ட... மருமகள்னா இப்படிதான் இருக்கனும்... கொடு.."
முதல் முறையாக மாமியாரின் பாராட்டுகள் அவளை சிறகடிக்க வைத்தது. காபியை அவரிடம் கொடுத்துவிட்டு. சமையலறைக்கு வந்துவிட்டாள். அடுத்து மாமியாரை மேலும் அசத்த சமைக்க ஆரம்பித்தாள்.
அதோடு, காபியை பற்றி ஏதாவது சொல்லுவார் என காத்திருக்கிறாள். மாமியாரிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக