Pages - Menu

Pages

ஏப்ரல் 06, 2020

புத்தகவாசிப்பு_2020_4 ‘அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது’



      கதைகளை வாசிப்பதுக் கூட ஒரு தேடல்தான். என்னதான் தேடிக் கண்டுவிடப் போகிறோம் என தெரிந்துக் கொள்வதற்கு முன்னமே கதைகளில் நம்மை நாம் தொலைத்துவிடுகிறோம். கலை என்பது தேடுவதில் மட்டுமல்ல தொலைந்துப் போவதிலும்தானே இருக்கிறது.  

     அப்படி சமீபத்தில் வாசித்துத் தொலைந்துப்போன புத்தகம் தான் ‘அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது’. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை தொகுப்பு. மொத்தம் பன்னிரெண்டு கதைகள் அடங்கியத் தொகுப்பு. வாசிக்கின்ற கதைகளை அவ்வபோது ‘#கதை_வாசிப்பு_2020’ என்று என வலைப்பூவில் எழுதி வருகின்றேன். நமக்குப் பிடித்தவற்றையும் நம்மை கவர்ந்தவற்றையும் மற்றவர்களுடன் பகிர்வது கொடுக்கும் ஆனந்தத்திற்கு எல்லை உண்டா என்ன. கதைகள் குறித்து யாராவது பேசினாலோ எழுதினாலோ மீண்டும் சிறுவனாக உள்ளத்தால் பால்யம்  சென்றுத் துள்ளிக் குதிக்கிறேன். சில கதைகளால் வயோதிகம் சென்று சில மணி நேரத்திற்கு வெறுமையையும் உணர்கிறேன்.

         இச்சிறுகதை தொகுப்பில் இருந்த ‘அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது’, ‘புர்ரா’, ‘ரசவாதியில் எலி’, ‘மிருகத்தனம்’, ‘வயதின் கனவு’, ‘இருபது வயதின் அவமானங்கள், போன்ற கதைகளை விரிவாகவே எழுதியிருக்கிறேன்.

      ‘புத்தகவாசிப்பு’ பகுதியில் மீதமுள்ள கதைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

     ‘தரமணியில் கரப்பான் பூச்சிகள்.’  கரப்பான் பூச்சிகளை கொல்லும் மருந்து விற்பவனின் கதை. நேரடி விற்பனை செய்கின்ற இளைஞன் தன் வேலையில் சிக்கலை எதிர்க்கொள்கிறான். அதனை கலைந்து தன் உயர்த்திக்கொள்வதாக கதைச் செல்கிறது. நிச்சயம் அது வாசிக்கின்றவர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். கதையை வாசித்து முடிக்கையில் நம்மிடமே அந்த இளைஞன் மருந்து விற்கிறார். சட்டென ஏதோ கரப்பான் பூச்சி காலை உரசுவதாகப்பட்டது.

    ‘குதிரைகள் பேச மறுக்கின்றன’ கதையில், வெளியில் நாயுடன் செல்லும் அப்பா, குதிரையுடன் வீட்டிற்கு வருகிறார். மகனுக்கும் மருமகளுக்கும் அது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தங்களின் நாய்தான் குதிரையாக மாறிவிட்டது என அப்பா சொல்கிறார். அதன்பின் மகன் எதிர்க்கொள்ளும் சிக்கல்கள்தான் கதை. வயதான சமயத்தில் குடும்பத்தினரின் புறக்கணிப்பிற்கு ஆளாகின்றவர்கள் செய்யும் விசித்திரமான செயல்களை புரிந்துக்கொள்ள இக்கதை உதவும். ஏதாவது செய்து தங்களின் இருப்பை தங்கள் குடும்பத்தினர்களிடம் காட்டிவிட முயல்கிறார்களோ என நினைக்கத்தூண்டுகிறது.

      ‘பின்னிரவுத் திருடன்’. எல்லாவற்றில் இருந்தும் ‘கிளாரிந்தா’ ஒதுங்கியிருக்கிறாள். இளம் வயதில் திருமணம் செய்து கணவனை பிரிந்தவள். அவளது கணவன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வாழத்தொடங்கிவிட்டார். கிளாரிந்தா வழக்கமான பெண் போல இல்லாமல் இருக்கிறாள். உணர்வுகளும் நம்பிக்கையும் இல்லாமல்  வெறுமையையே வாழ்க்கையாகத் தொடர்கிறாள். அவளது செயல்களுக்கு எந்த அர்த்தத்தையும் யாராலும் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒரு நாள் அவள் வீட்டிற்கு ஒரு திருடன் வருகிறான். அவளது செயல்கள் அவனை ஈர்க்கிறது. அங்கிருந்து கதை வேறு விதமாக பயணிக்கிறது கிளாரிந்தா தனக்குள் மறைத்து வைத்திருக்கும்  காமத்தை அவள் கண்டறிந்தாலா இல்லையா என  இவர் சொல்லியிருக்கும் விதம் மீண்டும் வாசிக்க வைக்கிறது. கதையின் தொடக்கம் அந்த திருடனின் மரணத்தில் இருந்து தொடங்குகிறது.

        ‘பெரிய வார்த்தை’ இக்கதையை வாசித்துக் முடிக்கையில் என்னிடம் விடைகாண முடியாத   மௌனமே மிஞ்சியது. வார்த்தைகள் எந்த அளவிற்கு குடும்ப உறவுகளில் மனித மனங்களில் தீரா காயத்தை ஏற்படுத்தும் என்பதை சிறுவன் வரதனின் குடும்பத்தின் மூலமாக சொல்லியுள்ளார். ஒருவரின் கடந்த காலத்தைச் சொல்லிக்காட்டுவது நொடி நேர செயலாக இருந்தாலும் அது ஒருவரின் ஆயுள் முழுக்க தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கப்போகிறது என்பதை  நமக்கு மீண்டும் நினைத்துப்பார்க்க வைக்கிறது.

       ‘கிரேக்கத்து முயல்’ முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை. கொஞ்சம் பிசகினாலும் குழந்தைகளுக்கான கதை என சொல்லிவிடலாம். ஆனால் அப்படி சொல்லிவிட முடியாத சூட்சுமத்தை கதை முழுக்க பயன்படுத்தியிருக்கிறார். ‘முயல் ஆமை’ கதையை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். அக்கதையை குரங்கில் மூலமா அறிந்துக்கொண்ட முயல்கள் கோவப்படுகின்றன. அது ஒரு வரலாற்றுப் பிழையென கூட்டம் போடுகின்றன. கதை மாற்றி எழுதச் சொல்வதற்கு முயல்கின்றன. அந்த சந்ததிகள் தொடர்ந்து ஒவ்வொரு எழுத்தாளராக பார்த்து விண்ணப்பிக்கின்றன. பல புகழ்பெற்ற எழுத்தாளர்களை சந்தித்தும் முயல்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. கடைசியாக இக்கதையை எழுதிக் கொண்டிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனிடமே முயல் வந்து விண்ணப்பத்தை வைக்கிறது. முயலின் விண்ணப்பம் என்ன ஆனது என வாசித்துத் தெரிந்துக் கொள்ளலாம்.

இத்தொகுப்பில் கடைசிக் கதை , ‘படசாரா காத்திருக்கிறான்’.  தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கதை. சொர்க்கம் நரகம் செல்வதற்கான வழியை கண்டறிவதற்கு பிக்குணி ஒருவருடன் பயணிக்கிறார் அரசர். ஆள் நடமாட்டம் இல்லாத காடுகளில் தொடர்கிறது அவர்கள் இருவரின் பயணம். பல பருவ நிலைகளைக் கடந்தும் அவர்களின் பயணம் தொடர்கிறது. புத்தர் தோன்றிய அதே நேரத்தில் இரண்டு விருட்சங்கள் தோன்றியதாகவும் இன்னமும் அவை இருப்பதாகவும் பிக்குணி செல்கிறார். இரண்டில் ஒன்று சொர்க்கத்திற்கும் இன்னொன்று நரகத்திற்கும் செல்கிறதாம். அதிலேறி சொர்க்கம் சென்றுவிடலாம் என்கிறார். ஆனால் எந்த விருட்ச்சம் எங்கு செல்கிறது என யாருக்கும் தெரியாது. தேர்ந்தெடுத்த விருட்ச்சத்தை மாற்றவும் முடியாது. அதன் அருகில்தான் பிக்குணியின் குரு இருக்கிறார். அவரைத் தேடி பிக்குணி வர, சொர்க்கத்தை அடைவதற்கு அரசரும் வருகிறார். காட்டில் அவர்கள் அந்த குருவை பார்க்கிறார்கள். இரண்டு விருட்ச்சங்கள் அங்கே இருக்கின்றன, அதன் கீழ் அமர்ந்திருந்த குரு தலையை உயர்த்தி வானத்தையேப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் ஏன் அப்படி பார்க்கிறார். யாருக்காக காத்திருக்கிறார். பிக்குணி அவரை சந்தித்த காரணம் என்ன. அரசன் படசாரவின் நோக்கம் நிறைவேறியதா என்பதுதான் கதை.

நிறைவாக,

     எஸ்.ராவின் இந்த தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வாழ்க்கைச் சிக்கலை சொல்கிறது. அச்சிக்கல் சிறுகதையில் மட்டுமல்ல வாசிப்பவர்களின் மனதிலிருந்தும் வெளிப்படுவதுதான் அதன் சிறப்பு. வாசிக்கையில் நாமும் அங்கு ஒரு பாத்திரமாக கதைகளில் உலாவத்தொடங்கிவிடுகிறோம்.  சுவாரஷ்யம் ஒரு பக்கம் இருந்தாலும், வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை அர்த்தத்தையும் கேள்விகளையும் கொண்டதாகவே இச்சிறுகதைத் தொகுப்பு இருக்கிறது.

-    -    தயாஜி
 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக