மே 1962-ல் எழுத்து இதழில் சிறப்பு வெளியீட்டில்
வந்திருந்த கட்டுரைகள். கட்டுரைகள் என்பதைக் காட்டிலும் படைப்பாளர்களின் மனம் திறந்த
உரையாடல் என்பது பொருத்தமாக இருக்கும். இலக்கிய உலகில் மிக முக்கியமானவராக கருதப்படும்
சி.சு.செல்லாப்பா தொகுத்திருக்கிறார்.
எழுத்தாளர்களிடம்
‘எதற்காக எழுதுகிறேன்?’ என்ற தலைப்பைக் கொடுத்து கட்டுரையாக அல்லாமல் உரை வடிவத்தில்
எழுதச் சொல்லியிருக்கின்றார். புத்தகத்தை வாசிக்கையில் எழுத்தாளர்கள் நம்முன்னே மேடையமைத்துப்
பேசுவதுப் போலவே மனம் இயல்பாகக் கற்பனை செய்துக் கொள்கிறது.
தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், ஆர்வி, சாலிவாஹனன்,
கு.அழகிரிசாமி, க.நா.சுப்ரமணியம், ந.பிச்சமூர்த்தி, ஆர்.ஷண்முனசுந்தரம், சி.சு.செல்லப்பா,
வல்லிக்கண்ணன், லா.ச.ராமாமிருதம் ஆகியோர் தாங்கள் எதற்காக எழுதுகிறேன் என்ற பதிலைக்
கொடுத்திருக்கிறார்கள்.
இன்றும் கூட மூர்ச்சையாகிவிடாத கேள்விக்கு எழுத்துலகின்
முன்னோடிகளின் பதிலை வாசிக்கையில் பூரிப்பாகத்தான் இருக்கிறது.
அவர்கள் இதனை எழுதும் காலக்கட்டத்தைப் பார்க்கையில்
அவர்கள் அவ்வளவாக பலரால் அறியப்படாத அல்லது ஏதோ எழுதுகிறவர் என்கிற மாதிரியான பார்வையைத்தான்
கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது பார்க்கையில் தாங்கள் சொல்லியதில் எத்தனை
உறுதியாக இருந்திருக்கிறார்கள் என நினைக்க ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.
அடிக்கடி நிலையும் நிறமும் மாறிக்கொண்டிருக்கும்
சில எழுத்தாளர்கள் ஏனோ நினைவில் வந்து கொஞ்ச நேரம் இம்சை செய்தார்கள். சரி அதை விடுவோம்
‘எதற்காக எழுதுகிறேன்?’ என்கிற இந்த புத்தகம் மொத்தம் 112 பக்கங்கள்தான். கையடக்க புத்தகம்.
கையில் எடுத்து வாசிக்கத் தொடங்கினால், தானாக அடுத்தடுத்த பக்கங்களுக்கு நம்மை அழைத்துச்
செல்கிறது.
புத்தகத்தை வாசித்து முடித்ததும், தங்களை எழுத்தாளர்களாக
நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களுக்குள்ளேயே இக்கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம். அந்த
பதிலை அடுத்தவர்களுக்கு சொல்லியாகவேண்டிய கட்டாயம் இல்லாவிட்டாலும்; அவ்வபோது தங்களுக்கே
சொல்லிக்கொள்வது அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்.
-தயாஜி
அருமையான கண்ணோட்டம்
பதிலளிநீக்கு