Pages - Menu

Pages

ஏப்ரல் 07, 2020

புத்தகவாசிப்பு_2020_5 ‘கதைகள் செல்லும் பாதை’




     மிகுந்த மகிழ்ச்சியில் இதனை எழுதுகிறேன். புத்தக வாசிப்பு என்பது பொழுது போக்கிற்காக அல்ல. பொழுதும் போகும்தான் அதே சமயம் அதனை தாண்டியது அதன் பயணம். முதலில் கதை எதனால் சொல்லப்படுகிறது யாருக்காகச் சொல்லப்படுகிறது என்பது யோசிக்கையில் மனதில் பல பதில்கள் கிடைக்கும். என் வரையில் அது ஒரு வழிகாட்டியின் தகவல் பறிமாற்றம். வழிகாட்டுதல் என்பது பயணத்திற்கு எத்தனை உதவியாக அமையும். மிக நீண்ட பயணத்தின் சிக்கல்களை கலைவதற்கும், கேள்விகளை முன்வைக்கவும் வழிகாட்டி உதவும். அதெப்படி வழிகாட்டி கேள்விகளை முன்வைக்க உதவும். நம் கைக்கு கிடைத்த வழிகாட்டியில் செல்ல வேண்டிய இடம் இருக்கிறது. ஆனால் அவ்வழியில்தான் செல்லவேண்டும் என்பதில்லை, பயணம் செய்து பழகியவர்கள் காட்டில் கூட காற்றில் வழி திசை அறிந்து பயணிப்பார்கள்தானே. இதன் வழி நமக்கான வழியை நாம் கண்டுக்கொள்ளலாம்.

      நான் ஒரு ‘குறுங்கதை’ எழுதியிருந்தேன். தனது வேண்டுதலுக்காக திடீர் பக்தன் மலைமேல் ஏறுகிறான். அவ்வழி முழுவதும் ஒத்தையடிப்பாதை. உயிரை பணையம் வைத்து மூன்று நாட்கள் பல சிக்கல்களை கடந்து அவன் கோவிலை அடைகிறான். கோவில் வாசலில் ஒருவர் கேட்கிறார்; “ஏன்பா அதான் முன்பக்கமா நல்ல சாலை போட்டிருக்காங்களே, கார்லயே வந்திருக்கலாம்தான..?”. அப்போது அந்த பக்தனின் மனநிலை எப்படியிருந்திருக்கும். ஒரு முறை இருமுறை என்றால் அது அனுபவமாக இருந்திருக்கலாம் ஆனால் ஒவ்வொரு முறையும் இப்படி பயணிக்கும் மனிதனுக்கு விரக்தி வந்துவிடாதா? வாசிப்பும் அப்படித்தான். உங்களுக்கு புத்தகங்கள் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் சரியான புத்தகங்களை வாசிக்கவில்லை என்பது பொருள் என ஆங்கிலத்தில் சொல்வார்கள். சரியானதை வாசிக்காமல் அடுத்தவர் வாசிப்பை குறை சொல்பவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்தானே.

        பல ஆண்டுகள் பயணிக்க வேண்டிய பாதைக்கு உங்களிடம் ஒருவர் வழிகாட்டியைக் கொடுக்கிறார். அதிலும் அவர் கொடுத்திருப்பது பல ஆண்டுகளாக அவர் தேடி அழைந்த பயணத்தின் குறுக்குவழி என்றால் சொல்ல வேண்டுமா?. அதனைத்தான், ‘கதைகள் செல்லும் பாதை’ என்ற தலைப்பில் வாசகர்களுக்கு  கையில் கொடுத்திருக்கிறார் எஸ்.ரா. வாசகர்களுக்கு முக்கியமான எழுத்தாளர்களுக்கு  அத்தனை முக்கியமானது இந்த புத்தகம். இதனைக் கொடுத்த அவரின் கைகளுக்கு வாசகனாய் என் முத்தத்தைக் கொடுத்துவிடுகிறேன்.
     புத்தகத்திற்குச் செல்வோம்.

        ‘கதைகள் செல்லும் பாதை’ உலகப் புகழ்பெற்ற சிறுகதைகளையும் அதன் நுட்பங்களையும் அழகியலையும் நமக்கு கற்றுத்தருகின்றன. வடிவத்தில் சோதனை செய்த கதைகள், மிகைக்கற்பனையும் புனைவும் கொண்ட கதைகள் என பல மாறுபட்ட கதைகளை இப்புத்தகம் அறிமுகம் செய்கிறது.

     மொத்தம் 23 தலைப்புகளில் இக்கட்டுரைகளை எழுதியுள்ளார். அதிலிருந்து சில தலைப்புகளைப் பார்க்கலாம். அருண் ஜோஷி: பயமும் காமமும், போர்ஹே: இரண்டு குற்றங்கள், ரஷ்யாவிற்கு வெளியே, ஆண்டன் செகாவ்: எழுதப்படாத கதைகள், அம்ரிதா ஏயெம்: விலங்குகள் நடத்தை, எட்கர் கெரெட்: தலைகீழ் மாற்றம்.

           பல முக்கியமான எழுத்தாளர்கள்  இப்புத்தகத்தின் வழி அறிமுகமாகிறார்கள். முதல் கட்டுரையில் சாகித்ய அகாதமி பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளர் அருண் ஜோஷியை குறித்தும் அவரின் ‘குழலூதும் பையன்’ சிறுகதை குறித்தும் பேசுகிறார். வணிகனின் மனம் எப்படி அவரது வாழ்வையும் கணக்கிட சொய்கிறது என்பது கதை. தனது பயத்தை காமத்தின் வழி கடக்க முயற்சிக்கிறார். பயத்தை கலைவதற்கே இன்னொரு பெண்ணின் துணை அவருக்கு தேவை. அவரின் கணக்கு சரியானதா இல்லையா என்பதுதான் கேள்வி. ஆனால் கதையின் முடிவில் விரக்தியில் நடக்கிறார். வழியில் சிலர் அவரிடம் கொள்ளையடிக்கிறார்கள். சண்டை செய்கிறார்கள். அடி வாங்கி மயங்கி விழுகிறார். அவருக்கு ஒரு சிறுவன் உதவுகிறான். பொழுது விடிகிறது. அச்சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு பணம் கொடுப்பதற்கு தான் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்று பணம் கொடுக்கப்பார்க்கிறார். அச்சிறுவனைக் காணவில்லை. அவன் யாராக இருக்கும் என்கிற கேள்வியே வாசகர் மனதில் பல பதில்களைக் கொடுக்கின்றன.

          ஜென் கவிதைகளைப் போலவே சிறுகதைகளையும் கவித்துவமான வரிகளைக் கொண்டு எழுதுகிற ஜப்பானிய  எழுத்தாளர்  ‘யாசுனாரி கவாப்ட்டாவைக்’ குறித்துச் சொல்கிறார். பாலியல் தொழில் செய்யும் பெண்ணிடம் வயதானவர் செல்கிறார். அந்த அறையில் கொசுவலை இல்லை. வாடிக்கையாளர்களின் தேவை முடிந்தப்பின் அவள்தான் இரவு முழுக்க அவர்களுக்கு கொசு கடிக்காமலிருக்க விசிறிக்கொண்டே இருக்கிறாள். அங்கு வரும் கிழவர் தூங்காத அவளின் கண்களை கவனிக்கிறார். கொசுவலை இல்லாததைத் தெரிந்துக்கொண்டு வெளியேறுகிறார். திரும்ப கொசு வலையோடு வருகிறார். கட்டிலை சுற்றி மாட்டிவிடுகிறார். அப்பெண் கட்டிலில் ஏறிப்படுக்கிறாள். கொஞ்ச நேரத்தில் அவள் கண்கள் சொக்குகின்றன. கொசுவலையில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்கிற அவள் கனவு பலிக்கிறது. ஆழ்ந்து உறங்கிவிடுகிறாள். விடிகிறது. கிழவரைக் காணவில்லை. எங்கே படுத்திருந்தார் எப்போதுப் புறப்பட்டார் என தெரியவில்லை. அவளது காதலன் வந்தே அவளை எழுப்புகிறான். அவர்களின் உரையாடல் அவளை மணப்பெண்ணாக உணர வைக்கிறது. பின்னர் நிதானமாக அவள் தன் கால் நகங்களை வெட்டத் துவங்குகின்றாள். நீண்ட நாட்களாக தன் கால்களைக்கூட அவள் கவனிக்காதது அவளுக்குத் தெரிகிறது. நல்ல கதைகளை நகங்களில் இருந்துக் கூட சொல்ல முடியும் என்பதனை சொல்கிறார்.

         அடுத்து ரஸ்கின் பாண்ட் எழுதிய ‘இல்லாத கண்கள்’ சிறுகதையை சொல்கிறார். அவர் சொல்லி முடித்ததும் அக்கதையை தேடி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டிவிருகிறது. ரயிலில் செல்லவிருக்கும் நாயகிக்கு அவள் குடும்பத்தினர் பல அறிவுரைகளைச் சொல்லி அனுப்புகின்றார்கள். ரயிலில் பயணம் செய்கிறாள். அவளது எதிரில் பார்வை இழந்த இளைஞன் இருக்கிறான். அவள் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவன் பேச்சை தொடங்குகின்றான். தான் பார்வை அற்றவன் என்பதை அவள் கண்டுக்கொண்டாளா என அவனுக்குத் தெரியவில்லை. அவனது உரையாடல் அவளை வெட்க்கப்பட்டு சிரிக்க வைக்கிறது.  உரையாடல் அதிகம் இல்லையென்றாலும் அவளின் இருப்பு அவனுக்கு பரவசத்தைக் கொடுக்கிறது. அடுத்த நிலையத்தில் அவள் இறங்கவேண்டும். வருகிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகின்றாள். அவள் இடத்தில் இன்னொரு இளைஞன் வருகிறான். பார்வையற்ற இளைஞன் முன்பு இங்கு அமர்ந்திருந்த பெண் போல தன அவ்வளவு கவர்ச்சியாக இல்லை என்றுச் சொல்லி சிரிக்கிறான். அதோடு அந்த பெண்ணைப் பற்றியும் அவளது அழகு, சிகை அலங்காரம் பற்றி ஆர்வமாக விசாரிக்கின்றான்.  ஆனால் அந்த இளைஞனோ, அதையெல்லாம் தான் கவனிக்கவில்லை எனவும் அவள் அழகாக பெண் ஆனால் அவள் முழுமையாக பார்வையற்றவள் என சொல்லி அதனை அவன் கவனிக்கவில்லையா என கேட்கிறான்.  கதையை அங்கு முடிக்கின்றார் ‘ரஸ்கின் பாண்ட்’. பார்வையற்ற இருவரின் ரயில் பயணத்தில் இருவருக்கும் அது பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அந்த சந்திப்பும் அவர்களுக்குள் ஏற்படுத்தும் சலனமும் இக்கதையில் அழகாகச் சொல்லப்பட்டிருப்பதாக சொல்கிறார்.

    இப்புத்தக வாசிப்பு, இன்பத்தையும் கூடுதலாக இன்ப அதிர்ச்சியையும் எனக்குக் கொடுத்தது. சமீபத்தில் நான் வாசித்து சிலாகித்த சிறுகதைகளையும் அதன் எழுத்தாளரையும் பற்றி நாம் பெரிதும் வியந்து பார்க்கும் எழுத்தாளர் முன்மொழிவதுதான் அது.

       ‘அம்ரிதா ஏயம்: விலங்கு நடத்தைகள்’ என்கிற கட்டுரை. நான் வாசித்த கதைகள் குறித்து தொடர்ந்து எனது வைப்பூவில் #கதைவாசிப்பு என்ற தலைப்பில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் எழுத்தாளர் அம்ரிதா ஏயம் குறித்தும் அவரது ‘விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்’ என்ற புத்தகத்தில் வாசித்த சில கதைகளைக் குறித்து எழுதியிருந்தேன். அதில் எனக்கு விருப்பமான கதைகளையும் பற்றி எஸ்.ரா மேலும் இப்புத்தகத்தில் பேசுகின்றார்.. நிச்சயம் இந்த புத்தகமும் அவரது கதைகளும் பரவலாக அறியப்படும் என நம்புகிறேன்.

     நிறைவாக,

        அதிகம் சொல்லிவிட்டேனா என்ன? உண்மையில் இன்னும் இப்புத்தகத்தைப் பற்றி சொல்லத்தான் தோன்றுகிறது. சொல்லத்தான் வேண்டும் . “யான் பெற்ற இன்பம்….” தான் காரணம். வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இந்த புத்தகத்தை தாராளமாக முன்மொழியலாம். வாங்கிப் பரிசளிக்கலாம். வாசிக்க வேண்டிய பல எழுத்தாளர்களின் அறிமுகமும் கதைகள் நாவல்களையும் நாம் அறிந்துக் கொள்ளலாம். 

     இக்கதைகளைப் பற்றி எஸ்.ரா சொல்வதைக் கவனித்தால் , கதை வாசிப்பில் எப்படியெல்லாம் நாம் நமது சிந்தனையை ஓடவிடலாம் என பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். மேலும் நம் வாசிப்பு தளத்தை விரிவுப்படுத்த இப்புத்தகம் உதவும். இதே தலைப்பில் எஸ்.ரா தனது இணையப்பக்கத்திலும் மேலும் பல கதைகள் எழுத்தாளர்கள் குறித்து எழுதியுள்ளார் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

-       தயாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக