நண்பன் வேலைக்கு வரவில்லை. அவனது வேலையையும்
சேர்த்துப்பார்க்க வேண்டும். அதன்படியால், இரவு நேர வேலையையும் முடித்து அதிகாலை, வீட்டுக்குப்
புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் விடியவில்லை.
அவரவர் வேலைக்கு அவரவர் மும்முரமாக பயணித்துக்
கொண்டிருந்தார்கள். இன்னும் இருபது நிமிடங்களில்
செல்வஜோதி வீட்டை அடைந்து விடலாம். காதில் பாடலைச் சொருகிக்கொண்டு தலையாட்டியவாரு மோட்டார்
போய்க்கொண்டே இருக்கிறது.
தனது மோட்டரை சர்ரென்று இன்னொரு மோட்டார் கடந்தது.
‘புட்டு மாயம்’ என இடியாப்ப பெட்டியில் எழுதியிருந்தது. இப்படி பல இடங்களில் தமிழ்
மாயமானதை நினைத்துக் கொண்டார்.
காலையில்தான் இதுபோன்ற பசியாறை வியாபாரம் நல்லபடியாக
இருக்கும். நேரம் கடந்தால், மிச்சமாகிவிடும். ஆக தன்னை கடந்துச் சென்ற ‘புட்டு மாயம்’
மோட்டர் மீது கோவம் வரவில்லை. அதற்கிடையில் இருவரின் மோட்டார்களையும் ஒரு பி.எம்.டபள்யூ
கார் கடக்கலானது. எப்படியோ இடியாப்ப வண்டியை உரசிவிட்டது. அப்படியே சாலையில் சருக்கனார்
‘இடியாப்பக்கார்’. இடியாப்பங்களும் சாலையில் சிதறின. கார் காணாமல் போனது.
செல்வஜோதிக்கு பகீரென்றது. உடனே மோட்டாரை நிறுத்தினார்.
சாலையில் கிடந்தவரை இழுத்து ஓரத்தில் அமரவைத்தார். அவரால் பேச முடியவில்லை. மயக்க நிலைக்கு
ஆளானார். சாலையில் கிடந்த இதர பொருள்களை எடுத்து ஓரம் வைத்து, ஆம்புலன்ஸ்க்கு அழைத்து
விபரம் சொன்னார். அவ்வழியே சென்றுக் கொண்டிருந்த வாகனங்களை நிறுத்த முயன்றுக் கொண்டிருந்தார்.
யாரும் நிற்கவில்லை. அவரவர் வேலை அவசரம் அவரவர்க்கு.
அவ்வழியே சில மோட்டார்களில் இளைஞர்கள் வந்துக்
கொண்டிருந்தார்கள். அதிஷ்டம்தான் என செல்வஜோதி நினைத்துக் கொண்டார். நிலமையைப் புரிந்துக்
கொண்டு அவர்களும் மோட்டர்களை நிறுத்தி ஓடி வந்தார்கள். இடியாப்பக்காரருக்கு தெரிந்த
ஒருவரும் அதில் இருந்தார். மயக்க நிலையில் இருப்பவரிடம் அவர் எதையோ கேட்க, அவரும் செல்வஜோதியைக்
காட்டினார். எல்லாம் புரிந்துவிட்டதாய் எழுந்தார் அந்த இளைஞன். வெகுண்டார்.
“டேய் மச்சான் இவன் தான்டா அண்ணனை மோதிட்டான்”
என கத்திக்கொண்டே செல்வஜோதியை அடிக்க, உடன் வந்தவர்களும் சேர்ந்துக் கொண்டார்கள். அதிகம்
அடி விழுவதற்கு முன்னதாகவே ஆம்புலன்ஸ் வந்துவிட்டது.
விபத்தானவரையும் முதலுதவி செய்தவரையும் ஒரு
சேர ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். என்ன வருத்தம் செல்வஜோதிக்குத்தான் அடி
அதிகம்.
-
தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக