அண்ணனும் அண்ணியும் அமர்ந்திருந்தார்கள். தங்கைக்கும்
அவளின் கணவனுக்கும் பிரச்சனை. அப்பா அம்மாவை அழைப்பதை அண்ணனும் விரும்பவில்லை. ஆனால்,
தன் வீட்டில் தனக்காக அம்மா, அப்பா, தங்கை என குறுகிய படையொன்றை மாப்பிள்ளை ஏற்படுத்திருந்தார்.
உரையாடல் ஆரம்பமானது, தன் மனைவி மீதான அனைத்து
சந்தேகங்களையும் மப்பிள்ளை சொல்லி முடித்தார். அவள் எதற்கும் மறுப்புச் சொல்லாமல் அண்ணனையும்
அண்ணியையும் கண்களில் ஜீவனின்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆதாரம் இல்லாமல் சிலவற்றை பேசுவது முறையாகாது
என்று அண்ணன் பேச ஆரம்பித்தார். முதலில் முகத்தில் குத்துவிட்டுதான் பேசுவது அவருக்கு
பழக்கம். இது தங்கையில் வாழ்க்கை என்பதால் பேசிவிட்டு பிறகு குத்திக்கொள்ளலாம் என்கிற
முடிவில் முடிந்தவரை பிடித்தமாக இருந்தார்.
“ஆதாரம் என்ன வேண்டி கிடக்கு ஆதாரம். அதான் பொழுதன்னிக்கும்
போனும் கையுமாவே இருக்காளே…” என்று கைபேசியை எல்லோர் முன்னிலையிலும் வைத்தார் மாப்பிள்ளை.
அதை எடுத்த அண்ணன், தங்கையை ஒரு முறைப்பார்த்தார். தங்கையால் அண்ணனின் கண்களை சில நொடிகளுக்கு
மேல் பார்க்க முடியவில்லை. தலை குணிந்தாள். அண்ணன் அவளது கைபேசியில் ஒவ்வொன்றாக தேட
ஆரம்பித்தார். தனது கைபேசியை எடுத்தார். தன் நண்பனுக்கு அழைத்தார்;
“சத்தீஸ் எனக்கு ஒரு உதவி வேணும்.. ஒரு நம்பர் அனுப்பியிருக்கேன். அந்த
நம்பரில் இருந்து சந்தேகம் படும்படி யாருக்கெல்லாம் படமோ மெசேஜோ அனுப்பப்பட்டிருக்குன்னு
தெரிஞ்சிக்கனும். கொஞ்சம் அவசரம்….. சரி… முதலில் சிலதை மட்டும் எனக்கு அனுப்பிடு…”
மாப்பிள்ளைக்கு மேலும் ரோஷம் வரத்தொடங்கியது.
தன் குடும்பத்தினரிடம், தனது வாழ்வை எப்படியெல்லாம் அவள் மோசம் செய்துக்கொண்டிருக்கிறாள்
என புலம்பலானார். அண்ணனுக்கு தொடர்ந்து சில புலனச்செய்திகள் வந்துக்கொண்டிருந்தன. அதனை
அப்படியே பொதுவில் வைத்தார்.
பல காதல் வசனங்கள், அரைகுறை படங்களின்
பறிமாற்றங்கள் என வந்துக்கொண்டே இருந்தன. குடும்பமே பேச்சற்றுப்போனது. தங்கை இப்போதுதான்
அழத் தொடங்கினாள்.
மாப்பிள்ளையின் எண்ணில் இருந்துதான் அந்த பறிமாற்றங்கள்
சிலருடன் நடந்திருந்தன. தங்கையின் கைபேசியில் இருந்து மாப்பிள்ளையின் பெர்சனல்
கைபேசி எண்ணைத்தான் அண்ணன் எடுத்திருந்தார். அடுத்த நொடியில் மூக்கு உடைபட்டு மாப்பிள்ளை
நிற்க அவர் இருந்த இடத்தில் குடும்பத்தினரின் ஆதரவுடன் தங்கை அமர்ந்து பேசலானாள்.
- - தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக