Pages - Menu

Pages

பிப்ரவரி 07, 2020

யாரோ விட்டுச்சென்ற நிழல்


என்னால் 
மிகச்சிறந்த ஓவியம் ஒன்றை
வரைய முடியவில்லை
யாரோ ஒருவரின் குரல்
தினம் தினம் என்னை 
ஓவியம் கேட்டு இம்சிக்கிறது
என்னை துரத்துக்கிறது
என்னை தூக்கி வீசுகிறது
என்னை ஏசுகிறது
என்னால் கணிக்கவும் முடியவில்லை
கவனிக்கவும் முடியவில்லை
தப்பிக்க முயற்சிக்கிறேன்

நீ கேட்கும் ஓவியத்தை
எப்படி வரைவது
எங்கிருந்து காண்பது
எதில் ஏற்றி வைப்பது
என்கிற எந்த கேள்விகளுக்கு
அக்குரல் பதில் கொடுப்ப்பதில்லை
திரும்பவும்
திரும்பத்திரும்பவும்
இடைவேளியின்றியும்
என்னை வரையச்சொல்லிக் 
கொண்டே கேட்கிறது

நான் மீளவேண்டும்
நான் மீண்டும் என் 
பழைய வாழ்க்கைக்குச் 
செல்லவேண்டும் என்றொரு 
மனுவை எனக்கு 
நானே கொடுத்துக் கொண்டேன்

என் கையெழுத்திடும் இடத்தில்
யாரோ என் பெயரில் எழுதியிருந்தார்கள்
அது என் கையெழுத்துதான்
ஆனால் நான் வைக்காதது
சின்ன வயதொன்றில்
அடிக்கு பயந்துஅப்பாவின் குருவிக்கூடு
கையொப்பத்தை வைத்து தப்பித்த
நொடியில் தொடங்கி
இன்றுவரை அது என் கையெழுத்தாக 
ஒட்டி வருகிறது
பலமுறை மாற்ற நினைத்தும்
குருவிக்கூட்டு புற்கள் மாறினதே அன்றி
கூட்டில் மாற்றமில்லை

இருந்தும்
இக்கூட்டை நான் கையொப்பமிடவில்லை
யாரோ என்னை பின் கடத்த காலத்தை
திருடிவிட்டார்கள் 
நிச்சயம் அது திருடாகத்தான் 
இருக்க முடியும்

என் பால்யம் 
யாருக்கெல்லாம் கேடு
என பட்டியல் போட முற்பட்டால்
கடவுளிடம் நடத்திவைத்த பேச்சு வார்த்தை 
மீட்டிவைத்தத் தப்புத்தாளங்களால்
என்னையன்றி யாருக்கும் 
பெரிதாக பாதிப்புகள் ஏற்படப்போவதில்லை

தூரிகைக்கான புள்ளிகள் எல்லாமே 
என் மூளைக்குள்ளே குதிக்க தொடங்கிட்டன 
இருக்கையிலும் என்னால் என் 
விரல்களுக்கு அதனை அனுப்பி 
வைக்க முடியவில்லை
என்னதான் என்னைத் 
தடுக்கிக்கொண்டிருக்கிறது என 
இன்னமும் எனக்கு பிடிபடவில்லை

என் இயல்பு வாழ்க்கையை 
நான் இழக்க விரும்பவில்லை
விட்டிப்போனதெல்லாம் போதும்
இழக்கவும்
இழந்துவிட்டதற்காக அழுவதற்கும்
யாரோ வந்து ஆறுதல் சொல்லுவார் 
என காத்திருப்பதற்கும்
தேடி அடையாளம் தெரிந்துக்கொள்வதற்கும்
போதவில்லை நேரம்

கைகள் ஊனப்படுத்துவற்கும் முன்னமே
ஒவ்வொரு புள்ளிகளாக 
பொட்டு வைக்கிறேன்
முதல் புள்ளியைப் பிரசுரிக்க மட்டுமே
எனது சுவாசப்பையில் ஏதோ கிழிந்து
அரைகுறை காற்றே 
என் வாழதலின்
அக்கறைக் கொண்டு உள் வந்து வெளி சென்றது

அடுத்தடுத்த புள்ளிகளில் என்ன 
மாயமோ காணவில்லை
ஓட்டைவிழுந்த மூச்சுப்பைகள் 
ஒன்றின் மீது ஒன்றாக ஒட்டிக்கொண்டன

சுவாசம் சீரானது
கைகள் வேகமானது
மூளை பதுக்கி வைத்திருந்த புள்ளிகளில் 
உள்ள வண்ணங்களையும் சேர்த்து
வெளிக்கொணந்தேன்

இது என் வேகமல்ல
இது என் விவேகமல்ல
இது என் பழக்கமல்ல
இது என் சிந்தனையல்ல
இது என் சுவாசம் அல்ல

ஆனால்
இயந்திரம் போல என்னை 
நானே இயக்கத்தொடங்கிட்டேன்

எல்லா புள்ளிகளையும் ஒன்றுச் சேர்ந்து
கூடு கட்டிப்பார்க்கும் தருணம்
காதில் சத்தமிட்ட
யாரோ ஒருவரின் குரல்
யாரோ ஒருவரின் தொந்தரவு
யாரோ ஒருவரின் அலட்சியம்
யாரோ ஒருவரின் அவமானம்
யாரோ ஒருவரின் தொல்லை
எல்லாம் மறைந்துவிட்டன

கூடி முடித்த 
புள்ளிகள் சேர்ந்த கண்ணாடியில்
ஓவியத்தை முழுமையாக் பார்க்கலானேன்

அது வேறு யாருமல்ல
நான் தான்
நானே தான்

சுயம் மறந்து
சுற்றியவனுக்கு 
தன் சுயமறிதல் என்பது
அறிந்துக்கொள்ளுவரை சாபம்தான்

கண்ணாடியில் சிரிக்கும் நான்
நிச்சயம் நானே தான்….

- தயாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக