Pages - Menu

Pages

பிப்ரவரி 11, 2020

அன்பின் பெயராலே…


பொம்மி நீ
பிடித்திருக்கும் கைக்கு எப்போது
மதிப்புண்டு தெரியுமா
நீ விட்ட பின்னும் உன்னை
புண்ணாக்காது புன்னகைக்கொண்டு
வழியனுப்பும் போதுதான்..
குழந்தையாக இருக்கும் போது
அவர்கள் விளையாட நீ வேண்டும்
கொஞ்சமாய் வளரும் நேரம்
அவர்களின் விளையாட்டாய் நீ வேண்டும்
இன்னும் கொஞ்சம் வளர்ந்த பின்
அவர்கள் சூழ்ச்சியின் பணைய பொருளாய் நீ
விளையாடியே ஆக வேண்டும்

இங்கு யார் சரி யார் பிழை
என்கிற பேதங்கள் மீது
எந்த முலாமையும் பூசிக்கொள்ளும்
திறமையாளர்கள் அதிகம்


உன் எதிரில் நிற்க வேண்டியவர்கள் யாரென
அவர்களே முடிவெடுப்பார்கள்
உன் எதிரி யாரென அவர்களே முடிவெடுப்பார்கள்
உன் எதிரி எதுவரையெனவும்
அவர்களால் முடிவெடுக்க முடியும்

திறமைசாலி
ஆனால் துர்பாக்கியசாலியும் கூட

கண்முன்னே உன் எதிர்காலம்
கேள்விக்குறியாகும்  போது
போர் தொடு போர் தொடு
என வீர முழக்கம் கொட்டுவார்கள்
அவர்களின் எதிர்காலம் என்றால்
தேர்விட்டு தேர்விட்டு
சமாதான இசை இசைப்பார்கள்

கவனமாக இரு
கவலையாக இராதே

எல்லா நியாயங்களுக்கு பின்னாலும்
ஒரு துரோகம்  இருக்கும்
எல்லா துரோகங்களுக்கு பின்னாலும்
ஒரு நியாயம் இருக்கும்

நீ யார் பக்கம் என்பதை நீயே
தீர்மானி
நீதானே பயணி

எப்போது யார் மௌனம்
யாருக்காக கலைகிறது
எப்போது யார் குரல்
யாருக்காக ஒலிக்கிறது
எல்லாமும் என்ன
காரியங்கள்தான்
காரண காரியங்கள்தான்

சரியான நேரத்தை பயன்படுத்து
இடைவெளியில் எதையாவது நிரப்பு

இதுவரை காணாமல் போனவர்கள்
யாருக்கானவர்கள்
இப்போதெல்லாம் வந்துக்கொண்டிருப்பவர்கள்
யாருக்கானவர்கள்

யோசி

எல்லாம்
எல்லாமே
ராஜாவிற்காகத்தான்

யார் அந்த ராஜா
எந்த தேசத்து ராஜா
எந்த தேசத்தின் ராஜா
எப்போதிருந்து ராஜா

சிப்பாய்களின் விசுவாசம்
மந்திரிகளின் ஆலோசனை
வீரர்களில் ஆயுதங்கள்
ஆனால் ராஜாக்களுக்குத் தேவை
போரும்
தன் புகழ் கூரும் ஊரும்

புது சிப்பாய்கள் வெகுளியானவர்கள்
மன்னிக்கலாம்
மந்திரிகள் புத்திசாலிகள்
மன்னிக்கலாம்
வீரர்கள் நம்பிக்கையானவர்கள்
மன்னிக்கலாம்
ராஜாக்கள் சூழ்ச்சியானவர்கள்
விலைபோகாதே

உன் விலையை அடுத்தவர் நிர்ணயிக்க
விட்டுவிடாதே

பிடித்திருக்கும் கைகள் விட்டுவிட்டாலும்
பேசிப்பழகிய வாய்கள் புறம் பேசினாலும்
பழகிய முகங்கள் போலி செய்தாலும்
ஏமாற்றங்களை உன் மீது ஏற்றி வைத்தாலும்
துரோகத்தை உன்னுள் புதைத்துப் போனாலும்

நில்
கவனி
மன்னித்து
கட

மன்னிப்பே உன் மருந்து
நம்பிக்கையே உன் வாழ்வு

ஆழம் காணா கடலல்ல
அடையாளமே கண்டறியாத
பிரபஞ்சமே உன் வழிகாட்டி

-       தயாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக