Pages - Menu

Pages

செப்டம்பர் 24, 2024

- நம்பிக்கையைச் சுமக்கும் கால்கள் -

 

நான் ஓர் எழுத்தாளன்,  புத்தக விற்பனையாளன். இன்றைய சூழலில் அது மட்டுமே ஒரு குடும்பத்தைச் சுமக்க போதுமானதாக இல்லை.  ஆகவே வேலை தேடியும் சில இடங்களுக்கு சென்று வருகிறேன்.

தெரிந்தவர்களுக்கு 'ரெசிமிகளை' அனுப்பி வருகிறேன். சிலர் காரணம் சொன்னார்கள். சிலர் இரண்டாம் முறையில் இருந்து என் அழைப்பை எடுக்கவில்லை. அவர்களுக்கு அதிகம் வேலையாகிவிட்டது போல.

சமீபத்தில் இணைய தமிழ் வானொலிக்கும் விண்ணப்பித்திருந்தேன். விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கலாம் என முயன்றேன். அவர்கள் புதிய முகங்களை தேடுவதாக சொல்லிவிட்டார்கள். 'என் முகம் அவ்வளவு பழசாகிவிட்டதோ' என நினைத்திருந்தேன். இன்னொரு இடத்திற்கும் விண்ணப்பித்திருந்தேன்.
'நீங்க புதுசா இருக்கீங்க' என நிராகரித்தார்கள். ஒரே நாளில் நான் பழைய முகத்தில் இருந்து புதிய முகத்திற்கு மாறிவிட்டேன்.

மெல்ல மெல்ல சேமிப்புகள் ஒவ்வொன்றும் இப்படியே கரைந்துவிட்டன. கிடைக்கும் 'டைப்பிங்'  வேலைகள் முதற்கொண்டு செய்து கொடுத்து சமாளிக்கிறேன்.

ரொம்பவும் சோர்வடைந்த போதுதான் எதேச்சையாக இந்தத் திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 'As far as my feet will carry me' என் கால்கள் என்னை சுமக்கும் (கொண்டும் செல்லும்) தூரம் வரை என புரிந்து கொள்ளலாம்.

ஒரு கட்டத்தில், இந்தப் படத்தையா பார்க்கவேண்டும் என தோன்றிவிட்டது. ஏற்கனவே சோகத்தில் சோர்ந்திருக்கிறோமே.

ஆனால் மெல்ல மெல்ல அந்த நாயகனின் பயணமும் அவன் சந்திக்கும் தடைகளும், அவனூடே என்னையும் அலைக்கழித்தது.
நானும் அவன் பின்னே நடப்பது போல் உணர்ந்தேன்.

அத்துணை மோசமான அபாயகரமான சூழலில் தன் உயிரைப் பிடித்துக்கொண்டு அந்த மனிதன் தன் குடும்பத்தைப் பார்க்கவே செல்கிறான். அவனைக் காட்டிலும் என் நிலமை மோசமில்லை. குடும்பமெனும் நம்பிக்கையை சுமந்து கொண்டு நாமும் எந்தத் தடையையும் தாண்டலாம், எந்தச் சூழலையும் எதிர்க்கொள்ளலாம் என எனக்கு நானே ஊக்கம் கொடுத்து கொண்டேன்.

நீங்கள் அந்த மனிதனின் பயணத்தில் ஒரு முறையாவது பார்வையாளனாக பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

முடிவில் நான் என் இலக்கை அடைவேனா அல்லது வெற்றி பெறுவேனா என தெரியாது. ஆனால் 'இப்படி ஒருத்தன் இருந்தான் அவன் கடைசி வரைக்கும் முயற்சி செய்துகிட்டேதான் இருந்தான், ஒருபோதும் அவன் தோல்விகளை ஒத்துக்கொள்ளவில்லை....'  என உங்கள் யாருக்கும் ஒரு நாள் உற்சாகம் கொடுக்கும் மனிதனாக நானும் நிச்சயம் இருப்பேன்..

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

செப்டம்பர் 12, 2024

தி.ஜானகிராமனின் 'முள் முடி'

 💙தினம் ஒரு கதை 12/30💙

எல்லா சமயத்திலும் நம்மால் நல்லவர்களாக நடந்து கொள்ள முடியுமா? நாம் நல்லவர்களாகவே இருந்தாலும் கூட நம்மால் யாருக்கும் வலியோ வருத்தமோ வராமல் இருக்குமா? என்கிற குழப்பத்திற்கு ‘முள் முடி’ என்னும் சிறுகதையின் வழி தெளிவு பெறலாம்.

தி.ஜானகிராமன் மிகச் சரியான கதாப்பாத்திரத்தை கதையின் முக்கிய கதாப்பாத்திரமாக தேர்வு செய்து அதற்கான பின்புலத்தையும் அமைத்திருப்பார். வெறுமனே ஆசிரியராக இல்லாமல், அன்பை போதிக்கும் அதன் வழி நடக்கும் போதகரையே ஆசிரியராக பயன்படுத்தியிருப்பார்.

எந்த ஒரு காரண காரியமின்றி தான் சொன்ன ஒரு வார்த்தை ஒரு சிறுவனுக்கு எவ்வளவு பெரிய மன உளைச்சலைக் கொடுத்திருக்கும் என நாம் வாசிக்கும் இடத்தில் நிச்சயம் செய்வதறியாது நிற்போம்.

அடிக்கடி எடுத்து வாசிக்கும் சிறுகதைகளில் இதுவும் ஒன்று. ஒரு வகையில் இது நமக்கான மன ஆறுதலைக் கொடுக்கும் கதை. நமது சொல்லும் செயலும் எல்லோருக்கும் நன்மைகளை மட்டுமே கொடுப்பதில்லை என்கிற தப்பித்தலை இச்சிறுகதை நமக்கு கொடுக்கும். வாசித்து பாருங்களேன்.

#தினம்_ஒரு_கதை #தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

செப்டம்பர் 11, 2024

இமையத்தின் 'பெத்தவன்'

 தினம் ஒரு கதை 11/30

  சிறுகதை என்ற அடையாளத்துடன் நான் வாசித்த அதிக பக்கங்கள் உள்ள கதைகளில் இப்போதும் மனதில் நிற்கும் கதைகளில் ஒன்று. பிறகுதான் சிறுகதைக்கும் நெடுங்கதைக்குமான தேவையைப் புரிந்து கொண்டேன்.

   மாத இதழொன்றில்தான் இக்கதையை முதலில் வாசித்தேன். அப்போது, 'பெத்தவனை' வாசிக்க ஒரு வாரம் எடுத்துக்கொண்டேன். வழக்கமாக சிறுகதைகளை ஒரே நாளில் வாசித்து முடிக்கும் எனக்கு இதுவே ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

  வாசித்ததையே திரும்பத் திரும்ப வாசித்துள்ளேன். முடிவை நெருங்க நெருங்க பதற்றத்தில் சிறுகதையை அப்படியே முடிவைத்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிடுவேன். என்னால் அவ்வளவு எளிதாக அந்த முடிவை நெருங்க முடியவில்லை. ஆனால் இப்போதைய மனநிலை அவ்வாறு இருக்கவில்லை.

   சாதிய வன்முறையை பல படைப்பாளிகள் தன் எழுத்துகளில் சொல்லியுள்ளார்கள். ஆனால் பெத்தவன் அதிலிருந்து மாறுபட்ட ஒன்றாகவே உணர்கிறேன். ஜாதிய விஷத்தால் வளர்ந்து நிற்கும் சமூகத்தில் எப்படி ஒரு காதல் பிழைக்கிறது என இக்கதையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 

   தன்னை சுற்றி பலம்கொண்டு எழுந்து நிற்கும் ஜாதிய மனோபாவத்தை, அந்தச் சமூகத்தை ஒரு தந்தை எப்படி எதிர்க்கொள்கிறார் என இமையம் சொல்லும் இடம் நம்முடைய மனதையும் கலங்கடிக்கும்.

  எதிர்ப்பாராத முடிவென்றாலும் இனியும் இப்படியான முடிவுகளுக்கு மனிதர்கள் தள்ளப்படக்கூடாது என்றே நினைத்தொன்றும். நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.


செப்டம்பர் 10, 2024

சுஜாதாவின் 'நகரம்'

 தினம் ஒரு கதை 10/30

எனக்கு வாசிப்பின் மீது அதிகம் ஆர்வம் வந்ததற்கு சுஜாதாவின் எழுத்துகளும் ஒரு காரணம். அவரின் எழுத்து நடை நம் வாசிப்பின் வேகத்தை அதிகப்படுத்திடவும் செய்யும்.

நாம் வாழ்த்து கொண்டிருப்பது நகரமா? நரகமா ? என சொல்லும் கதைகளில் இந்தக் கதைக்கும் இடம் உண்டு.

முழு மருத்துவமனையையும் சொல்லிவிட்டாரோ என தோன்றும்படி கதையை எழுதியிருப்பார். அவ்வளவு விவரங்கள் கதைகளில் இடம்பெற்றுக்கொண்டே இருக்கும். இப்போது வாசிக்க சில இடங்கள் அவசியமில்லை என தோன்றினாலும்  கதையின் முடிவு எல்லாவற்றையும் மறக்க வைக்கிறது.

என்ன நோயென்று தெரியாமல் தன்  மகளை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வள்ளியம்மாள், அது என்ன நோய் என்று தெரியாமலேயே அங்கிருந்து வெளியேறுகிறார்.

நம்பிக்கை எந்த இடத்தில் மூடநம்பிக்கையாக மாறுகின்றது என 'நகரத்தில்' சுஜாதா சொல்லியிருந்தாலும் அந்த நம்பிக்கை காப்பாற்றப்படவேண்டுமென  வாசகர்களையும் பிரார்த்திக்க வைக்கிறார். 


செப்டம்பர் 09, 2024

கு.அழகிரிசாமியின் 'இருவர் கண்ட ஒரே கனவு'

 💙தினம் ஒரு கதை 9/30💙

கனவு என்பது என்ன நினைவில் தொடர்ச்சியா அல்லது நிகழ்காலத்தின் போதாமையா? என்னும் கேள்வி இன்றும் கேட்கப்படுகின்றது. அதிலும் ஒரே கனவின் தொடர்ச்சியை விட்ட இடத்தில் இருந்து ஒருவனால் தினம் தினம் தொடர முடியுமா? அந்த சுழற்சியைத் தாண்டி அந்தக் கனவில் எல்லையை யாராவது அடைந்திருக்கிறார்களா என்ன? 

அப்படி தொடரும் ஒருவன் உண்மையில் உறக்கத்தில்தான் இருக்கிறானா? ஒருவேளை ஆழ்மனம் ஏதோ நம்மிடம் சொல்ல வருகின்றதோ ?. 

பாலோ கொய்லோ எழுதிய ‘ரசவாதி’யில் வரும் சண்டியாகோவிற்கு வந்த கனவின் பின்தொடரல்தானே அவனுக்கு கிடைக்கும் புதையல். ஆனால் அது அவன் காலுக்கு கீழேதானே இருந்திருக்கிறது. அதற்கு ஏன் அவன் அத்தனை  தூரம் பயணம் சென்றான்.

கனவுகள் குறித்து சிகமண்ட் பிராய்ட் எழுதியதைப் போல; நிதர்சனமாய் இருப்பதின் மறைமுக குறியீடுகள்தான் கனவா? கனவை புரிந்து கொள்ள முயன்றால் அது நம் ஆழ்மனதின் தேவையைச் சொல்லிவிடுமா?

இம்மாதிரி பல கேள்விகளைத் தொடங்கி வைக்கும் ஒரு சிறுகதையாகத்தான் நான் கு.அழகிரிசாமியின் ‘இருவர் கண்ட ஒரே கனவு’ சிறுகதையைப் பார்க்கிறேன். இரு சிறுவர்களின் மனநிலையை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்திருப்பார் எழுத்தாளர்.

இன்றைய நம் உலகம் அறிவியலால் தொழில்நுட்பத்தால் உயர்ந்து கொண்டே போனாலும்; நம் முந்தைய தலைமுறையில் வாழ்வை வாசிக்கும் போது மனம் அவர்களுக்காக அழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் எல்லா சமயத்திலும் பசித்த வயிற்றுக்கு யாரோ ஒருவர் சோறுபோடத்தான் செய்கிறார் என்பதுதான் எத்துணை பெரிய ஆறுதல்.

மரணத்தைப் புரிந்து கொள்ளாத வயதில் அம்மாவின் மரணத்தை இரு பிள்ளைகளும் எதிர்க்கொள்கின்றார்கள். அம்மா இறந்த அந்த இரவிலேயே கனவில் வருகிறார். அதுவும் தன் இரு மகன்களின் கனவில். இரு பிள்ளைகளும் ஒரே மாதிரி அம்மாவைக கனவில் காண்கின்றார்கள். உண்மையில் அது கனவுதானா? பிள்ளைகளுக்கு பிரியாவிடை கொடுக்க வந்த அம்மாவின் ஆன்மாவா? என நமக்குள் ஒரு தேடலை இச்சிறுகதைக் கொடுக்கின்றது.

குழந்தைகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களின் உணர்வுகளைத் தெரிந்து கொள்ளவும், கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை வாசித்துவிடுங்கள். ‘இருவர் கண்ட ஒரே கனவில்’ இருந்தும் நீங்கள் தொடங்கலாம்.

#தினம்_ஒரு_கதை #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

செப்டம்பர் 08, 2024

பிரபஞ்சனின் 'மரி என்னும் ஆட்டுக்குட்டி'

 தினம் ஒரு கதை 8/30

பிரபஞ்சன் எழுத்துகள் எனக்கு பிடித்தமானது. அவரின் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் வாசித்த அளவிற்கு அவரது நாவல்களை இன்னும் வாசிக்கவில்லை. விரைவில் அந்தக் குறையையும் கலையவேண்டும்.

'மரி என்கிற ஆட்டுக்குட்டி 'எனக்கு மிகவும் பிடித்தமான தலைப்புகளில் ஒன்று. திரும்பத்திரும்ப சொல்லிக்கொள்வேன். இந்தத் தலைப்பை புரிந்து கொள்ள எத்தணிக்கும் போதே நமக்கு பல்வேறு புரிதல்களைக் கொடுத்துவிடுகிறது.

அற்புத மரியை ஏன் ஆட்டுக்குட்டி என்கிறார் எழுத்தாளர்? வேறெந்த குட்டியையும் சொல்லியிருக்கலாம்தானே. ஏன் சொல்லவில்லை. ஆட்டுக்குட்டியிடம் அப்படி என்னதான் இருக்கிறது. அதைவிடவும் பூனைக்குட்டிகள் அழகாய் இருக்கின்றனவே? பிறகு எதற்காக, எழுத்தாளர் மரியை ஆட்டுக்குட்டியாகப் பார்க்கிறார்?

அது சரி, இது எந்த ஆட்டுக்குட்டி. கசாப்பு கடைக்காக தீனி போட்டு வளர்க்கப்படும் ஆட்டுக்குட்டியா? இல்லை இயேசுபிரானின் கைகளில் இருக்குமே அந்த வழி தவறிய ஆட்டுக்குட்டியா?

இது இயேசுவின் கைகளில் இருக்கும் ஆட்டுக்குட்டி என்றால், அந்தக் கைகளுக்கு சொந்தமான இயேசுதான் மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் ஒவ்வொரு ஆசிரியர்களும்.

சிறுகதையின் தொடக்கத்திலேயே அற்புத மரிக்கு டி.சி கொடுக்கச் சொல்கிறார்கள்.

விசித்திரமாக ஏதேதோ செய்யும்  மாணவியான அற்புத மரியை எல்லோரும் ஒதுக்கும் போது அவள் எதனால் இப்படி செய்கிறாள் என ஆசிரியர் அறிய முற்படுகின்றார். அவர்  அற்புத மரியைச் சந்திக்க மனைவியுடன் செல்கிறார். வீட்டில் அற்புத மரியை சந்தித்தபோது அவளின் மனவோட்டத்தையும் அவள் எதிர்நோக்கும் சிக்கல்களையும் ஆசிரியர் புரிந்து கொள்கிறார்.

ஓர் ஆசிரியருக்கும் மாணவிக்குமான உறவை ரொம்பவும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றிருப்பார் பிரபஞ்சன்.

அற்புத மரி, ஆசிரியரிடம் ஏன் அவர் தன்னை அடித்தோ திட்டியோ பள்ளிக்கூடத்திற்கு போகச்சொல்லவில்லை என கேட்கும் இடத்தில் நம்மை கலங்க செய்கிறாள்.

அதற்கு ஆசிரியர் கொடுக்கும் பதில், அற்புத மரிக்கு மட்டுமல்ல நாம் எல்லோருக்குமான ஒன்றுதான். அதனைத் தெரிந்து கொள்ள நீங்கள் 'மரி என்கிற ஆட்டுக்குட்டியை' வாசிக்க வேண்டும்.

#தினம்_ஒரு_கதை #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

செப்டம்பர் 07, 2024

கோபி கிருஷ்ணனின் 'புயல்'

 💙தினம் ஒரு கதை 7/30💙


உலகம் ரொம்பவும் மோசமானது என்கிற புகார்களுக்கு மத்தியில், நாமும்தான் அதில் ஓர் அங்கம் என பழகிவிட்டோம் என்பதை முகத்தில் அரையும் கதைகளில் இதுவும் ஒன்று.

நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்பவம்தான் கதைக்கரு. போலி பாவணைகளில் வாழும் மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு சுற்றம் காரணமா? அந்தச் சுற்றத்தில் நாமும் ஒரு அங்கமாக ஆகிவிட்டது காரணமா என்கிற கேள்வியை இச்சிறுகதை முன்வைப்பதாகப் பார்க்கலாம்.

உலகம் எத்தனை மோசமானது என மனைவிக்கு தெரியவேண்டும்  என கணவன் முடிவெடுக்கிறான். தான் தெரிந்துகொண்ட உலகம் 'சகிக்கவில்லை' என புலம்புகிறாள் மனைவி, ஏனெனில் அன்று அவள் எதிர்க்கொண்ட அனுபவம் அப்படி.

இந்த உலகம் மட்டுமல்ல உன் கணவன்; நானும் கூட மோசமானவன்தான் என  முன்கூட்டியே  சொல்வதற்கு,   மெல்ல மெல்ல மனைவிக்கு இந்த மோசமான உலகத்தை பழக்கிவிட்டு அதுதான் நிதர்சனம் என நம்பவைத்துவிட்டு தன் தவறுகளை 'எதார்த்தம்தான்' என மனைவியை எண்ண வைப்பதுதான் கணவனின் திட்டம் எனவாகவும் இச்சிறுகதையைப் பார்க்கலாம். அப்படி பார்த்தால், புயல் என்பது வெளியில் இருக்கவில்லை என்பது நமக்கு புலப்படும்.

இப்படி பல்வேறு கோணங்களில் அணுகக்கூடிய கதைதான்; தவறாது வாசித்து விடுங்கள். அந்தப் புயலை நாம் முன்னமே கண்டறிவோம்.

#தினம்_ஒரு_கதை #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

செப்டம்பர் 06, 2024

வண்ணநிலவனின் 'எஸ்தர்'

💙தினம் ஒரு கதை 6/30💙


   எந்த ஒரு தொடக்கத்திற்கும் ஒரு முடிவு அவசியம். நாம் ஏற்றுக்கொண்டாலும் சரி  ஏற்காவிட்டாலும் முடிவென்பது நிச்சயம் உண்டு. சமயங்களில் நம் கைகளே அந்த முடிவை எழுதும். நாம் எதிர்க்கொள்ளும் பயணத்தில் எல்லோரையும் உடன் அழைத்துச்செல்ல இயலாது.  தெரிந்தும் தெரியாமலும் பல இழப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த இழப்புகளுக்கு நாமே பிள்ளையார் சுழியும் போடுவோம்.

   சிறுகதைக்கு மட்டுமல்ல, நாம் வாழும் வாழ்க்கைக்கும் ஏதோ ஒரு முடிவு இருக்கவே செய்கிறது. முடிவென்பது முடிந்ததை மட்டும்தான் குறிக்கிறதா ? இல்லை இன்னொரு ஆரம்பத்தைக் குறிக்கிறதா ? என்பதெல்லாம் அவரவர் பாடு.

   வண்ணநிலவனின் ‘எஸ்தரை’ வாசித்து முடித்ததும், ஒரு நொடி கோவம் வந்துவிட்டது. அடுத்த நொடியே எஸ்தரால் வேறென்ன செய்திருக்க முடியும் என்கிற பரிதாபமும் வந்துவிட்டது. இதனை கருணை என கருதலாமா அல்லது இனியாவது நீ நிம்மதியாகு என எஸ்தர் கொடுத்த வரமாக கருதலாமா என்கிற பல்வேறு எண்ணங்களிலேயே சில நாட்கள் கடந்தன. இத்தனைக்கும் எஸ்தர் மீது பிரியம்தான் அதிகமாகியுள்ளது.

    இப்படியொரு சிறுகதையை நாம் எழுதிவிட மாட்டோமா என பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வறுமை கோடுகள் என சொல்கிறோமே,  அந்தக் கோடுகளை அழிக்கும் அழிப்பான்கள் முதலில் தன்னைத்தானே அழித்துக்கொள்வதின்; அழிக்கக் கொடுப்பதின் சுழற்சிதான் இந்த எஸ்தர்.

     முடிவெடுத்தல் என்பது என்ன? அது அத்தனை சுலபமானதா? என்ற கேள்வியை புரிந்து கொள்வதற்காவது நீங்கள் எஸ்தரை ஒருமுறை வாசிக்கத்தான் வேண்டும்.

#தினம்_ஒரு_கதை #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

செப்டம்பர் 05, 2024

சுயம்புலிங்கத்தின் 'ஒரு திருணையின் பூர்வீகம்'

 தினம் ஒரு கதை 5/30


சில கதைகளை வாசிக்க வாசிக்க அக்கதையின் ஆதாரக் குரல் நமக்கு கேட்க நேரிடும். பெரிய நாவல்களுக்கு இதனை நாம் பொருத்திப் பார்க்கலாம். அதனால்தான் நாவலின் கதாப்பாத்திரங்களோடு நான் நெருங்கிவிடுகிறோம். அவர்களுக்காக கண்ணீரும் வடிக்கின்றோம். நாவலில் நமக்கு கேட்ட கதாப்பாத்திரத்தின் குரல் மெல்ல மெல்ல உருமாறி நம்மையே பிரதியெடுத்து நம்மோடு உரையாடவும் செய்கிறது.

நாவல்களுக்கு மட்டுமே இது சாத்தியம் என்ற எண்ணத்தை இந்த ஒரு பக்கக் கதை உடைத்தது. ஒரே பக்கம்தானே என வாசிக்க தொடங்கினால் முதல் பத்தியிலேயே நம்மை உள்ளே இழுத்துவிடுகிறது. அடுத்த பத்தியில் நம்மோடு பேசத்தொடங்கி, கதையை வாசித்து முடிந்ததும் நம்முடைய குரலிலேயே இதுவரையில் நாம் இழந்துவிட்டதை நாம் கேட்கவும் செய்கிறோம்.

திண்ணையை வட்டார வழக்கில் திருணை எனவும் அழைக்கிறார்கள். அது வெறும் திண்ணை மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் இன்னொரு மனிதனாகவே பார்க்கப்படுகிறது. நமது வாழ்வியலில் பிற உயிர்களிடத்தில் மட்டுமல்ல உயிரற்ற எதனிலும் நாம் அன்பு பாராட்ட தவறியதே இல்லை என காட்டும் சிறுகதை.

உண்மையிலேயே சிறிய கதைதான் ஆனால், அது சுமந்திருக்கும் செய்தி பல ஏடுகளில் நம்மில் எழுதிச்செல்கிறது.

கதையின் கடைசி வரிக்காக நானும் நம்பிக்கை கொள்கிறேன். குறைந்தபட்சம் இவர்களாவது அதனை பயன்படுத்தட்டும்.

#தினம்_ஒரு_கதை #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

செப்டம்பர் 04, 2024

ந.பிச்சமூர்த்தியின் 'ஞானப்பால்'

 💙தினம் ஒரு கதை 4/30💙

 இங்கு எது தேடப்படுகிறதோ அதை தேடுபவர்களே அதனை நெருங்கிட முடியாதபடிக்கான செயல்களை தன்னையறியாது செய்துவிடுகிறார்கள். 

'மாங்காய்ப் பாலுண்டு

மலைமேலிருப்போர்க்குத்

தேங்காய்ப்பால் ஏதுக்கடீ குதம்பாய்'.

 என்னும் குதம்பைச் சித்தர் பாடலை இச்சிறுகதையில் சரியான இடத்தில் ந.பிச்சமூர்த்தி  பயன்படுத்தியிருப்பார்.

 மாங்காய்ப்பாலை குண்டலினி சக்தியென்றும் தேங்காய்ப்பாலை சிற்றின்பம் அல்லது உலக வாழ்க்கை மீதான பற்றாக நாம் பாவித்தால் இச்சிறுகதையில் சொல்லப்படும் ஞானப்பால் எதுவென்று புரியும்.

 எதற்கும் ஒரு விலை கொடுக்கத்தான் வேண்டியுள்ளது. ஆனால் கொடுக்கும் விலையை விடவும் கிடைக்கும்  விளைவு  பெரிதாக இருந்தால் யாருக்குத்தான் ஆகாது. அதே சமயம் உடனடியாக புலப்படாத விளைவு எவ்வளவு உன்னதமாக இருந்தாலும் கண்ணுக்கு தெரிந்த விலையை அவ்வளவு சுலபமாகக்  கொடுக்கத்தான் முடிகிறதா?

 இச்சிறுகதையை வாசித்து முடித்ததும், நாயகன் லிங்ககட்டிக்கு ஞானம் கிடைத்ததா இல்லையா என்ற கேள்வியோடு நாம் அடையவேண்டிய ஞானம் என்ன என்கிற கேள்வியையும் நமக்குள் எழ செய்கிறது.

அதற்காகவாவது 'ஞானப்பாலை' ஒருமுறை வாசித்துவிடுங்கள்.



செப்டம்பர் 03, 2024

ஜி.நாகராஜனின் 'ஓடிய கால்கள்'

 தினம் ஒரு கதை 3/30




 ஜி.நாகராஜன் எழுதிய 'ஓடிய கால்கள்'. காவல் நிலையத்திலிருந்து தப்பித்து ஓடியவன் பிடிபடுகிறான். அதன் பிறகு அங்கு நடக்கும் சூழல்தான் கதை.

ஒருவேளை தப்பித்தவன் பிடிபடாமலிருந்தால் மூன்று (போலீஸ்காரர்கள்) காவல்துறையினர் வேலையை இழந்திருப்பார்கள். அவர்கள் பிடித்து வந்த கைதியை அடித்து உதைக்கிறார்கள்.  அடிவாங்கி உடல் வீங்கி சோர்ந்து நாக்கு வரண்டுவிட்டான் கைதி. அவனுக்கு யாரும் குடிக்கக்கூட தண்ணீரைக் கொடுக்கவில்லை.

நேரம் ஆகிறது, மூன்றாமவர் வருகிறார். அவர் 'டூ நாட் சிக்ஸ்'.  ரொம்பவும் நல்லவர். தப்பு செய்ய மாட்டார்; செய்பவர்களையும் ஒன்றும் சொல்ல மாட்டார், காட்டிக்கொடுக்கவும் மாட்டார். சிறையில் அடிவாங்கி தாகத்தில் படுத்திருக்கும் ஒருவனைப் பார்த்தும் எதுவும் செய்யாமல் போகிறார்.

வெளிப்படையாக மோசமனவர்களாகத் தெரிபவர்களை விடவும், எதற்கும் எதிர்த்து குரல் கொடுக்காதவர்களும் அதனை கண்டும் கணாமல் போகிறவர்கள்தான் உண்மையில் மோசமானவர்கள் என புரிந்துகொள்ள வைக்கிறது இச்சிறுகதை.  

முதல் இரண்டு நபர்களை விடவும் இம்மாதிரி மூன்றாமவர்கள்தான் பல பிரச்சனைகளுக்கு காரணம்.

'ஓடிய கால்களை' நீங்கள் வாசிக்கும்போது, அநீதிகளைக் கண்டும் காணாதது போல சென்றவர்களையோ; செல்பவர்களையோ நினைப்பீர்கள்.

#தினம்_ஒரு_கதை
#தயாஜி

செப்டம்பர் 02, 2024

புதுமைப்பித்தனின் 'புதிய நந்தன்'

 

💙தினம் ஒரு கதை 2/30💙


  “நீங்கள் எழுத நினைக்கும் கதைகளை எப்போதோ புதுமைப்பித்தன் எழுதிவிட்டார்! நாம் இன்னொரு விதமாக அக்கதைகளை எழுத முயல வேண்டும்..” என்பதை ஒவ்வொரு புதிய எழுத்தாளருக்கும் சொல்கிறேன்.

அதன் வழி அவர்கள் தவறாது  புதுமைப்பித்தனின் சிறுகதைகளை வாசிப்பார்கள் எனவும் நம்புகிறேன். பெரும்பாலானவர்கள் இந்த நம்பிக்கையை வீணடிப்பதில்லை.

ஜாதிய கொடுமைகளில் இருந்து மீளவே மதம் மாறினோம்/மாறுகின்றோம் என்று; இன்றுவரை பலர் சொல்லக் கேட்கிறோம். ஆனால் அப்படி மதம் மாறியவர்களே தங்களின் ஜாதிய அடையாளத்தைக் கெட்டியாக பிடித்து கொண்டு இன்னொரு மனிதனை தனக்கு கீழாக பார்த்து புறக்கணிப்பதைப் பற்றி வெளிப்படையாக யாரும் பேசுவதில்லை.

அப்படியான போலி மனோபாவத்தைக் கொண்டவர்களின் முகத்தில் அறைவது போன்ற சிறுகதையை புதுமைப்பித்தன் 1934ஆம் ஆண்டிலேயே மணிக்கொடி இதழில் எழுதியிருக்கிறார்.

இச்சிறுகதை எழுதப்பட்டு தொன்னூறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இந்த மனநிலை கொண்டவர்கள் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அவர்களிடம் தன் ஜாதியின் மீதான பற்று பக்தியைவிடவும் மேலோங்கியே இருக்கிறது.

“எங்கள் மதத்தில் ஜாதி பார்க்கமாட்டோம் வா” என்று யாராவது கூப்பிட்டால், எனக்கு முன்னே உங்களுடன் இணைந்தவர்கள் இன்னமும் ஏன் ஜாதிய அடையாளத்தைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என கேட்டுவிடத் தோன்றுகிறது.

அடிமையாய் இருந்து பழகியவர்களே அதிலிருந்து வெளிவர விரும்பாது இருக்கும் துயரம் இந்தத் தீண்டாமையில்தான் இருக்கிறது.
“ஏய், என்னை தொடாதே..!”, ‘ஐயோ…சாமி நீங்க எங்களைத் தொடக்கூடாதுங்க!” என இருவருமே சொல்லிப்பழகிய பிறகு மாற்றத்தை விரும்புகிறவர்களின் நிலைதான் என்ன என்ற கேள்வியைச் இச்சிறுகதை எழுப்பிவிடுகிறது.

இத்தனை ஆண்டுகள் ஆனப்பின்னும் இச்சிறுகதை ஒரு பேசுபொருளாக இருப்பதற்கு யாரைத்தான் நாம் குறை சொல்ல..?

நிச்சயம் நீங்கள் வாசிக்க வேண்டிய சிறுகதைதான்.

#தினம்_ஒரு_கதை 

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

செப்டம்பர் 01, 2024

மா.அரங்கநாதனின் 'சித்தி'

 

💙தினம் ஒரு கதை 1/30💙

   சித்தி என்பது நபரையோ உறவையோ குறிக்கவில்லை. இங்கே சித்தி என்பது, முழுமையைக் குறிக்கிறது, தன்னிறைவைக் குறிக்கிறது, ஒரு மனிதன் அவன் அவனுக்காகவே ஆத்மார்த்தமாகச் செய்யும் செயலைக் குறிக்கிறது. இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்.

   இங்கு செய்யப்படுகின்ற எந்த ஒரு செயலுக்கு ஒரு நோக்கம் உண்டு; ஆனால் சமயங்களில் அச்செயலின் நோக்கம் என்பதே அந்தச் செயலை செய்வதுதான் என்பதனை சிலரே அறிந்துள்ளார்கள் . அந்தச் செயலை, செய்வது தவிர்த்து அந்தச் செயலை செய்வதற்கு வேறெந்த காரணமும் தேவையில்லை. இதனைத்தான் தன் சித்தி சிறுகதையில் சொல்லியிருக்கிறார் மா.அரங்கநாதன்.

   ஓடுவதில் ஆர்வம் உள்ள நாயகனை ஒரு காவலாளி சந்திக்கின்றார். அவரும் ஒரு காலத்தில் ஓடியவராக தன்னை அறிமுகம் செய்து கொண்டார். நாயகனை, பெரியவர் ஒருவரை சென்று சந்திக்கும்படி சொல்கிறார். நாயகனும் சந்திக்கின்றான். அப்பெரியவர் நாயகனுக்கு ஓடுவதற்கான பயிற்சிகளைக் கொடுப்பதோடு சில ஏற்பாடுகளையும் செய்கிறார். நாயகனும் மெல்ல மெல்ல பல இடங்களில் தன் ஓட்டத்தை நிருபித்து வெற்றி பெறுகிறான் (அவன் வரையில் அவன் ஓடுகிறான் அவ்வளவே) . இந்த ஓட்டம்  ஒலிம்பிக் தங்கத்தை பெற்று தரும் என்று பெரியவர் முதல் பலரையும் எதிர்ப்பார்க்க வைக்கிறது.

  ஆனால் அவ்வாறு, எதன் மீதும் நாயகனுக்கு விருப்பமோ ஆசையோ எதிர்பார்ப்போ இருக்கவில்லை. அவனுக்கு தெரிந்தது எல்லாம் ஓடுவது. அது மட்டுமே அவனை ஒரு முழுமையான மனிதனாக வைத்திருப்பதாக நினைக்கிறான். ஓடுவதைத் தவிர அது கொடுக்கும் எந்தப் புகழும் பிரபலமும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல. அவன் ஓடுவதை; ஓடுவதற்காகவே ஓடுகிறான் ! அவ்வளவுதான்.

அவனுக்கு வழிகாட்டியாக இருந்து அவன் மூலமாக விளையாட்டு துறையில் சாதனையை நிகழ்த்தும் எண்ணமும், ஒலிம்பிக் போட்டியில் தங்கத்தை பெறலாம் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்த பெரியவர் இப்போது நாயகனை புரிந்து கொண்டதும் அவன் மீது கோவப்படுகின்றார்.      அவரால் அதைத்தான் இப்போது அவனுக்கு செய்ய முடிகிறது.

அதனைத்தான் எழுத்தாளர் தனது கதையின் முடிவில் வைக்கிறார். ஆனால் அங்கு அந்தக் கதை முடிந்தாலும் நம் வாசிப்பின் வழி அச்சிறுகதை நம்மை வேறொரு இடத்திற்கு; சுய விசாரணைக்கு அழைத்துச் செல்கிறது. நீங்கள் தவறாது வாசித்துப் பாருங்கள்.

“எனக்கு ஓட மட்டுமே தெரியும். அதிலே எனக்கு கிடைப்பதுதான் நான் ஓடுவதற்கு காரணம். நான் எனக்காகவே ஓடுகிறேன். ஓட்டத்தின் சிறப்புத்தான் அதன் காரணம். எனக்கு வேறெதுவும் தெரியாது” என நாயகன் சொல்கிறான்.

எந்த விளைவையும் எதிர்ப்பாராது, நாமும் நமக்கு விரும்பிய ஒன்றை விரும்புகிறோம் என்பதற்காகவே அதனை செய்யத்தோன்றுகிறது.


#தினம்_ஒரு_கதை 1/30
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை