“எங்களுக்கு குறையும் உண்டு; அதனை நான் அழுது சொல்லலாமா?
என் தாயும் நீயிருக்க; உந்தன் செல்ல மகன் வாடலாமா?”
ஆடிமாதமென்பதால், வீரமணிதாசன் என் வீட்டில் பாடிக்கொண்டிருந்தார். இல்லாள் பூஜையில் தியானித்திருந்தார். நான் கணினியில் என் தியானத்தை எழுதிக்கொண்டிருந்தேன்.
நான் இசைக்கு ரசிகன் அல்ல, என்னால் அதன் ரம்மியத்தை ரசிக்க இயலாது. எனக்கு எந்த இசைக்கருவியில் பெயரும் சரியாகச் சொல்லத்தெரியாது. ஆமாம் அது வயலின்னா? பியானோவா? என்ற வகையறா!
ஆனால் எனக்கு ஒலிகள் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதன் சத்தம் என்னை சட்டென என்நிலை மறக்க செய்துவிடும். அந்தச் சத்தம் மழையில் இருந்து வரலாம், தட்டச்சு செய்யும் போது வரும் “டக் டக்” சத்தமாக இருக்கலாம், பழுதடைந்த காத்தாடியில் வரும் “கிரீச் கிரீச்” சத்தமாக இருக்கலாம். அல்லது திரும்பத்திரும்ப ஒலிக்கும் மந்திர வார்த்தைகளாக இருக்கலாம்.
வார்த்தைகள். ஆமாம் வார்த்தைகள்தான்.
ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பொருள் கொண்டிருப்பதுபோல; நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அது தன்னில் மறைத்து வைத்திருக்கும் தொணியும் அது வெளிப்படும் ஒலியும் உங்கள் மனதின் நீங்கள் சொல்ல நினைத்து பூசி மொழுகி வார்த்தையை செதுக்கி சொன்னதின் உண்மை உருவத்தை சட்டென நிராயுதபாணியாக்கி விடுகின்றன. அப்படி பலரின் நிராயுதபாணிச் சொற்களை எனக்கு தெரியும். அதனைச் சொன்ன மாவீரர்களையும் உங்களுக்குத் தெரியும்.
என் இரவு நேரங்கள் பெரும்பாலும் புத்தகங்கள் வாசிப்பதும் பின்னணியில் ஏதாவது இசைக்கோர்வை ஒலிப்பதுவாகவும் இருக்கும். அது என்னை என் மேஜையைத் தாண்டி எந்தச் சத்தமும் எனக்கு கேட்டுவிடாமல் உலாவிக்கொண்டிருக்கும். சில சமயங்களில் அது கடல் அலையின் சந்தமாகவோ, மெல்லியக் காற்றின் சத்தமாகவோ இருக்கும். அதே சமயத்தில் பிரார்த்தனைப் பாடல்களாகவோ இருக்கும். என் மனநிலைக்கு ஏற்றார்போல பழைய சினிமா பாடல்களும் அவ்வபோது வந்து காதுகளை உரசிவிட்டுப்போகும். புதியப்பாடல்களிலும் சிலரின் குரல் எனக்கு ஏற்றதாய் அந்நேரத்தில் ஒலிக்கும்.
இன்று கணினியில் மும்முரமாய்த் தட்டச்சு செய்துக்கொண்டிருந்தேன். சட்டென அந்தப் பாடல் என்னை ஸ்தம்பிக்கச் செய்தது. தட்டிக்கொண்டிருந்த விரல்கள் நடுங்க ஆரம்பித்தன. கண்முன்னே இருந்த கணினிக்குள் நுழைந்து என் பழைய நினைவுகளில் மிதக்கலானேன்.
“எங்களுக்கு குறையும் உண்டு; அதனை நான் அழுது சொல்லலாமா?
என் தாயும் நீயிருக்க; உந்தன் செல்ல மகன் வாடலாமா?”
இந்தப் பாடல்தான் இதற்கெல்லாம் காரணம். சிறு வயதில் அடிக்கடி கேட்டப் பாடல்தான். அப்போது மாரியம்மாவிற்கான பாடலாகத்தான் இதனை கடந்து வந்திருந்தேன். இந்தப் பாடலை மட்டுமல்ல, பெரும்பாலான பக்திப்பாடல்களை அப்படித்தானே கடந்து வந்திருக்கிறோம். ஏதோ ஒரு நாளில் இம்மாதிரி பக்திப்பாடல்களை மாரியம்மனுக்காக அல்லாமல் நம் மனதிற்காக நாம் கேட்கலாம். பெரும்பாலான பாடல்கள் தன்நிலையைச் சொல்லி, குரல் ஒடிந்து, என்னைக் காப்பாற்று தாயே என கேட்கும் குரலாகவேதான் ஒலிக்கிறது.
இன்று இந்தப்பாடலை, நான் என் குரலிலேயே கேட்கும்படி மாயம் நடந்தது. எல்லோரும் உடைந்தழ தாயாராய்த்தான் இருக்கிறோம். ஏனோ அதனை நம் கௌரவ குறைச்சலாக பாவித்து தப்பித்துக்கொள்கிறோம். உண்மையில் தப்பிக்கின்றோமா என்பது கேள்விக்குறிதான்.
இந்த வரிகள் கொடுக்கும் ஆறுதலுக்கு யாருக்கு நன்றி சொல்லலாம். பாடியவருக்கா எழுதியவருக்கா இசையமைத்தவருக்கா (சமயங்களில் இந்த மூவருமே ஒருவராகத்தான் இருப்பார்கள்.). இதனைத் தாண்டி இன்னொன்றும் இருக்கின்றது. அதுதான் நம் சூழல். அதுதானே நம்மை வழி நடத்துகின்றது.
திரும்பத்திரும்ப இந்த வரிகளையே கேட்டுக்கொண்டிருக்கின்றேன். யாரை நோக்கி என் குரல் செல்கிறது என தெரியவில்லை. ஆனால் நம்முள்ளிருந்து இப்படி நம் குரல் வெளிவருவதே நமக்கு ஆறுதல் தருவதாக அமைந்துவிடுகிறது,
‘ஆடு ஜீவிதத்தில்’ ஒலித்த ‘பெரியோனே ரஹுமானே’ பாடலும் சரி காலையில் ஒலித்த ‘எங்களுக்கும் குறையுமுண்டு’ பாடலும் சரி திக்கற்று நிற்கும் எவருக்கும் வார்த்தைகள் வழி கரம் பிடித்து வாழ்வின் மீதான நம்பிக்கைகளைக் கொடுப்பதை நிறுத்துவதில்லை. நாம்தான் எல்லாவற்றுக்கும் ‘கடவுள்’ என்கிற சாயத்தையும் ‘கடவுள் இல்லை’ என்கிற சாயத்தை பூசிப்பூசி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.
இந்த வரிசையில் ‘எங்கும் நிறைந்தோனே…. இருகரம் ஏந்துகிறேன் அல்லாஹ்’ என்ற நாகூர் ஹனிபா பாடியப் பாடலையும், ‘யேசு… ராஜா உன் மாளிகையில் ராப்பகலாய் அமர்ந்திருப்பேன்’ என்ற ஃபாதர் பெர்க்மன் பாடியப் பாடலையும் நான் இணைத்துக்கொள்கிறேன்.
நேரம் இருப்பவர்கள் கேட்டுப்பாருங்கள். அதன் வரிகளுக்காகவும் நாம் வாழும் இந்த வாழ்க்கைக்காகவும்.
நம் அழுகை யாரை நோக்கி பாய்கிறது என்பதைவிட; அது நம் கண்களை விட்டு வழிந்து செல்கிறது என்பதுதான் முக்கியம். அழுது அழுது மடிந்தவர்களைவிடவும் அழாமலேயே உள்ளுக்குள் மடிந்தவர்களின் கதைகள் இங்கு ஏராளமல்லா !
- தயாஜி
https://youtu.be/W31NM5XJRZ4?si=0aMqR0etWQXuKvHV
https://youtu.be/FZWef5x06z4?si=0X4hdpPTjuCpXV0B
https://youtu.be/EZCxtFRlQEQ?si=NRPPiMXFkVmIAaTA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக