ஜூலை மாத தொடக்கத்தில் (SMK PUTERI, SEREMBAN) சிரம்பான், புத்ரி பெண்கள் இடைநிலைப்பள்ளிக்கு சென்றிருந்தேன். மாணவிகளுக்கு சிறுகதைப் பட்டறையை வழிநடத்த அழைத்திருந்தார்கள்.
குறைந்தது 70 மாணவர்கள் வரை பங்கெடுத்தார்கள். அரங்கம் நிறைந்திருந்தது.
ஒவ்வொரு முறையும் பள்ளிக்கூடங்களுக்கு சிறுகதைப் பட்டறை வழிநடத்த செல்லும் போது, ஒரே மாதிரி பேசுவதையும் ஒரே கதைகளை மாணவர்களுக்கு சொல்வதையும் தவிர்த்துவிடுவேன்.
பள்ளிக்குச் செல்வதற்கு முன்னமே, மாணவர்களுடன் என்னென்ன புதிதாகச் சொல்லலாம், எந்தக் கதைகளை உதாரணங்களாகக் கொடுக்கலாம் போன்றவற்றை வாசிக்கவும் குறிப்பெடுக்கவும் செய்வேன். இது நமக்கும் கூட பயிற்சியாக அமையும் என்பதால் 'முன் தயாரிப்பு' எப்போதும் இரு தரப்பிற்கும் லாபம்தான்.
பட்டறையில், அவர்கள் பரிட்சைக்கு எழுத வேண்டிய சிறுகதைக்கு செல்வதற்கு முன்பாக ஏன் சிறுகதைகள் நம் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகின்றன என்று மாணவிகளுடன் பேசினேன்.
அந்தக் கதைகள் எப்படியெல்லாம் நம் வாழ்க்கைக்கு பயன்படுகின்றன, என்ன படிப்பினையை என்னென்ன எதார்த்தங்களைக் கொடுக்கின்றன என மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
பிற்பகல் மணி 2.30க்கு பட்டறை தொடங்கியது. அது இயல்பாகவே நம்மை தூங்க வைக்கும் நேரம் என்பதால் என் பேச்சினை மாணவிகளிடுனான உரையாடலாக மாற்றினேன்.
மாணவிகள் உற்சாகமாகவே பங்கெடுத்தார்கள். ஆசிரியை குமுதா சிறப்பாகவே இப்பட்டறையை ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு நன்றி.
வழக்கம் போல எனது 'அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல', 'குறுங்கதை எழுதுவது எப்படி' புத்தகங்களையும் கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம் கவிதைத் தொகுப்புகளையும் பள்ளி நூல் நிலையத்திற்கு கொடுத்தேன்
சில மாணவர்கள் இயல்பாகவே கதைகள் எழுத ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். தமிழ்கூறு நல்லுலகம் அவர்களின் எழுத்துகளையும் வாசித்து சேமிக்க காத்திருப்பதைச் சொல்லி பட்டறையை நிறைவு செய்தேன்.
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம் #சிறகுகளின்_கதை_நேரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக