Pages - Menu

Pages

ஜூலை 05, 2023

'அது ஒரு..........'

                        'அது ஒரு.........'

அந்தக் கண்களில் ஒளி தெரிந்தன. தெரிந்தவை மிளிர்ந்தன. மிளிர்ந்தவை பார்வையாளர்களை ஈர்த்தன. அந்த ஈர்ப்பு அவரின் பேச்சில் இவர்களை மயக்கின.

மனம் குறித்து இதுவரை விஞ்ஞானமே சொல்லாததையும் சொல்கிறார். கடவுளே கவுன் போட்டு வந்தது போல தெரிந்தாலும் அவரின் முகத்தில் தெரிந்த தேஜஸை எழுதினால் பக்கங்கள் போதாது.

வாழ்க்கையொன்றும் அவ்வளவு கஷ்டமில்லை என்றார். இல்லையா என்றால் இல்லையென்று அர்த்தமில்லை இருக்கலாம் என்றார். இருக்கலாம் என்றால் இருந்தேதான் ஆகவேண்டுமா என சொல்வதற்கில்லை என்றார். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறதுதானே என்கிறார். அதில் கஷ்டம் வந்தால் என்ன நஷ்டம் வந்தால் என்ன அதிஸ்டம் வந்தால்தான் என்ன. எல்லாமே அதன் இஸ்டம்தானே என்றார். இதற்காக நாம் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் என்கிறார்.

அட, எவ்வளவு பெரிய தத்துவம் என எல்லோரும் சொன்னார்கள். கைத்தட்டல் வேறு.

அவர் இவ்வுலகிற்கு இன்னொரு ஞான கீற்றை கீறிப்போட நினைத்த பொழுது, அந்தப் உருவம் அங்கு வந்தது. அதுதான் இங்குள்ளவர்களை ஆட்டிப்படைக்கும் ஆணவம். அதுவே இவர்களை இம்சிக்கும் இயந்திரம். மனித வாழ்வின் சாபமே அதுதான். அதோ அது எதையோ சொல்கிறது. அதை நாம் கேட்டுத்தான் ஆகவேண்டும். இன்றைக்கு என்னால் இயன்ற ஞானம் அவ்வளவுதான் என அவர் முடிக்கும் முன் அந்த உருவம் தொடர்ந்தது;

அவ்வளவுதான்.

அவ்வளவுதான்னா?.

அவ்வளவுதான்னா அவ்வளவுதான். மணி ஆறே முக்கால் ஆச்சி. விசிட்டிங் ஹவர் முடிஞ்சது. இதோட நாளைக்குத்தான். எல்லோரும் அவங்கவங்க இடத்துக்கு போங்க டாக்டர் வர நேரமாச்சி.

'..... பைத்தியக்கார ஆஸ்பத்திரி'


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக