Pages - Menu

Pages

ஜூலை 04, 2023

- வெடிகுண்டு -

                     - வெடிகுண்டு -

'நல்ல கூட்டம். சரியான இடம். இங்கு வைக்கலாம். வெடிக்கும். நிறைய பிணம் விழும். விழுமா.?. இல்லையில்லை உடல்கள் சிதறும். அழுகை. ஓலம். மரணம் ஓலம்.....'

மனக்கணக்கு இன்னும் முழுதாய்க் கணக்கிடவில்லை. அதற்குள் எழுந்துவிட்டான். நேரம் ஆக ஆக கூட்டம் குறைந்துவிடும். கூட்டம் குறைந்தால் உடல்களும் குறைந்துவிடும். உடல்கள் குறைந்தால் சிதறல்களும் குறைந்துவிடும். சிதறல்கள் குறைந்தால் வெடிகுண்டுக்கு என்னதான் மரியாதை. வெடிகுண்டுக்கே மரியாதை இல்லாத போது தன்னை யார்தான் நினைப்பார்கள்.

மூன்றாவது மாடியில் இருந்தான். மின் தூக்கி அவனை அடித்தளத்திற்கு கொண்டு போனது. கீழே வைத்து வெடிக்க வைக்கலாம். அதுதான் அதிக சேதாரத்தைக் கொடுக்கும். குழந்தைகள் அதிகம் இருக்கும் இடத்தின் நடுவில் வந்து நின்றான். 

'இந்தக் குழந்தைகள்தான் எவ்வளவு அழகாக சிரித்து விளையாடுகிறார்கள். நாமும் குழந்தையாய் இருந்திருக்கலாமோ. இவர்களுக்கு எந்த சூதும் வாதும் தெரியாது. சும்மாவா குழந்தைகளை தெய்வத்திற்கு சமமானவர்கள்னு சொல்லிக்கறாங்க.'

தன் கைப்பையை கீழே வைத்தான். திறக்கிறான். உள்ளே கையை விட்டு எதையோ செய்கிறான். கையை எடுக்கிறான். அலாரம் தயார். இன்னும் சரியாக பத்து நிமிடத்தில் வெடித்துவிடும்.
ஒரு வாரத்திற்கு அதுதான் தலைப்பு செய்தி. 

இன்னும் ஐந்து நிமிடங்களே உள்ளன.

என்ன நினைத்தானோ தெரியவில்லை. பையைத் திறக்கிறான். அலாரத்தை அடைக்கிறான். பையை எடுக்கிறான். எழுகிறான். நேரே நடக்கிறான். வெளியே வந்துவிட்டான். வெடிக்கவில்லை.

குறுங்கதையில் வெடிகுண்டைக் கொண்டு வந்தால் அது வெடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்களுக்கு வேண்டுமென்றால் வெடிகுண்டு என இருக்கும் தலைப்பை மாற்றி, வெடிக்காத குண்டு என போட்டு மீண்டும் வாசித்துப் பாருங்கள். கதை சரியாக வரும்.

#தயாஜி 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக