சுதாகர் ரொம்பவும் பக்தி கொண்டவர். இம்மையை விடவும் மறுமையில் அதிகமே அக்கறைக் கொண்டவர். அதற்காக பாடுபடுபவர். காலை விழிப்பது முதல் இரவு படுப்பது வரை ஒரே பக்தி மயம்தான்.
தொலைக்காட்சியில் எப்பவும் பக்தி படங்களாகவே ஓடிக்கொண்டிருக்கும். வானொலியில் எப்பவும் பக்தி பாடல்களே கேட்டுக்கொண்டிருக்கும். கைப்பேசியில் கூட நாள் கிழமைகளுக்கு ஏற்றார் போல ஏதாவது ஒரு சாமி அவரைப் பார்த்துக்கொண்டிருக்கும். சட்டி பானைகள் எதுவும் மருந்திற்கும் ரத்தம் பார்த்திடாத சைவம் போற்றுபவர்.
பெற்றோர் செய்த புன்னியத்தில் இம்மை இன்பமாக அமைந்திருந்தது. மறுமைக்கு தான் தானே பாடுபட வேண்டும் என்கிற தெளிவு உள்ள மனிதர்.
ஒரு நாள் இறந்துவிட்டார். அவர் எதிர்ப்பார்த்தது போல சுவர்க்கத்தின் வாசற்கதவின் முன் நிற்கலானார். கதவு திறந்தது. உள்ளே செல்ல எத்தணிக்கிறார். நீண்டதொரு ஈட்டி கொண்டு வழி மறைத்த வாயிற்காவலன், அவருக்கும் முன் சிலர் செல்லவிருப்பதைச் சொன்னார்.
சுகுமார் வழிவிட்டார். சுவர்க்கவாசலில் ஒன்றின் பின் ஒன்றாக சுகுமார் வீட்டு தொலைக்காட்சி பெட்டி, வானொலி பெட்டி, கைப்பேசி, சட்டி பானைகளென துள்ளிக்குதித்து ஆரவாரமிட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தன.
கடைசியாக கரண்டி ஒன்று வழுக்கிக்கொண்டு உள்ளே சென்றதும் சுவர்க்கவாசல் மூடத்தொடங்கியது.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
#குறுங்கதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக