அமானுஷ்ய
நினைவுகள்
தலைப்பு – அமானுஷ்ய நினைவுகள்
எழுத்து – அசோகமித்திரன்
வகை – சிறுகதைத் தொகுப்பு
வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம்
நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை
016 – 473 4794 (மலேசியா)
அசோகமித்திரன் எனக்கு பிடித்தமான எழுத்தாளர்களில்
ஒருவர். அவரின் ‘பிரயாணம்’ சிறுகதையை இன்றும்
பல கோணங்களில் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர்களிடம் விவாதித்துக் கொண்டும் இருக்கிறேன்.
முடிவற்ற முடிவை அச்சிறுகதை தன்னகத்தே போத்தியிருப்பதாகவே எப்போதும் தோன்றும்.
‘அமானுஷ்ய நினைவுகள்’. அசோகமித்திரன் எழுதிய கடைசிக்
கதைகள் இவை என இந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த சொல்லாடலில் எனக்கு உடன்பாடு
இருக்கவில்லை. ஏனெனில் ஆளுமைக் கொண்ட எழுத்தாளரின் படைப்பானது காலமாற்றம் காணக்காண
தன்னைத்தானே பல சாத்தியங்கள் கொண்ட கதைகளாக மாற்றிக் கொள்கின்றன என நம்புகிறவன் நான்.
அதுவே புதிய தலைமுறை வாசிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களும் கூட அப்படைப்புகளைத் தேடி
வாசித்து அது குறித்த உரையாடலை மேற்கொள்ள வைக்கிறது. இந்தத் தொகுப்பில் மொத்தம் ஏழு
சிறுகதைகள் அடங்கியுள்ளன. ஏழும் ஏழு வகையான கதையாக இருக்கிறது. விஷால் ராஜாவின் முன்னுரையும் அசோகமித்திரன் படைப்புகள்
எதை நோக்குகின்றன என கோடிட்டுக் காட்டுகிறது.
1. ஒரு மாஜி இளவரசனின் கவிதை வேட்கை
தலைப்பில்
இருந்தே இக்கதை தொடங்குவதாக தோன்றியது. தலைப்பை மறந்து இக்கதையை வாசிப்பது சிரமம்தான்
போலும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. யார்
அந்த மாஜி இளவரசன் ஏன் கவிதை எழுத வேட்கை கொள்கிறான் என சொல்லப்படும் கதையில் உண்மையில்
அந்த மாஜி இளவரசன் நம்முள்தான் இருக்கிறானோ என யோசிக்க வைக்கும்படிக்கு கதையை முடித்திருக்கிறார்.
2. அமானுஷ்ய நினைவுகள்
அப்பாவை
இழந்த இளைஞனின் வாழ்க்கை. அப்பா எப்போது தேவைப்படுகின்றார் என யோசிக்க வைக்கிறது. நாம் ஒவ்வொருவருக்கும் அமானுஷ்ய
அனுபவம் ஏதோ ஒரு வயதில் ஏற்பட்டிருக்கும். பேயோ பிசாசோ அது எப்படித்தான் இருக்கும்
என பேசியும் இருப்போம். இச்சிறுகதை அக்களத்தைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.
3. துரோகங்கள்
எனக்கு மிகவும் பிடித்துவிட்ட கதை. துரோகங்கள் என்பது நாம் ஒருவருக்கு நேரடியாக செய்வது மட்டுமல்ல என சொல்லும் கதை. நாம் நம்பும் ஒன்று கூட நாம் நேசிப்பவர்களுக்கு பெரியத் துரோகமாக மாறிவிட வாய்ப்புள்ளதை நினைவுப்படுத்துகிறது. காலேஜ் வயதில் காணாமல் போகும் அல்லது தான் தொலைத்தக் காதலியை தன் அறுபதாவது வயதைக் கடக்கும் பொழுது கண்டு பிடிக்கிறார் நீலகண்டன். அப்போது அவருக்கு திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். அந்த பெண்ணோ தன் காதலின் நினைவாகவே இத்தனைக்காலம் வாழ்ந்திருக்கிறார். ‘சீதை ஒரு வருடம் ராமனுக்குக் காத்திருந்தாள்: ரஞ்சினி நாற்பது வருடங்கள் காத்திருக்கிறாள்’ என ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார் அசோகமித்திரன். இக்கதை அந்த வாக்கியத்தின் நீட்சிதான்.
ஆனாலும் நீலகண்டன் மீது நமக்கு கோவம் வரவில்லை. காதலிக்கும் பெண்ணின் அப்பா சொன்ன வார்த்தையை நம்பியப்
பாவத்தின் சம்பளம்தான் மிகப்பெரிய துரோகியாக்கியிருக்கிறது. ஆனால் ரஞ்சினிக்கு அப்படியல்ல. “உன் மகன், மகள்,
பெரியவங்க. அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க. நீ உன் பொண்டாட்டியை அழைத்துக்கிட்டு
இங்க வந்திடு” என ரஞ்சினி நீலகண்டனை தன் வீட்டிற்கே அழைக்கும் இடத்தில் ஒரு பெண்ணால் எப்படி
எப்பவும் வலியை ஒதுக்கி வைத்துவிட்டு பேச முடுகிறது என யோசிக்க வைக்கிறது. இக்கதையை அசோகமித்திரன் முடித்திருக்கும் விதம் மனதை மேலும்
கணக்க வைக்கிறது. வாசித்து முடித்ததும் கதையின் முடிவில் ‘பாபநாசம்’ திரைப்படத்தில்
கையெடுத்து வணங்கி கமல்ஹாசன் போலிசிடம் பேசும் கடைசி வசனம் போல நீலகண்டனை நான் நினைக்கலானேன்.
4. நிழலும் அசலும்
நம்மில்
பாலர் நிழலைத்தான் சுமந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய அசலை நம்மால் கூட ஜீரணிக்க முடியாத துக்கத்தைச் சொல்லும் கதை.
5. ஆட்டுக்கு வால்
எல்லா
காலத்திலும் இப்படியானத் துயரத்தை மகளைப் பெற்ற அப்பாக்களில் சிலர் சந்தித்துக் கொண்டுதான்
இருக்கிறார்கள். மருமகன் தன் மகளை ஒதுக்கிவிட்டு இன்னொரு பொண்ணை திருமணம் செய்துக்
கொண்டதாகக் கேள்விபட்டதும் அப்பாவும் அம்மாவும் மகளை சந்திக்கச் செல்கிறார்கள். மகள்
நிலையைக் கண்டதும் உடைந்து அழும் அப்பா யார் யாரையோ கண்முன் கொண்டுவருகிறார்.
6. நான் கிரிக்கெட் கோஷ்டிக்கு காப்டன் ஆன வரலாறு
தனக்கு
எப்படி வாய்ப்பு கிடைத்தது என அடுக்கிக்கொண்டு போகிறார் கதை சொல்லி. ஆனால் கடைசியில்
அவர் மீதே நமக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் அவர்தான் காரணமாக இருப்பாரோ?
7. பாட்டு வாத்தியார் ஆழ்வார்
கலையை
மதிப்பவர்கள் போல கலையை வியாபாரம் ஆக்குபவர்களும் இருக்கிறார்கள். இரண்டாமவர்களுக்கே
சமூகத்தில் மரியாதை கிடைப்பதை நாம் பார்த்திருப்போம். எனக்குத் தெரிந்த ஒருவர் ‘எழுதி
காசு சம்பாதிக்க முடிஞ்சா எழுது, எதை எழுதினா இவனுங்க வாங்குவானுங்கனு எனக்கு தெரியும்…
நான் எழுதி விக்கறேன் அவனுங்க வாங்கி படிக்கறானுங்க’ என சொல்லவும் எனக்கும் அவருக்கும்
பெரிய வாக்குவாதமே வந்துவிட்டது. ஆனால் சிலர் அவரைத்தான் இலக்கியத்தைக் காப்பாற்ற வந்தவர்
போல புகழ்ந்து கொண்டிருப்பதை இக்கதை நினைக்க
வைத்தது. இக்கதையை வாசிக்க உங்களுக்கும் அப்படியான அனுபவம் இருந்தால் நினைக்கவைக்கும்
அந்த வலி புரியும்.
நிறைவாக; அசோகமித்திரன் கதைகளுக்கு ஆயுள் அதிகம்.
அதற்கான திறப்புகளும் அதிகம் என்ற நம்பிக்கைக்கு வலு சேர்த்திருக்கிறது இத்தொகுப்பு.
அவரின் சிறுகதைகளை வாசித்துப் பேசியது போல அவரது கட்டுரைகள் பக்கம் நான் அதிகம் செல்லவில்லை
என்கிற குற்றவுணர்ச்சி தோன்றிவிட்டது. அதனை விரைவில் போக்க வேண்டும்.
- தயாஜி
(இந்நூலை
வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு
அழைக்கலாம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக