இந்தக் கேள்வி ரொம்ப நாளாகவே இருக்கிறது.
எவ்வளவோ கேட்டு வாங்கிக் கட்டிகிட்டாச்சி. இதையும் கேட்டுக்குவோம். வாங்கிக் கட்டிக்குவோம் என்ன
வந்திடப்போகிறது.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று விருது வழங்கும்
விழாவை ஏற்பாடு செய்து;நடத்தியது. பலருக்கும் குறிப்பாகச் சில புதிய முகங்களுக்கு விருதுகள்
கிடைத்தன. வழக்கம் போல யாருக்குக் கிடைக்கக்கூடாது எனப் பலர் யூகித்திருந்தார்களோ அவர்களுக்கே
கிடைத்து விட்டதாகப் பலரும் தங்களின் அதிருப்த்தியைத் தெரியப்படுத்தினார்கள்.
வாழ்நாள் சாதனையாளர் என்கிற விருது பெறவேண்டியவரின் பெயரை, சிறந்த துணை கதாப்பாத்திர தேர்விற்கு
வைத்துவிட்டதாகவும் கூட முகநூல் ஆதங்கம் ஒன்றைக் காண நேர்ந்தது.
இன்னொன்று, சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒலியேறிய நாடகங்களைக்
குறித்துப் பல்வேறு கருத்துகள்/பார்வைகள் வந்திருந்தன. அரைமணி நேர நாடகத்தில் விளம்பரம்
போக மீதமுள்ள பெரும்பாலான நேரத்தில் கதாப்பாத்திரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து
கொண்டும், இன்னும் சில கதாப்பாத்திரங்கள் கட்டிலில் படுத்திருந்த வண்ணம்,
அலுவலகம் என்ற பெயரில் கணினிக்கு முன்னும் கணினிக்குப் பின்னும் இரு
கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. படக்கருவி ஏங்கல் சரியில்லை,
கதாப்பாத்திரங்கள் வெறும் வசனத்தையே பேசுகின்றன, காட்சிகள் நகரவில்லை. இம்மாதிரி
பல.
இதில் பலருக்கும் உடன்பாடு இருந்தன. அதற்கான பின்னூட்டங்களை
அந்தந்தக் கருத்தையொட்டி கவனிக்க முடிந்தது. இது எதுவும் சிக்கல் இல்லை. பார்வையாளனாக
ரசிகனாக இவற்றைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அப்போதுதான் கலை வளர்ச்சியடையும் என்கிற எதிர்ப்பார்ப்பும் உங்களிடம்
இல்லாமலில்லை.
இதையே இன்னொரு தளத்தில் செய்தால் நீங்களே எதிர்ப்புத்
தெரிவிக்கிறீர்கள். திட்டிப்பேசுகின்றீர்கள். புதியவர்களை அழிப்பதாக வதந்தி பரப்புகிறீர்கள்.
புரிகிறதா?
சரி, சொல்கிறேன். ஆனால் இதனை என்னில் இருந்து நான்
சொல்ல நினைக்கிறேன். ஏனெனில் சட்டென ஏதாவது ஒரு குழுவில் சிரமம் பாராது என்னை உறுப்பினர் ஆக்கிவிட்டு
தான் மறு வேலை பார்ப்பீர்கள் என்ற அச்சம்தான். அந்த மெல்லிய கோட்டிற்கு மிக அருகிலிருந்தே நான்
இதனைச் சொல்ல முயல்கிறேன்.
நீங்கள் ஒரு தொலைக்காட்சி தொடரை தொடர்ந்து
பார்க்கிறீர்கள். நான் ஒரு புத்தகத்தைத் தொடர்ந்து வாசிக்கிறேன். நீங்கள் பார்த்தத் தொடரிலிருந்து உங்களுக்கு
ஒன்று தோன்றுகிறது. நான் வாசித்த புத்தகத்திலிருந்து எனக்கு ஒன்று தோன்றுகிறது.
நீங்களும் உங்கள் கருத்தினை எழுதுகிறீர்கள். நானும் என் கருத்தை எழுதுகிறேன். இதுவரை
சரிதான். ஆனால் எழுதி முடித்தப்பிறகு நீங்கள் எழுதியது கலையை வளர்ப்பதாகவும்
நான் எழுதியது கலையைச் சிதைப்பதாகவும் எப்படி மாற்றப்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால் நாடகமோ திரைப்படமோ ‘நல்லாவேயில்லை’
எனச் சொல்ல முடிந்தவர்கள் கூட ஒரு கதையை/புத்தகத்தை வாசித்து இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்
என்று சொல்லும் என்னை என்னவோ போல் பார்க்கிறீர்கள்.
நீங்கள் ஒரு திரைப்படம் குறித்தும் அதன்
நாயக பிம்பம் குறித்துப் பேசுகிறீர்கள், கைத்தட்டல்களைச் சேர்த்துக் கொள்கிறீர்கள்.
யாரும் உங்களிடம் நீ எத்தனை திரைப்படம் எடுத்துவிட்டாய் எனக் கேட்பதில்லை.
ஆனால் நாவலை வாசித்துச் சில குறைகள் இருப்பதாகச் சொல்கிறேன். நீ எத்தனை நாவல்கள் எழுதிவிட்டாய்
என்பதுதான் முதற்கேள்வியாக உங்களிடமிருந்து
வருகிறது.
இன்னும் கூட அதிகம் பேசலாம். ஆனால் நான் கேட்க நினைக்கும்
அடிப்படை கேள்விகளைத் தான் கேட்டுள்ளேன். நாம் இருவரும் கலையை நம் ரசனையின் அடிப்படையிலிருந்துதான் அணுகுகிறோம். என்னவென்று திரைப்படத்துக்காரர்கள் தூரமாக
இருப்பதாலும் கதை/புத்தகம் எழுகின்றவர்கள் உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள்
என்பதாலும் இப்படியெல்லாம் நடக்கிறதோ என்னவோ.
இரண்டரை மணிநேரம் திரைத்துறை பார்த்து,
மூன்று நான்கு மணி நேரம் விருது நிகழ்ச்சி பார்த்து ஒரு பக்கம் கருத்து தெரிவிக்க நேரமிருக்கும்
உங்களுக்குப் பல மணிநேரம் (பக்கங்களைப்பொருத்து) ஒதுக்கி வாசித்து அதையொட்டி மேலும்
சிலவற்றைக் கோடிட்டுக்காட்டத் தேடி வாசித்து எழுதுகின்றவர்கள் மீது ஏன் வெறுப்பு.
ஒரு பக்கம் கலையை வளர்ப்பதாகச் சொல்லும் நீங்களே ஏதோ ஒரு காரணத்தால் அதையே கதைகளில்/புத்தகங்களில் செய்யும் என் மீது வெறுப்பு உள்ளதாக ஏன் வேடம் போடுகின்றீர்கள்.
- தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக