Pages - Menu

Pages

ஜனவரி 29, 2022

புத்தகசவாசிப்பு_2022_4 பால் சக்காரியாவின் 'யேசு கதைகள்'



யேசு கதைகள்
தலைப்பு – யேசு கதைகள்
எழுத்து – பால் சக்காரியா
தமிழாக்கம் – கே.வி.ஜெயஶ்ரீ
வகை – சிறுகதைத் தொகுப்பு
வெளியீடு – வம்சி பதிப்பகம்
நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)

பவா  செல்லதுரை மூலம் இந்தப் புத்தகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன். சில ஆண்டுகளுக்கு முன் மலேசியா வந்திருந்தவர், இந்தப் புத்தகத்தில் இருந்து இரு கதைகளை மக்களிடம் கூறினார். அவர் அக்கதைகளைச் சொல்லும் போதே என்னைக் கவர்ந்தது. ஒரு திரைப்படம் பார்ப்பது போல ஒவ்வொரு காட்சிகளையும் தன் சொற்கள் மூலம் காட்சி பரிணாமத்தைக் கொடுக்க முயன்றார். கொடுக்கவும் செய்தார்.

அப்போது தொடங்கி, பல மாதங்களாக ‘யேசு கதைகள்’ புத்தகத்தைத் தேடினேன். கடைசியில் கிடைத்தது.

இப்புத்தகத்தில் ஐந்து சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கியுள்ளன. ‘யேசுவின் மீட்பு’ என்னும் தலைப்புல் புத்தகத்திற்கான முன்னுரையை ஜெ.ஜெயகரன் கொடுத்திருக்கிறார். இக்கதைகளையும் அதன் தேவைகளையும் புரிந்து கொள்ள இம்முன்னுரை உதவும்.

மலையாளத்தில் மட்டுமன்றி தமிழிலும் நன்கு அறிமுகம் கொண்ட பால் சக்காரியா தன் கதைகளின் வழி யேசுவை அணுகிய விதம் மாறுபட்டிருந்து. தேவதுதனை வேறேப்படியும் பார்க்க விரும்பாத பார்ப்பவர்களையும் விரும்பாத சமூகத்திலிருந்து வெளிவந்து இவர் அணுகியிருந்த யேசு மனதிற்கு நெருக்கமாகிறது. இப்படிக்கூட யேசுவை அணுகலாம்தானே என நம்மையே கேட்க வைக்கிறது.

எல்லாம் வல்ல இறையாக இருக்கும் யேசு, எல்லா நோய்களுக்கும் சுகமளிக்கும் யேசு தன்னால் ஏதும் செய்ய முடியாதவனா தோன்றுவதை நம்மால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. ‘அன்னம்மா டீச்சர் – சில நினைவுக் குறிப்புகள்’ அப்படியொன்றி நிகழ்த்தி காட்டியிருக்கிறார் எழுத்தாளர். இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இக்கதைதான் முதன்மையானது.

தன்னைவிட இளம் வயதிலேயே மறித்த யேசுவிற்குத் தன்னை அக்காவாகப் பாவிக்கும் அன்னம்மா டீச்சருக்காகத் தம்பியாகவே தோன்றுகிறார் யேசு. அன்னாம்மா டீச்சர் வாழ்க்கையைத்தான் நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தன்னைச் சுற்றி எல்லாறையும் கரை சேர்க்க வேண்டும். உடன் பிறப்புகளுக்கு வாழ்க்கை அமையவேண்டும். குடும்பம் தலையெடுக்க வேண்டும். இதுவெல்லாம் வேண்டும் என்ற போதும் தன்னால் தனக்காகப் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும் என்கிற நிலையில் அன்னம்மா டீச்சரில் வாழ்க்கைச் சூழலை அழகாகவும் ஆழமாகவும் பதிவு செய்திருக்கிறார் எழுத்த்தாளர்.

‘யாருக்குத் தெரியும்’ என்கிற கதையைத்தான் பவா செல்லதுரை சொல்லக் கேட்டேன். அப்போது அவர் காட்டிய அந்தப் பரிணாமத்தை என்னால் வாசிப்பில் அடைய முடியவில்லை. வாசிப்பு கதையை மேலும் எனக்கு அணுக்கமாக்கியது. குழந்தைகளைக் கொன்று குவித்த போர் வீரன் விபச்சார விடுதிக்கு வருகிறார். அங்கும் ஒரு குழந்தை இருக்கிறது. அது குழந்தை யேசு. விபச்சார விடுதியின் தலைவி, குழந்தை யேசுவை காப்பாற்றுகிறார். பெற்றோருடன் குழந்தையை அனுப்பி வைக்கும் போது தனக்காக மட்டுமின்றி அந்தப் போர் வீரனுக்காகவும் பிரார்த்தனைச் செய்கிறார்.

ஒவ்வொரு கதையிலும் யேசுவை ஒவ்வொரு விதத்தின் தன் எழுத்துகளின் வழி அணுகி, வாசகர்களுக்கும் புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்துள்ளார். ஒரு படைப்பாளி எவ்வாறாகப் படைப்பை படைக்கின்றார் என்பது ஆழமான கேள்வி. அர்த்தம் பொதிந்த பதில் அதற்குத் தேவை.

யேசு பொதுவானவர் என்று சொல்லிச்சொல்லி அவரை ஒரு மத நிறுவனராகவே மாற்றிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், அந்தத் தேவ மைந்தனை சக மனிதனாகப் பாவித்து மனிதனுக்கு மிக நெருக்கமான பரிசுத்த ஆவியாக மாற்றி ஆன்ம ரீதியான நெருக்கத்தையும் நேசத்தையும் இக்கதைகளின் வழி , வழி சமைத்திருக்கிறார்.

- தயாஜி

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)


#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக