#குறுங்கதை 2021 - 4
- கதைச்சொல்லும் தாதி -
வந்துவிட்டார். கையில் மருந்துகளுடன் கதை புத்தகமும் இருந்தது. நான்காவது கட்டிலில் இருப்பவர் நிலைமைதான் இன்று மோசமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள்.
மருத்துவர் நாள் குறித்துவிட்டார். ஆனால் வீட்டில் இருந்து இன்னும் யாரும் வரவில்லை. சில நாட்களாக இந்த தாதிதான் அவ்வபோது பார்த்துவிட்டு பேசிவிட்டு செல்கிறார். வழக்கமாக செய்வதுதான். யாரும் தாதியை தடுக்கவோ தடைபோடுவதோ இல்லை. அது அவர்களால் முடியவும் முடியாது.
தாதியிடம் கதையைக் கேட்பதற்காகவே இங்கு பலரும் உயிரை பிடித்து வைத்திருக்கிறார்கள். இன்று தாதியைக் கண்டதும் அவருக்கு உற்சாகம் மேலிட்டது. அணையபோகும் விளக்கு என்பதாலோ என்னவோ அவர் முகத்தில் பிரகாசம் தெரிந்தது.
தாதி அவரின் மருத்துவ குறிப்புகள் எல்லாவற்றையும் ஒரு முறை பார்க்கலானார். நிலைமை எத்தனை மோசம் என தெரிந்தது. இனி மருந்துகளால் பயனில்லை. தாதியால் முடிந்தது இப்போதைக்கு கதை சொல்வதுதான்.
தாதி கதைச் சொல்ல ஆரம்பித்தார். கட்டிலில் இருந்தவர் மெல்ல மெல்ல கதைக்குள்ளாகவே செல்லலானார். அவரின் இதயத்துடிப்பு அதிகமானது. அவர் உடல் மெல்ல மெல்ல அதிரத்தொடங்கியது. மருத்துவரும் சில தாதிகளும் ஓடி வந்தனர்.
தாதி, கதைச் சொல்வதை நிறுத்தவில்லை. வந்தவர்களுக்கு ஒரே குழப்பம். மோசமான நிலைமையில் உள்ளவர் மெல்ல இயல்பு நிலைக்கு வந்தார். மீண்டும் அதிசயம் நடந்து எல்லோரையும் குழப்பியது.
ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்துக்கொண்டனர். கதைச் சொல்லி முடித்த தாதி, மிதந்துக்கொண்டே அடுத்த அறைக்குச் செல்கிறார்.
அங்கு, மோசமான நிலைமையில் ஒருவர் தாதியைப் பார்த்ததும் புன்னகைத்து கதை கேட்கத் தயாராகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக