#குறுங்கதை 2021 - 3
- ஆளுக்கொரு தீனி -
படபிடிப்பு தொடங்கிவிட்டது. கதாநாயகியைக் காணவில்லை. என் போதாத காலம், நான் தான் வசனகர்த்தா. கதாநாயகிக்கு வசனத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஏற்கனவே அந்த நாயகி குறித்து பலரும் பலவாறாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இயக்குனர் மட்டுமல்ல, முழு படபிடிப்புமே கூட அவருக்காக காத்திருக்குமாம். அப்படித்தான் மயக்கி வைத்துள்ளாராம். எனக்கு அதெல்லாம் தெரியாது. எனக்கு இது முதல் வாய்ப்பு என்பதால் நானே அவரை தேட ஆரம்பித்தேன்.
தேடி கிடைக்கவில்லை. வெளியில் அவரது கார் இருப்பதைத் தெரிந்துக்கொண்டேன். சென்றேன். அருகில் செல்லச்செல்ல கார் லேசாக குலுங்குவதை கவனித்தேன். நின்றுவிட்டேன்.
அதே நேரம் நாயகி காரில் இருந்து இறங்கினார். அந்நேரம் காரில் ஒரு இளைஞன் இருப்பது தெரிந்தது. கார் வேகமாக கிளம்பியது. என்னைக் கண்டதும் நாயகி வேறு பக்கம் திரும்பினார். முகத்தைத் துடைத்துக் கொண்டு சிரித்தவாறே என்னிடம் வந்தார்.
"சாரி கொஞ்சம் லேட் ஆச்சி..." என்றவர் என்னை முந்திக்கொண்டு சென்றார். அவருக்கான வசனங்கள் என்னிடம் இருந்தன. நானும் அவர் பின்னால் ஓடினேன்.
இப்படியே படபிடிப்பு முழுக்க நடக்கலானது. நாயகி காணாமல் போவது. கார் காத்திருப்பது. நான் வெளியில் செல்வது. நாயகி முகம் துடைப்பது. கார் கிளம்புவது.
இப்போது நாயகி என்னுடன் நெருக்கமாகிவிட்டார். படபிடிப்பு வசனங்களைத் தாண்டியும் பலவற்றை பேச ஆரம்பித்தோம். ஏதோ ஒரு தைரியத்தில் அவரிடம் அந்த குலுங்கும் கார் குறித்து கேட்டுவிட்டேன்.
நாயகி சட்டென மௌனமானார். அவரின் கை என் கையைப் பிடித்தது. அவர் பேசலானார்.
"அது என்னோட மகன், இருபத்து நாலு வயசாகுது... எப்படியோ போதை பழக்கத்துக்கு ஆளாகிட்டான் தினமும் அவனுக்கு காசு வேணும். அம்மா சாப்டாங்களா தூங்கனாங்களான்னு அவனுக்கு அக்கறை இல்லை. என்னோட கண்ணீரைவிட இப்போதைக்கு அவனுக்கு காசுதான் முக்கியம்...."
" உங்களுக்கு இத்தனை வயசுல மகன் இருக்கறதே எனக்கு தெரியாது..."
" உங்களுக்கு மட்டுமில்ல. யாருக்கும் தெரியாது. தெரியாம இருக்கிற வரைக்கும்தான் நான் ஹெராயின். இல்லன்னா நான் ஹீரோயின்க்கு அம்மா."
"ஆனா என்கிட்ட சொல்லிட்டீங்களே...?"
"நீங்கதான் முதன் முதலா என்கிட்ட இதை பத்தி கேட்டீங்க.. மத்தவங்க எல்லாம் ஆளாளுக்கு என்ன வேணுமோ அதை நினைச்சிகிட்டாங்க..... நானும் விட்டுட்டேன்..."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக