Pages - Menu

Pages

பிப்ரவரி 07, 2021

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - ஏழாவது கட்டுரையை முன்வைத்து

(ஏழாவது கட்டுரையை முன்வைத்து...)

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *ஏழாவது கட்டுரையாக 'கு.அழகிரிசாமி : காலத்தின் கோலங்களை கதையில் வரைந்த கலைஞன்' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    கு.அழகிரிசாமிக்கும் மலேசிய சிறுகதை வளர்ச்சிக்கும் பங்கிருப்பதை யாரும் மறுக்க முடியாது.
    1952-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை ஐந்தாண்டுகள் மலேசியா 'தமிழ்நேசன்' பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். அன்றைய சூழலில் பத்திரிகைகளில் வெளிவரும் கதைகள் மீது அதிக கவனம் செலுத்தியுள்ளார். அதற்காக பல வழிகளைக் கையாண்டார். அதன் மூலம் அவர் சில சிக்கல்களையும் சந்தித்துள்ளதாக தெரிகிறது.
    'மலேசியாவில் இருந்து மீண்டும் தமிழகம் வந்ததற்கு ”மலேசிய நாட்டில் தன்னுடைய இலக்கிய வாழ்க்கைக்கு உற்ற நண்பர்கள் இல்லை என்பதாலும், தமிழ் நாட்டு அன்பர்களை விட்டுப் பிரிந்திருக்க மனமில்லாததாலும் நான் மலேசியா நாட்டை விட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பினேன்” என்று அழகிரிசாமி காரணம் கூறினார். மேலும், "தமிழ்நேசன்' நாளிதழ் அலுவலகத்திலும் வெளியே அரசியல்வாதிகள் சிலரின் ஒத்துழையாமையும் அவருக்கு ஆசிரியர் பணியில் சோர்வை ஏற்படுத்தின.' என இணையத்தில் குறிப்பொன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.
    சு.வேணுகோபால் அவர்கள் எழுதியுள்ள இந்த கட்டுரை கு.அழகிரிசாமி அவர்களின் ஆளுமையைச் சிறப்பாகவே வெளி கொணர்ந்துள்ளது.
    சிறுகதை எழுத விருப்பமுள்ளவர்கள் எங்கிருந்து கதைகளை எடுக்கலாம். யாருக்கான கதைகளை படைக்கலாம் போன்ற விபரங்களை கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் வழி இக்கட்டுரையில் எடுத்துரைத்திருக்கிறார் கட்டுரையாளர்.
    'தமிழ்ச் சமூகத்தின் அசலான வாழ்க்கையை இவ்வளவு செறிவோடும் உக்கிரத்தோடும் சொன்ன வெறொருவர் இந்தக்காலத்தில் இல்லை' என கட்டுரையாளர் சொல்லிவிட்டு அதற்கான கதைகளையும் அறிமுகம் செய்கிறார்.
    'கார்சியா மார்க்வெஸ்ஸின் 'மிகப்பெரும் சிறகுகளுடன் வயோதிகன்' என்ற கதையில் விரியும் மானிட எண்ணங்கள் போல மார்க்வெஸ் எழுதுவதற்கு முன்னமே 'ஆதாரம் இருக்கின்றதா' என்ற கதையுள் ஒரு பிரச்சனையின் மையத்தில் பல்வேறுபட்ட மானிட எண்ண ஓட்டங்களின் ஊற்றுக் கண்களைத் திறந்துவிட்டிருக்கிறார்', என கட்டுரையாளர் சொல்லும் போது இக்கட்டுரைக்கான அவரது உழைப்பும் தேர்வும் நம்மை வியக்க வைக்கிறது.
    கு.அழகிரிசாமியின் பல கதைகளை, அது எப்படி முக்கியமான கதைகளாகிறது என கட்டுரையாளர் சொல்வது புதியவர்களுக்கு பாடமாகவும் வாசகர்களுக்கு மீள்வாசிப்பிற்கும் வழியையும் சமைக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக