(ஆறாவது கட்டுரையை முன்வைத்து...)
தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
*ஆறாவது கட்டுரையாக 'லா.ச.ராமாமிர்தம் : மனவுணர்வுகளைத் ததும்ப வைத்தவர்' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
இதற்கு முன்பாக லா.ச.ராவின் 'அபிதா' நாவலை வாசித்துக்ளேன். ஆங்கில படைப்பான 'லோலொட்டா'வை மையப்படுத்திய தமிழ் நாவல் என்று அறிய வந்தது. அது என் ஆரவத்தைத் தூண்டியதற்கு முதல் காரணம்.
'அபிதா' நாவலை லா.ச.ரா எழுதியிருந்த விதம் எனக்கு பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்ததது. உணர்ச்சிகளை சில இடங்களில் அவர் சொல்லிச்செல்லும் விதம் பிடிபட சிரமத்தைக் கொடுத்தது. மீண்டும் வாசிக்கையில் அதன் ஆழம் பிடிபட்டது.
அந்நாவலில் எனக்கு ஏற்பட்ட பல உணர்வுகளை அதற்கான காரணங்களையும் இக்கட்டுரையில் ஆசிரியர் சு.வேணுகோபால் நேர்த்தியாக கோடிட்டுக் காட்டியுள்ளார்.
நமது முந்தைய தலைமுறை படைப்பாளிகளின் படைப்புகளை இன்றைய சூழலோடு ஒப்பிட்டு வாசிப்பதால் இழப்பு நமக்குத்தான் என்பதை புரியும்படி கட்டுரைதை எழுதியுள்ளார்.
அவர்களின் படைப்புகளை வாசிக்க, எழுதப்பட்ட காலச்சூழலை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதை தெளிவாக்கியுள்ளார்.
கட்டுகளை உடைத்து எழுதி, நிலை பெற்ற படைப்பாளர்களும் உண்டு, உடைப்பதில் கவனமின்றி அந்த கட்டுக்குள் வாழும் மனிதர்களில் உணர்வுகளை எழுத்தாக்கி நிலைபெறும் படைப்பாளர்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
அதனை கட்டுரையாளர் ' புதுமைப்பித்தன் மரபின் இறுக்கத்தை சிறையாகப் பார்த்தார். உடைப்பதிலேயே தீவிரமாக இருந்தார். லா.ச.ரா மரபின் இறுக்கத்தையும் அழுத்தத்தையும் காயத்தையும் ஏற்று நகரும் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டார். '
அதோடு, ' லா.ச.ரா ஆண்களையோ பெண்களையோ குற்றவாளிகளாகப் பார்ப்பதில்லை. துன்பமும் இன்பமும் விதிக்கப்பட்ட சமூகவாழ்வின் ஒரு இயல்பாகக் காணுகிறார். பிரச்சனைகளின் வேர் அவருக்கு இரண்டாம்பட்சம்தான்' என்கிறார்.
கைகொண்ட கருவை விட அதனை கையாண்ட மொழியில் லா.ச.ரா தனித்து நிற்கிறார் என்பதற்கான பல கதைகளை கட்டுரையாளர் அறிமுகம் செய்கிறார். லா.ச.ரா வின் எழுத்துகளைப் புரிந்துக்கொள்ள அந்த அறிமுகக்கதைகள் உதவும்.
முந்தைய தலைமுறை படைப்பாளிகளின் குறைகளை பெரிதாக்கி ஒதுக்கி வைக்காமலும் நிறைகளை பெரிதாக்கி தூக்கி வைக்காமலும் இரண்டிற்கும் இடையில் உள்ள இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் இக்கட்டுரைகள் மிக முக்கியமான முன்னெடுப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக