லிங்கேஸ்வரன் இன்று கோவமாக இருந்தார். எப்போதுதான் கோவம் வரவில்லை என அவருக்கேக்கூட தெரியாது. சமயங்களில் கோவம்தான் நமது பாதுகாப்புக் கவசம். அது இருக்கிற வரையில் நாம் பாதுகாப்பாக இருப்போம்.
வாங்க வேண்டிய எல்லாம் வாங்கியிருந்தார். மீண்டும் ஒரு முறை சரி பார்க்க வேண்டும். ஏனெனில் இன்றைய பயணத்தில் மீண்டும் திரும்ப வருவதில் சிக்கல் உள்ளது.
ஆள் நடமாட்டக் கட்டுப்பாடு. காரண காரியமின்றி வெளியில் உலாவக்கூடாது. பிடிபட்டால் சிறையும் உண்டு அபராதமும் உண்டு. மந்திரி மகனாக இல்லாத பட்சத்தில் சட்டத்திற்கு பயப்படத்தான் வேண்டியுள்ளது.
குறிப்பிட்ட இடத்திற்கு உணவு பொட்டலங்களுடன் சென்றுச் சேர்த்தார். வசதி குறைந்தோர்க்கு, அவர்களின் வீட்டிற்கேச் சென்று தேவையான உணவு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு வீட்டில்,
"தம்பி என்னைய போட்டோ பிடிப்பீங்களா?"
"நீங்க விரும்பலன்னா போட்டோ எடுக்க மாட்டோம். எடுத்தாலும் முகத்தை மறைச்சிடுவோம். உங்களுக்கு அடுத்தடுத்த உதவிகள் கிடைக்கனும் அதான் எங்க நோக்கம். உங்களை அவமானப்படுத்துவது இல்ல..."
"இதுல என்ன அவமானம் கெடுக்கு தம்பி, போட்டோ எடுங்க, என் முகத்தை எல்லார்க்கும் காட்டுங்க.. அப்பதான் நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு என்னை சுத்தி இருக்கறவங்களுக்குத் தெரியும். ஏன்னா, நானும் என் பிள்ளைங்களும் ரெண்டு நாளா சாப்டல.... வெறும் பச்ச தண்ணியத்தான் குடிச்சிகிட்டு இருக்கோம்.. இது பக்கத்து வீட்டுக்காரருக்குக் கூடத் தெரியல.. நேத்து அவ்வளோ ரொட்டித் துண்டுகளை குப்பைல போட்டிருக்காங்க. என் போட்டோவை பார்த்தாவது நாங்க கஷ்டப்படறோம்னு தெரிஞ்சிகிட்டு அவங்க சாப்பாட்டை இப்படியெல்லாம் வீணாக்க மாட்டாங்கல்ல......"
உதவியை புகைப்படம் எடுப்பது தேவையா தேவையில்லையான்னு பேசிகிட்டு இருக்கற இந்த சமயத்துல, உதவி செய்ய கைகொடுப்பதுதான் அவசியம். அந்த உதவிக்கரம் நம் பக்கத்து வீட்டில் இருந்துக்கூட தொடங்கலாம் என நினைத்துக்கொண்டே பட்டியலின் அடுத்த வீட்டிற்கு பொட்டலங்களுடன் லிங்கேஸ்வரன் புறப்பட்டார்.
- தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக