3மே2020 தமிழ் மலர் ஞாயிறு பதிப்பு |
வணக்கம். நலமா? தொடர்ந்து என் எழுத்துகளை வாசித்து அவ்வபோது என்னை அழைத்து கருத்துகளை பறிமாறுவற்கு நன்றி. நான் எழுதியவை பலருக்கு அவர்களில் நினைவுகளை மீட்டெடுத்ததாக சொல்லியிருந்தீர்கள். சிலர் அவர்களின் அனுபவத்தையும் என்னிடம் பகிர்ந்து என்னை எழுத சொன்னீர்கள். எழுதிவர்க்கும் வாசிப்பவர்க்கும் ஏற்படும் உறவு உண்மையில் விசித்திரமானது. எங்கோ இருக்கும் சிலரில் எழுத்துகளை, எப்போதோ எழுதிய எழுத்துகளை இப்போது வாசித்து நான் மகிழ்ந்ததும் உண்டு அழுததும் உண்டு.
"நீ கொடுத்து வச்சவன், உனக்கு நல்லா எழுத வருது" என நண்பர் ஒருமுறைக் கூறினார். எழுதுவது ஒரு வகையில் கொடுத்து வைத்ததுதான். ஆனால் அதனையும் தாண்டி பெரும் பொறுப்பை சுமந்துக் கொண்டிருப்பது. மேலும் அந்த பொறுப்பை சுமந்துத் திரிவது அத்தனை எளிதானது அல்ல. ''சும்மா எழுதிகிட்டே இருக்கீங்க.. என்னத்த சாதீச்சீங்க.." என எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் கேள்விக்கு உட்படுத்தப்பட்ட ஒருவரின் எழுத்துகள் இன்று நாம் வாசிக்க நம் துன்பத்தைத் துடைப்பதோடு நமக்கு ஆறுதல் சொல்வதையும் நம்மை முன்னகர்த்துவதையும் நாம் கடந்துதான் வந்துக் கொண்டிருக்கின்றோம்.
என் எழுத்துகளை வாசித்து என்னுடன் உரையாட நினைப்பவர்களை நான் ரொம்பவும் நேசிக்கின்றேன். ஏனெனில் நான் பேசுவது அவர்களுக்குக் கேட்கிறது சொல்லப்போனால் நான் அவர்களுக்காகவே பேச முயல்கிறேன். நீங்கள் அனைவரும் என் அன்பிற்கு உரியவர்கள்.
அன்பு என்பது எத்தனை உன்னதமானது என யோசிக்கிறேன். ஆனால் அது உன்னதமானது மட்டும்தானா எனவும் சந்தேகிக்கிறேன். உண்மையில் அன்பை நாம் சரியாகத்தான் புரிந்துக் கொண்டிருக்கிறோமா என எப்போதாவது யோசித்தது உண்டா. இதில் யோசிக்க என்ன இருக்கிறது. அன்பு என்பது அன்பு மட்டும்தானே என சொல்கிறீர்களா. சரி அன்பு என்பது அன்பு மட்டும்தான என்கிற கேள்வியைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாமா?
நீங்கள் யாரை அல்லது எதன் மீது அதிக அன்பு இருப்பதாக நினைக்கின்றீர்கள்?. கொஞ்சம் யோசியுங்களேன். இப்போது நீங்கள் ரொம்பவும் நேசிக்கும் யாராவது ஒருவரின் பெயரை நினைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் உங்கள் கணவனையோ மனைவியையோ நினைத்துக் கொள்ளுங்களேன் அவருடன் எப்படியெல்லாம் அன்பை பறிமாறிக் கொண்டீர்கள். இருவருக்குமாக எத்தனை உன்னதமான தருணங்கள் சேர்ந்து வைத்திருக்கிறீர்கள்.
எல்லாம் இருந்தும், ஏதோ ஒரு நாளில் நீங்கள் அவர் மீது கை நீட்டியது இல்லையா. அவர் மனம் வலிக்க நீங்கள் திட்டியதில்லையா. இது சரியா தவறா என்கிற பட்டிமன்றத்தை ஒத்திவைத்து விடுங்கள். 'ஆமாம்', 'இல்லை என்கிற இரண்டு பதில்களில் ஒன்றை மட்டும் கொடுங்கள்.
அதனையே கொஞ்ச நேரம் யோசித்தவாறே ஒன்றை பகிர்கிறேன் கேளுங்கள்.
பத்துமலை. தைபூசம் முடிந்தும் ஆங்காங்கு பக்தர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். கடவுளுக்கும் எனக்கும் கொஞ்சம் கொடுக்கள் வாங்கள் இருக்கிறது. அதனால் நேர்த்திக்கடனுக்குச் சென்றிருந்தேன். உதவிக்கு நண்பர்களும் வந்திருந்தார்கள். அவரவர் கடன்களை அவரவர் சுமந்துச் சென்று, முதன்மை சன்னிதானத்தில் சேர்ப்பித்தோம். வழக்கமாக கொஞ்ச நேரம் அங்கு உலாத்திவிட்டு படியிறங்கிக் கொண்டிருந்தோம்.
வழக்கமாக படிகளில் வந்து விளையாட்டு காட்டிச் செல்லும் வானரங்கள் அப்போது குறைந்திருந்தன. இருந்தும் சில வானரங்கள் அங்குட்டும் இங்குட்டும் ஆட்டங்களைக் காட்டின. பழக்கமில்லாதவர்கள் பயந்தும் ஒதுங்கியும் சென்றுக் கொண்டிருந்தார்கள். சில வெள்ளைக்காரர்கள் மட்டும் பழைய நண்பர்களைச் சந்திப்பது போல வானரங்களிடம் உரையாடுகிறார்கள். விளையாடுகிறார்கள். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். அவர்களை விடவும் வானரங்களே அழகாக போஸ்கள் கொடுக்கின்றன.
படியின் தொடக்கத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றிலும் சில வானரங்கள் இருந்தன. பார்க்கையில் எங்களுக்கு அது ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அவர் கையில் வானரங்களுக்கு கடலையைக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு கையில் பால் பாட்டிலை வைத்திருந்தார். இன்னொரு கையில் கடலைகளை மொத்தமாக வைத்திருந்தார். வானரக்குட்டிகள் அவரின் கையிலிருந்து கடலைகளை எடுத்துக் கொண்டிருந்தன. கையில் வைத்த கடலையும் முடிந்தது. அவரும் கருணை பார்வைக் கொண்டு அவற்றுடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் ஒரு குவளையைக் கீழே வைத்தார். பால் பாட்டிலைத் திறந்து குவளையில் பாலை ஊற்றிக் கொண்டிருந்தார். ஒரு குட்டி வானரம் அதனைக் குடிக்கத் தொடங்கியது. அவரின் முகத்தில் அப்படியொரு அன்பு அப்படியொரு கருணை வழிந்துக் கொண்டிருந்தது.
இதுவரை அங்கிருந்த இன்னொரு குட்டி வானரம் ஒன்று சட்டென அந்த குவளையைத் தட்டிவிட்டது. பால் முழுக்க கீழே கொட்டிவிட்டது. அவர் என்ன நினைத்தாரோத் தெரியவில்லை. படாரென அந்த குட்டி வானரத்தை அடித்தார். கையில் வைத்திருந்த பாட்டில் பால் முழுவதையும் கீழே கொட்டிவிட்டார். அப்போது அவர் முகத்தை பார்த்திருக்க வேண்டும். அத்தனை கோரமாக மாறிவிட்டிருந்தது. அதுவரை அவர் அருகில் இருந்த வானரங்கள் மட்டுமல்ல, அதுவரை அருகில் நடந்துக் கொண்டிருந்தவர்களும் ஒதுங்கி நடக்கலானார்கள்.
என் மனதில் அந்த காட்சி அப்படியே பதிந்துவிட்டது. என்னுள் சில கேள்விகள் எழ ஆரம்பித்தன. எது அந்த நபரின் உண்மை முகம் என கேட்டுக்கொள்கிறேன். எது அவரை சட்டென அத்தனை கோவக்காரராக மாற்றியது. கருணை மொழியில் பேசிக்கொண்டிருந்த வானரங்களிடம் ஏன் முரடனாக நடந்துக் கொண்டார். யோசியுங்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அன்புதான் என்றால் நம்புவீர்களா?. நம்பதான் முடியுமா?
'நாம் அன்பு வைக்கும் ஒன்றின் மீது நாம் நமது வன்முறையைக் காட்டிவிட தயங்க மாட்டோம்' எனும் கூற்றில்தான் எத்தனை உண்மை.
உறவுகளாக இருக்கட்டும், வளர்ப்பு பிராணிகளாக இருக்கட்டும், அன்பு வைத்திருக்கும் நாமே அதற்கு மாறான வன்முறை காட்டிவிடுகிறோம். நாம் அன்பு வைக்கும் ஒருவர் மீதோ அல்லது ஒன்றின் மீதோ நாம் நம் முழு அதிகாரத்தைக் காட்டிவிட முனைகிறோம். இது எத்தனை வேடிக்கை.
அன்பு வைப்பது என்பது அவரை அவராகவே ஏற்றுக்கொள்வதுதானே.
முதலில் சொன்ன அந்த நபருக்கு வானரங்களில் குணம் தெரிந்திருக்கும் தானே, ஆனால் ஏன் அவர் அப்படி நடந்துக் கொண்டார். அவர் வானரங்கள் மீது அன்பு காட்ட நினைக்கிறார். அதற்காக வானரங்களுக்கு சாப்பிடக் கடலைகளைக் கொடுக்கிறார். பாலையும் அதற்கு அருந்தக் கொடுக்கிறார். தான் அன்பு காட்டிய வானரங்களை அவர் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைக்கிறார். நடக்கும் காரியமா அது. நடக்கவில்லை. அது அவருக்கு கோவத்தைக் கொடுத்தது. வானரங்களை அடிக்கவும் செய்தார். அவரைப் பொறுத்தவரை அவர் அன்பு காட்டிய அவை, அவரின் உரிமையாகிவிடுகின்றன.
நாம் நமது வாழ்வில் அப்படித்தான் புரிதலைக் கொண்டு நம்மையும் காயப்படித்தி அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்துகிறோம்.
சுருங்கச் சொன்னால், நாம் அதிகம் நேசிக்கும் ஒரு பொருளை அதீத கோவத்தில் நாம் உடைக்கவும் செய்கிறோம். கவனித்தீர்களா. அதனை உடைத்து வீசும் மனநிலைக்கு என்ன காரணம். அதனை நாம் விரும்புகிறோம் அதனால் அதனை உடைத்து வீசும் உரிமையை நாம் எடுத்துக்கொள்கிறோம்.
கணவன் மனைவி மீதோ, மனைவி கணவன் மீதோ, பெற்றோர் பிள்ளைகள் மீதோ என அடுக்கிக்கொண்டே போகலாம். நாம் யார் மீது அன்பு வைத்திருக்கிறோமோ, யாரை நேசிக்கின்றோமோ அவர் மீதுதான் வன்முறை செலுத்தும் உரிமையை நாம் எடுத்துக் கொள்கிறோம்.
நாம் நேசிக்கும் ஒருவர், நமக்கு ஏற்றார்போல இருக்க வேண்டும் எதிர்ப்பார்ப்பது எத்தனை சிறுபிள்ளைத்தனம். நம்மை போலவே அவருக்கும் சொந்த சிந்தனை, அனுபவங்கள் ஆசைகள் இருக்கிறதுதானே.
இதற்காக அறிவுகளைக் கூடவா சொல்லக்கூடாது என்றில்லை. அவர்களிடம் நாம் பேசும் மொழி வன்முறையாகக் இருக்கக்கூடாது. இருந்துவிடக்கூடாது.
அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்வோம். அதற்கு பெயர்தான் அன்பு செய்வது.
*நன்றி தமிழ் மலர் ஞாயிறு பதிப்பு
- தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக