#கதைவாசிப்பு_2020_11
கதை – உள்ளக் கிளர்ச்சி
எழுத்து –
மௌனி
புத்தகம் –
காலச்சுவடு ஜனவரி 2020
கல்கி, நவம்பர் 1, 1943-ல் வெளிவந்த கதை. காலச்சுவடு
‘கதைத்தடம்’ பகுதியில் மீள் பிரசுரம் செய்துள்ளார்கள்.
‘உள்ளக் கிளர்ச்சி’ ஒரு பக்க கதைதான். ஆனால் அது
சொல்லிய விடயம் பல பக்கங்களுக்கானது. இன்றளவும் நம்மிடையே இருக்கும் மனநிலைதான் இக்கதையின்
அடித்தளம்.
இரயில் நிலையம் இரவு. மழை. அங்கு தங்கிவிட்டுச்
செல்ல பயப்படும் பெண். நனைந்தவாரு வீட்டிற்குச் செல்கிறாள். நல்ல இருட்டு. அவள் செல்லும்
வழியில் தன் முன் யாரோ ஒருவர் குடை பிடித்துக் கொண்டு செல்கிறார். உதவிக் கேட்டு அந்த குடையின் ஒரு பங்கில் வீட்டிற்கு
செல்ல நினைக்கிறாள். பின் அவளே அந்த நினைப்பை உதாசிணம் செய்கிறாள். இப்படியா ஆணின்
குடையில் ஒரு பெண் ஒண்டிக்கொண்டு உதவி கேட்பது என தன்னத்தானே கேட்கிறாள்.
குடையுடன் சென்ற ஆண் அவளை கவனிக்கிறான். இப்படியா
ஒரு பெண்ணை இரவில் அனுப்புவது. இது அத்தனைப் பாதுகாப்பு இல்லையே. யார் அனுப்பியிருப்பார்கள்
என அனுப்பியவர்களை திட்டுகிறான். சரி தானாவது அவளை தன் குடையில் கொஞ்சம் நுழைந்துக்கொள்ள
அழைக்கலாமா என நினைக்கிறான். அழைத்து தன்னை அவள் தவறாக நினைத்துவிட்டால் என்ன செய்வது
என யோசித்து ஏதும் செய்யாமல் நடையைத் தொடர்கிறான்.
அந்நேரம் மின்னல் வெளிச்சம் கொடுக்கிறது. தன் வீடை
நெருங்கிவிட்டதை அவள் அறிகிறாள். அப்போதுதான் தெரிகிறது அந்த ஆண் இன்னமும் அவளை முன்னேதான்
நடக்கிறான். பயம் வந்தாலும் வீட்டை நெருங்கிட்ட துணிச்சல் அவளிடம் தோன்றுகிறது.
அதே சமயம் அந்த ஆண், அவள் இவ்வளவு தூரம் தன்னை தொடர்ந்து
வந்துள்ளதை தெரிந்துக் கொள்கிறான். ஒருவேளை தங்குவதற்கு உதவி கேட்பாளோ என யோசிக்கிறார்.
ஆச்சர்யம். அவளின் வீட்டில் அந்த ஆண் நுழைகிறான். அவளும் அந்நேரம் வீட்டிற்கு அருகில் வந்துவிட்டாள்.
அப்போதுதான் அந்த ஆணை சரியாக பார்க்கிறாள். அது அவளது அண்ணன் தான்.
அண்ணனுக்கும் அதிர்ச்சி, தங்கையைப் பார்க்கிறார்.
அவளிடம் அதான் என்னை பார்த்தாயே ஏன் என்னை அழைக்கவில்லை. இப்படி கொட்டும் மழையில் நனைந்து
வந்திருக்கிறாயே என கேட்கவும் செய்கிறார். இருட்டில் முன்னே சென்றது யாரென்று தெரியவில்லை
என்றவள். பெண்ணொருத்தி இப்படி வருகிறாளே உதவி செய்திருக்கலாமே என்கிறாள்.
அண்ணனும் இருட்டில் வந்தது அவள்தான் என தெரியவில்லை
என்கிறார். இந்த நிலமையில் முன்னே செல்பவரை அழைத்து யாரென்று தெரிந்திருந்தாள் உதவி
கேட்டிருக்கலாமே என்கிறார். பின்னர் இருவரும்
சிரிப்பதாக கதை முடிகிறது.
இக்கட்டான
சூழலில் கூட இன்னொரு மனிதனை அழைக்க முடியாமல் போகும் நிலமையில்தானே நாம் இன்னும் இருக்கிறோம்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அவன் யாராக இருந்தாலும் உதவ முடியாமல் போவதும் தன்னிடம்
உதவி கேட்பவர்களையே தன் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்பவர்களை நாம் பார்த்துக்
கொண்டுதானே இருக்கிறோம்.
மனிதனுக்கு அச்சம் கொடுக்கக்கூடியது இன்னொரு மனிதன்
என்பது எத்தனை வேதனையானது.
நன்றாக யோசித்தே இக்கதைக்கு ‘உள்ளக் கிளர்ச்சி’
என தலைப்பிட்டிருக்கவேண்டும். அக்கிளர்ச்சி கதையில் நடந்தேறாவிட்டாலும் வாசிக்கையில்
நம் மனதில் ஒரு ஆட்டம் ஆடிவிடதான் செய்கிறது.
-தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக