Pages - Menu

Pages

ஜனவரி 27, 2020

பூங்குழலியின் கவிதைகள்


     முதலில் கவிதையை நான் எவ்வாறு புரிந்து கொள்கிறேன் என்பதைச் சொல்லிவிடுகிறேன். அறிவிற்கும் மனதிற்குமான இடைவெளியை வார்த்தைகள் மூலம் நிரப்புவது கவிதை. உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பாதிப்பில் உழன்று கொண்டிருக்கும் மனிதனின் வாழ்வில் விடுபட்ட பக்கங்களை நினைக்க வைப்பதும், அவன் விட்டுவிட்ட இடங்களை நிரப்ப வைப்பதும் கவிதையின் செயல்பாடாகப் பார்க்கிறேன். இன்னொன்றையும் இங்கு சொல்லிவிட நினைக்கிறேன். அறிவார்ந்த கவிதைகளையோ தத்தம் தமிழ்ப் புலமையைப் பறைசாற்ற நினைக்கும் கவிதைகளோ என் வாழ்வின் விடுபட்ட இடத்தை நிரப்பவோ மீண்டும் நினைவுகூரவோ உதவவில்லை. அதன் சொல்லாடல்களை கொஞ்சநேரம் ரசிக்கலாம். இன்னும் போனால் ‘அட’ என பிரமிக்கலாம். வெறுமனே அத்தகைய பிரமிப்புகளைச் சிலாகித்து ஏமாற்றமடையும் வாசகன் மீது பாவப்படாமல் இருக்க முடியவில்லை.
           
    இப்போது பூங்குழலியின் கவிதைத் தொகுப்பிற்கு வருகிறேன்.‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ என்பது தலைப்பு. நடந்துக் கொண்டிருக்கும் ஒன்றிற்கும் அதற்கான காரணங்களும் என இதனை புரிந்து கொள்ளலாம். பெரும்பாலானவை நிகழ்காலத்தையே மையமிட்டுள்ளன.

    பூங்குழலியின் கவிதையுலகை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். (‘உயிர் வேட்டை’ என்கிற கவிதைத் தொகுப்பில் ஈழப்போர் குறித்து இவர் எழுதியிருப்பதை நான் இன்னும் படிக்காததால், இத்தொகுப்பின் கவிதைகள் மற்றும் அவரது இன்னபிற கவிதைகளை வைத்துச் சொல்கிறேன்.) ஒன்று குழந்தைகளால் சூழ்ந்திருப்பது இன்னொன்று காதலில் தொடங்கி எல்லாவற்றிலும் ஏமாந்து நிற்பது. ஒன்று அக உலகம் இன்னொன்று புற உலகம். அக உலகம் குழந்தைகள் காதல் சார்ந்தும். புற உலகம் போர் சார்ந்தும் இருக்கிறது.

    ஒருபக்கம் குழந்தைகளின் குதூகலம் இன்னொரு பக்கம் விரக்தி ஏமாற்றம் என இருக்கிறது. இரண்டுக்குமான இடைவெளியை எப்படி புரிந்து கொள்வது. அந்த இடைவெளியை குழலி எதனைக் கொண்டு நிரப்பிக்கொள்கிறார் என யோசிக்கவிடாமல் இரு பக்கங்களிலும் கவிதைகள் அடர்த்தியாக வளர்ந்து நிற்கின்றன.

     ’மிகப்பிடித்த ஒருவனின் புகைப்படம்’ என்ற கவிதை. அண்ணனின் புகைப்படம் குறித்து சொல்கிறார். பின்னர் நாமும் நமது புகைப்படமாக அதனை நினைத்துக் கொள்கிறோம். அதனையொட்டி அவர் எழுதியிருப்பதெல்லாம் நம்மையும் புகைப்படத்தில் ஒரு பகுதியாக ஆக்கிவிடுகிறது. நிறைவாக, ‘அவன் இறந்து  போன அன்றும்’ என்ற வரிகளுக்கு பின் சட்டென நம்மை அந்த புகைப்படத்தில் இருந்து அந்நியப்படுத்திக் கொள்ள வைக்கிறார். இதுவரையும் குழந்தைபோல கொண்டாட்டம் கொண்ட மனது பாரமாகிறது. இறந்து போய் புகைப்படங்களாக இருப்பவர்கள் வளர்வதை நிறுத்திவிட்ட செய்தி எத்தனை துக்ககரமானது.

     அடுத்த இரண்டு கவிதைகளில் ஜென் பாணி இருப்பதைப் பார்க்கிறேன். குழலிக்குத் தத்துவம் கைகூடியுள்ளது. அதற்கு அவர் விரும்பும் குழந்தைகள் உதவியிருக்கிறார்கள். ‘நாயொன்று இறந்தது குறித்த கதை’ எனும் கவிதைதான் அது. இறந்துவிடுவதை அல்லது மரணத்தைக் கொஞ்சமும் புரிந்துக்கொள்ளாத குழந்தை இறந்த நாய் குறித்து சொல்கிறது. குழந்தைகள் நம்பும் பொய்யான உலகத்தை நாம் நம்புவது அத்தனை சாதாரணமல்ல அதற்கு குழந்தைக்கு இணையான மனம் வாய்க்க வேண்டும். அந்த மனம் கள்ளம் கபடமின்றிச் சிரித்திட வேண்டும். இல்லாத நாய் குறித்தும் அதன் இறப்பு குறித்தும் சொல்லிய குழந்தை தூங்கிவிட்டது. ஆனால், இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு அந்த நாயைத் தேடி அலைவதென்பது ஜென் நிலையாக அல்லாமல் என்னவாக இருக்க முடியும்.

     இன்னொன்று, ‘எறும்பு’ என்னும் கவிதை. அன்றாட வாழ்வில் பட்டும்படாமலும் இருக்க நினைக்கும் மனிதன்தான் தன் மீது அனைத்து ஆசாபாசங்களையும் போட்டுக்கொண்டு புலம்பிக்கொண்டிருக்கிறான். இக்கவிதையில் சொல்லப்படும் எறும்பைப் போல நிகழ்காலத்தில் வாழ்வை ரசிக்கும் மனம் கொண்டவர்களைச் சந்திப்பது அத்தனை சாதாரணமல்ல

    ‘அது ஒரு தற்கொலை’ என்னும் கவிதை, வாழ்வு குறித்த அர்த்தங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது. குழந்தைகளை ரசித்த பின்பு இவ்வாறான கவிதைகளைப் படிக்கையில் பதட்டமும் பயமுமே மனதில் தேங்கி நிற்கிறது.

    மரணம் மீது குழலிக்கு இருக்கும் ஈடுபாடு வியப்பைக் கொடுக்கிறது. ‘மரணத்தின் கோப்பை’ என்பதில் இரு மரணித்தவர்கள் குறித்துப் பதிவு செய்கிறார். மரணத்துக்குப் பின்பான வாழ்வு இறந்தவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ அவர்களை இழந்த நமக்கு அவர்களுக்கு பின்பான வாழ்வு இருப்பதைக் காட்டுகிறது.

   ‘பயணிக்கிறேன்’ என்ற கவிதையை வைத்து நல்லதொரு சிறுகதையை எழுதிவிடலாம். ஆனால் ஏனோ கவிஞர் இன்னும் சிறுகதை எழுதவில்லையென்றே நினைக்கிறேன். நமது அனைத்துவிதமான ரகசியங்களையும் நம்மைவிட அதிகம் தெரிந்திருப்பது நமது அறைதான். அப்படியான அறைக்குள்ளே நாம் வர பயப்படுகிறோமெனில் ஆகக் கடைசியாக நமக்கே நாம் துரோகம் செய்துவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    ‘அவனைச் சுற்றி யாருமில்லை’ என்ற கவிதையில் தன்னையே கவிஞர் வரைந்திருப்பதாக நினைக்கிறேன். ஒருபக்கம் பொருளாதாரம் இன்னொரு பக்கம் அதற்கான ஓட்டம் என இருந்தும் தன் வாழ்வின் பக்கங்களைக் கவிதைகளாக குழலியால் எப்படி நிரப்ப முடிகிறது என இக்கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் புகைப்படக்காரன் காட்டிவிடுகிறான். காரணங்கள் எத்தனை சொன்னாலும் நாம் விரும்பினால் எத்தகையக் காரியங்களைச் செய்துவிட முடியும் என்பதை நினைவூட்டும் கவிதை இது.


    குழலி சொல்லி வரும் கவிதைகளில் இருக்கும் காதலில் ஏக்கமும் ஏமாற்றமும் தெரிகிறது. ஒருபோதும் வெற்றியடைந்த மகிழ்ச்சியை, அவரது காதலைச் சொல்லும் கவிதைகளில் காண முடிவதில்லை. இது பலவீனமா என்றால் அப்படியும் இருக்கலாம். ஆனால் அந்த நிலையைக் கவிதைகளாக்குவது அவரது பலமே.

 குழந்தைகளுக்கான கவிதைகள் கடினமின்றி எழுதிவிடலாம். அதனை குழந்தைகள் வாசிக்க இலகுவாக எழுதுவது அத்தனை சிரமமான காரியமல்ல. ஆனால் கவிதைகளில் குழந்தைகளை எழுதுவது சுலபமல்ல. மனதில் எப்போதும் வாழும் குழந்தை இருந்தால் மட்டுமே அப்படியான கவிதைகள் சாத்தியம். பலர் பல காரணங்களைச் சொல்லித் தங்களுக்குள்ளே கொன்றுவிட்ட குழந்தை, குழலியின் மனதில் குழந்தையாகவே இருப்பது வாசகனாக எனக்கு மகிழ்ச்சிதான். நானும் எனது குழந்தைப் பருவத்திற்கு அவரின் உதவியுடன் சென்று வருவேன். சொல்லப்போனால் குழந்தைகளுடன் எப்படி பேச வேண்டுமெனவும் தொடர்ந்து கற்றுக்கொள்வேன்.

   இவ்வாறு பல கவிதைகள் கொண்ட தொகுப்புதான் ‘நிகழ்தலும் நிகழ்தலின் நிமித்தமும்’
நிறைவாக சொல்வது என்னவெனில்;

    கவிதையுலகில் பூங்குழலிக்கும் ஓரிடம் கிடைக்க அதிக நாட்கள் ஆகப்போவதில்லை என்று நம்புகிறேன் அதற்கான உழைப்பை கொடுத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், காதலிக்க வேறு குறுக்கு வழி இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.

- தயாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக