Pages - Menu

Pages

ஆகஸ்ட் 21, 2016

கதை வாசிப்பு 25 - கதவு

கி.ராஜநாராயணனின் 'கதவு'


முதலில் இச்சிறுகதை இத்தனை ஆண்டுகளாகியும் பேசப்படுவது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. இக்கதை சொல்வது ஓர் ஏழ்மை குடும்பத்தைப்பற்றி. வெளியூருக்கு வேலைக்கு போன தந்தை, போனவர் போனவர்தான். ஐந்து மாதங்கள் ஆகியும் எந்த விபரமும் இல்லை. ஒரு சிறுமி ஒரு சிறுவன் ஒரு கைக்குழந்தையை வைத்திருக்கும் அம்மா எதிர்கொள்ளும் சிக்கல்தான் கதை.

 அப்படியொன்றும் கதையில் இருப்பதாக தெரியவில்லையே என்கிற நினைப்பு வராததற்கு எழுத்தாளர் கையாண்டிருக்கும் படிமமும் வாசகர்களை யார் மீது கவனம் வைக்கவிடுகிறார் என்பதும் முக்கிய காரணமாகிறது.

இந்த மாதிரி வறுமையைச் சொல்லும் கதைகள் ஏராளம் உண்டு ஆனால் இக்கதை அதில் இருந்து தன்னை மாறுபடுத்திக்காட்டுகிறது. கதவின் பயன்பாடுதான் அதற்கான காரணம் .

கதவு. இதுவரை திறக்கவும் மூடவும் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் நமக்கு கதவை படிமமாக்கி அதற்குள்ளே ஆன்மாவை மறைத்து வைத்திருக்கிறார் கி.ரா .

இக்கதவு குழந்தைகளுக்கு ரயில் , சிறுமிக்கும் சிறுனுக்கும்  அப்பா, கைக்குழந்தைக்கு பாதுகாப்பு, வீட்டிற்கு கௌரவம். குழந்தைகளால் மட்டுமே ஜடப்பொருள்கள் மீது தாங்கள் விரும்பும் ஒன்றை ஏற்றி வைத்துக் கொண்டாட முடிகிறது.

குழந்தைகளுக்கும் கதவுக்குமான ஆத்மார்த்தமான உறவு இக்கதையை இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 இப்போதெல்லாம் கதவின் மீது கைபடாதவாறு ரிமோட்டில் அதனை இயக்குகிறோம். இக்கதை மனிதன் தொலைத்துக்கொண்டிருக்கும் வாழ்வின் அர்த்தத்தை காட்டுவதாகவே மனதில் படுகிறது. இக்கதையை படித்து முடித்தபின் என் வீட்டுக்கதை ஒருமுறை ஆழமாக தொட்டுத் தடவிப் பார்க்கிறேன். சட்டென கதவு என்னையும் குழந்தையாக்கி ரயில் ஏற அழைக்கிறது.


-தயாஜி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக