Pages - Menu

Pages

ஆகஸ்ட் 21, 2016

கதை வாசிப்பு 24 - பிரயாணம்

அசோகமித்திரனின் பிரயாணம்.

     குரு, சீடன்,ஓநாய்களைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது .குருவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பலகை மீது தன் குருவை வைத்து இழுத்துப்போகிறான் சீடன். கடந்துச் செல்லவேண்டிய தூரம் முன்பை விட இப்பொழுது அதிகமாகப் படுகிறது. இடையில் ஓநாய்களை சீடன் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

    பயண்த்தில் எதிர்பாராதவிதமாக குரு இறந்துவிடுகிறார்.  சிகிச்சைக்காக தொடங்கிய பயணம் பின்னர் குருவை சமபரப்பில் புதைக்கவேண்டிய நோக்கமாக மாறுகிறது.

     பயணத்தின் அடுத்த இரவில் ஓநாய் கூட்டங்களொடு சிஷ்யன் போராடும் சூழல் ஏற்படுகிறது. அதற்கிடையில் சில ஓநாய்கள் குருவின் சடலத்தை பள்ளத்தாக்கில் போட்டுவிடுகிறது. மயங்கி விழுந்துவிட்ட சிஷ்யன் மறுநாள் அதிர்ச்சிக்கொண்டு எழுகிறான் . குருவின் உடலைத்தேடி பள்ளத்தாக்குக்கு போகிறான். ஓநாய்கள் தின்று மிச்சம் வைத்திருந்த உடலை காண்கிறான் சிஷ்யன்.
ஆனால் குருவின் கையில் கட்டியிருந்த துணி அறுபட்டுக் கிடந்தது. ஒரு ஓநாயின் கால்
அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு,  குருதேவரின் வலது கைப்பிடியில் இருந்தது. கதை அங்கு முடிகிறது .

     அப்படியெனில் குரு இறக்கவில்லையோ என்கிற சந்தேகம்  வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

    மீண்டும் ஒரு முறை கதையை மனதிற்குள் அசைபோட்டேன் . குரு,சிஷ்யன்,ஓநாய்,நிஜம்,  நம்பிக்கை போன்றவை மனதில் வந்து நிற்கிறது.

    குருவின் சிகிச்சைக்கான பயணத்தில் குரு இறந்துவிட்டதாக சிஷ்யன் நம்புகிறான் . அதனை அவன் பரிசோதிக்கவில்லை. பரிசீலனையும் செய்யவில்லை. தான் நம்பியதற்கு ஏற்றார் போல தன் பயண நோக்கத்தை மாற்றுகிறான் . அதே பயணம்தான் ஆனால் இப்போது அதன் நோக்கம் மாறிவிட்டிருக்கிறது.

    ஆன்மிக தேடலை இதைக்கொண்டு அணுக நினைக்கிறேன். தனக்கு போதிக்கப்படும் போதனைகளை எந்த பரிசீலனையும் இன்றி எந்த கேள்வியும் இன்றி பின்தொடரும் மனிதன் . குருவின் இறப்பை தவறாக புரிந்துகொண்டு ஓநாய்களுக்கு இரையாக்கியது போல கிடைக்கவேண்டிய  ஞானத்தை தவறான புரிந்துணர்வின் மூலம் கேள்விகளற்று எதற்கோ இரையாக்கிவிடுகிறோம். அர்த்தமின்றி வாழ்வில் நாமும் கூட ஓநாய்களோடு போராடிக்கொண்டிருக்கிறோம்.

-தயாஜி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக