Pages - Menu

Pages

டிசம்பர் 10, 2015

பெரிய கெட்ட நரியும் பெருவாதி புத்தகங்களும்



BIG BAD WOLF- இந்த ஆண்டும்  MIECC@THE MINES-சில்  உலக மிகப்பெரிய புத்தக விற்பனையை ஆரம்பித்திருக்கிறார்கள். டிசம்பர் 4 தொடங்கிய அப்புத்தக விற்பனை டிசம்பர் 14 வரையில் நடைபெறும். அதோடு 24 மணி நேரம் அவ்விற்பனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 





வீட்டம்மா இல்லாமல் நானும் நண்பர் ஸ்ரீதரும் சென்றிருந்தோம். இயல்பாகவே வாசிக்கின்றவர்களிடம் ஒரு நெருக்கம் எனக்கு ஏற்படுவதுண்டு. அப்படித்தான் தன் வாசிப்பனுபவத்தால் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியபவர்களில் அவரும் ஒருவர்.

ஸ்ரீதர் ரங்கராஜன்
இன்று (9/12/2015) காலையில் பத்து மணிக்கு புறப்பாடு என சில தினங்களுக்கு முன்னமே முடிவெடுத்திருந்தோம். அது தொடர்பாக நண்பர்களையும் அழைத்திருந்தோம். வேலை நாள் என்பதால் அவர்கள் வருவதில் சிரமம் இருந்தது. முதல் நாள் இரவு வீட்டம்மாவிடம் காலையில் புறப்படவேண்டிய விபரங்கள் குறித்தெல்லாம் சொல்லியப்பின் அலாரத்தையும் வைத்துவிட்டேன். 

சரியாக காலை ஏழு முப்பதுக்கு அலாரம் வைத்து, அது சத்தமிடும் சமயம் இன்னும் ஐந்து நிமிடம், இன்னும் ஐந்து நிமிடம் என அலாரத்தை மாற்றி மாற்றி காலை ஒன்பதுக்கு பிறகு எழுவது விடுமுறை கால வழக்கமாகியிருந்தது. காலையில் சரியாக அலாரம் அடித்தது. மீண்டும் தூங்கவிடாத சத்தம் அது. ஒலித்தது கைபேசி. எவண்டா இவ்வளவு காலையில் என தூக்கிவாரி போட்டு பார்த்தேன். பிரைவட் எண்ணில் இருந்து அழைப்பு இருந்தது. திரும்ப அழைக்கவும் முடியாது. யார் அழைத்திருப்பார்கள் என்ற குழப்பம் தூக்கத்தை தடுத்தது. அதைவிட அதிர்ச்சி ஒன்று அடுத்ததாக வந்தது. 

கைபேசி சத்தம் கேட்டு வீட்டம்மா அரைகுறை தூக்கத்தில் உளறினாள். “என்ன இது புதுசா அலாரம் கொடுத்தெல்லாம் உங்களை யாரோ எழுப்பிவிடறாங்க..” மண்டைக்குள் மணியடித்ததும் வீட்டம்மாவை பார்த்தேன், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.  ஒருவேளை பிரம்மையாகவும் இருக்கலாம். அல்லது இதைத்தான் வீட்டம்மா சொல்லியிருக்கக் கூடும் என ஆழ்மனம் அவள் குரலில் சொல்லியிருக்க வேண்டும். வர வர நம்ம ஆழ்மனம் கூட அடிக்கு பயந்துதான் போகுது.

குழப்பத்திலேயே இப்படியும் அப்படியும் புரண்டு ஒரு வழியாக தூங்கினேனோ இல்லையோ ஒன்பது மணிக்கு வெளியேறினேன்.

ஸ்ரீதர் வீட்டில் காபி நன்றாக இருக்கும் என்பதை சொல்லி இம்முறையும் காபி கிடைக்கப்பெற்றேன். ஜாலியாக புறப்பட்டோம். காதலிக்கு  ரோஜாவை பரிசளிக்கும் மனநிலையில் இருவரும் இருந்தோம். எந்த புத்தகங்களை வாங்கலாம் என மனக்கணக்கில் ஒரு பட்டியல் தானாய் எழுதிக்கொண்டிருந்தது. இருந்தும் ஸ்ரீதரிடம் எனக்கான சில புத்தகங்களை பரிந்துரைக்கச் சொன்னேன். அவ்வாறே ஆகட்டும் என அருள்பாளித்தார். ஆங்கில சிறுகதைகளின் அவசியமும் அதன் வாசிப்பும் எங்களின் உரையாடலில் நுழைந்தது.

’மைன்ஸ்’ உள்ளே காரை வைத்துவிட்டு. இருவரும் இயல்பு நடையை விட்டு புதிய நடையில் நடந்துக் கொண்டிருந்தோம். கையில் முன்னமே பயணப்பெட்டியை கொண்டிருந்தேன். இப்போது பயணப்பெட்டி புத்தகப்பெட்டியாகப் போகிறது.
இந்த புத்தக விற்பனையில் சில சிறப்புகள் உள்ளன;

 

1.      வீட்டில் இருந்தே புத்தகங்களை கொண்டு போக பெட்டியோ அல்லது சூட்கேஸோ கொண்டு போகலாம்.

2.      குழந்தை, இலக்கியம் , விருது பெற்ற புத்தகங்கள், மலாய், ஆங்கிலம் என பட்டியல் போட்டு ஒவ்வொரு இடமாக புத்தகங்கள் இருக்கின்றன.

3.      இருநூறு வெள்ளிக்கு அதிகமாக புத்தகம் வாங்கினால் சிறப்பு பற்றுச்சீட்டும் உண்டு.

4.      அதிகமான புத்தகங்களை வாங்கிக் கொண்டால், தேவையெனில் நமது கார் வரையில் புத்தகங்களை கொண்டுவந்துக் கொடுப்பார்கள்.

5.      உதவிக்கு எப்போதும் தயாரகவே சிலர் சுற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

6.      ஆதர்வற்ற குழந்தைகளுக்காக புத்தக தானம் செய்யும் ஏற்பாடும் உள்ளது.

7.      மேல் மாடியில் சாப்பாட்டு கடைகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

8.      புத்தகங்களை பாதி பார்த்தும் பசி எடுக்கலாம், அங்கிருக்கும் கூடாரத்தில் அதுவரை வாங்குவதற்காக எடுத்த புத்தகங்களை கொடுத்து நமது பெயர் தொலைபேசி எண்களை கொடுக்கலாம். சாப்பிட்டு வந்து அங்கிருந்து புத்தகங்களை வாங்கி மீண்டும் தேடலில் இறங்கலாம். 

9.      புத்தகங்களிலேயே விலை (கழிவு விலை) அச்சடிக்கப்பட்டிருப்பதால், பணம் கட்டுவதற்கு முன்னமே நாம் கணக்கிட்டு கொள்ளலாம்.

10.  பணம் கட்டியப்பின் வெளிவரும் வழியில், பல வகையான போஸ்டர்கள் விற்பனையில் இருக்கின்றன.


11.  எல்லாம் முடித்து வெளியேறும் சமயம் அதுவரை வாங்கிய ரிசிட்டை காட்டினால் மட்டுமே வெளியே செல்ல முடியும், பரிசோதனை செய்ய சிலர் முகப்பில் காத்திருப்பார்கள்.



சரி இதர வசதிகளை நீங்களே வந்து பார்த்து வாங்கி தெரிந்துக் கொள்ளுங்கள். அப்படி உங்களிடம் பத்து  வெள்ளிதான் இருக்கென புலம்பினால், அதற்கேற்ற வகையிலும் பல புத்தகங்கள் இருக்கின்றன.

அத்தனை பெரிய புத்தக விற்பனை சந்தையில் கைவிட்டு , வேண்டாம் சும்மா கண்ணாலேயே கூட கணக்கிடும்படி தமிழர்கள் சிலர் இருந்தார்கள். அதெப்படி சொல்லலாம், நேற்று வந்திருக்கலாம் இல்லைன்னா நாளைக்கு வருவதற்காக திட்டமிட்டிருக்கலாம் என என்னை நீங்கள் கேட்பது நியாயமானதுதான். அப்படியே நாளைக்கு நீங்களும் அங்கு சென்று புத்தகங்களை வாங்கி கணக்கிட்டு சொல்லுங்கள் என சொல்வதிலும் எனக்கொரு நியாயம் இருக்கிறது.

 

கடந்த ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் இந்தியன் (indian) என குறிப்பிட்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கான விநாயகர் கதைகள், நன்னேறி கதைகள், புராண கதைகள் இருந்தன. அடுத்த முறை தமிழ் புத்தகங்களையும் சேர்த்துக் கொள்ளுபடி கோரிக்கையை வைத்திருக்கிறேன். 

மலாய் சீன குழந்தைகள் பெற்றோருடன் வந்திருந்தது பார்ப்பதற்கே அத்தனை இன்பமாக இருந்தது. தமிழ் புத்தகம் எவன் சார் படிக்கறான் என கேட்கும் ஒவ்வொருவரிடமும், அய்யா ராச நீ எத்தனை புக்கு படிச்சி கிழிச்ச.. என கேட்கலாம். பொதுவாகவே மலேசியர்களிடம் பல்வேறு காரணங்களால் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவதாக சமீபத்தில் படித்தேன். ஆனால் தமிழர்களிடம் குறையவில்லை. வாசிப்பு பழக்கம் என பார்வைக்கு கிடைத்தால்தானே கூடவும் குறையவும் உள்ளது என கணக்கையாவது எடுக்கலாம். முற்றிலும் இல்லை என சொல்வதற்கில்லை , அதே சமயம்  அங்கிருந்து எப்படி வாசிப்பு பழக்கத்தை மீட்டெடுக்கலாம் என யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 



வாசிப்பு என்பது செயல் அல்ல; அது பழக்கம். நகம் கடிப்பது, புகைப்பிடிப்பது, பேச்சுகளுக்கு இடையில் கண்களை சிமிட்டுவது போன்ற ஒரு பழக்கம். ஆனால் வாழ்வின் தரிசனங்களை காட்டக்கூடிய பழக்கம். முதலில் கசக்கும் , பிடித்திருக்கும் புத்தகங்கள் கணக்கும், வார்த்தைகள் குழப்பும். எல்லாம் கொஞ்சம் நாள்தான் அல்லது சில மணி நேரங்கள் தான். பிறகு வாசிப்பின் போதை வாழ்க்கைக்குள் வந்துவிடும். சில சமயம் யோசிப்பது உண்டு, நம்மவர்களுக்கு எப்படி வாசிப்பு பழக்கத்தை பழக்குவது ?
நான் நம்புவது குழந்தைகளிடம் இருந்து வாசிப்பு பழக்கத்தை தொடங்க வேண்டும். அதுதான் தொடங்குவதற்கான இடமும் கூட. மற்றவர்கள் எல்லாம் சொந்த முயற்சியில் வந்துவிடுவார்கள். வளர்ந்துவிட்டவர்களுக்கு இதுகூடவா தெரியாது.

1.      குழந்தைகளின் கைகளில் புத்தகங்களை கொடுத்த பழக்க வேண்டும்.

2.      குழந்தைகள் ஏடுகளை கிழித்துவிடுவார்கள் என புலம்புவதை தவிர்க்கவேண்டும்.

3.      வண்ணம் தீட்டும் புத்தகங்கள், கெட்டி அட்டை புத்தகங்கள், பெரிய எழுத்து புத்தகங்கள் என இருக்கும் பல வகை புத்தகங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

4.      சீரியல் கதையில் காட்டும் ஆர்வத்தை, குழந்தைகளை கதை சொல்லச்சொல்லி கேட்பதில் காட்ட வேண்டும்.

5.      ஊர்கதையும் உருப்படாத உலகக்கதையும் பேசிக்கொள்ளாமல், குழந்தைகளுக்கு இரவு நேர கதைகளை சொல்ல வேண்டும்.

6.      புத்தகங்களை பரிசளிக்க வேண்டும். குழந்தைகள் அதற்காக காத்திருக்கும் படி செய்ய வேண்டும். 

7.      குழந்தைகளை குட்டிகதைகளை எழுத சொல்லி ஊக்குவித்தல் வேண்டும்.

8.      குழந்தை எழுதிய முதல் வார்த்தைகள் அடங்கிய அட்டைகளை கொஞ்சம் நாள் வீட்டில் ஒட்டி வையுங்கள், வீட்டுக்கு வருகின்றவர்களிடம் குழந்தைகளின் திறமையை பேசுங்கள்.

9.      குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள், ஆக அவர்களுக்கு புரியாது என தவறான வார்த்தைகளை அவர்கள் காதுபட பேச வேண்டாம்.பல பிள்ளைகள் கெட்ட வார்த்தைகளை வீட்டில் இருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள்,

 

இன்னும் சொல்வதற்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் அதிகம்தான் இருக்கின்றன. இவை இரண்டும் இலவசம்தானே எத்தனை வேண்டுமானாலும் சொல்லலாம். கேட்பவர்கள் பயன்படுத்தனுமே..  


பின்குறிப்பு ; அங்கிருக்கும் நுழைவாயிலும் இருக்கும் அறிவிப்பு பலகையில் தமிழ் எழுத்துகள் தவறாக அச்சடிக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து புகைப்படம் எடுத்து முகநூலில் பதிந்திருந்தேன். நண்பர்கள் சிலர் அதனை சுட்டுக்காட்டினார்கள். இன்பாக்ஸில் சிலர் வந்து கொப்பளித்தார்கள். எனக்கு அது அத்தனை பெரிய தவறாக தெரியவில்லை. அங்கு தமிழர்கள் செல்ல வேண்டும், தமிழ் புத்தகங்கள் விற்பனைக்கு வரவேண்டும். அதனை சாத்தியமாக்குவதான் நமது முதல் வேலையாக இருக்க வேண்டும். சார் எனக்கு ஆங்கிலம் தெரியாது , நான் அங்க போய் இங்கிலிஷ் புக்கை பார்த்து என்ன செய்ய போறேன்னு கேட்காதிங்க.. ? நான் ஒன்னும் ஆங்கில புலியோ இங்கிலிஷ் இளவரசனோ கிடையாது. ஆங்கிலத்தில் இன்னமும் நான் கத்துக்குட்டிதான் அல்லது அதற்கும் கீழ்.



    முதலில் புத்தகங்களை நேசிக்கவாவது நம்மவர்களை பழக்க வேண்டும். புத்தகம் சரஸ்வதின்னு கூம்பிட்டா மட்டும் போதுதா.. உட்கார்ந்து படிக்க வேண்டாமா..? தமிழ் புத்தகமே விற்காத கடைகளுக்கு தினம் சிலர் சென்று தமிழ் புத்தகம் இருக்கான்னு கேட்டா என்ன ஆகும்? யோசிங்க.. ஒரே வாரத்தில் அங்க தமிழ் புத்தகங்கள் விற்னைக்கு வரும்.

அன்புடன் தயாஜி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக