Pages - Menu

Pages

டிசம்பர் 09, 2015

ம.நவீனுடன் உரையாடல் -1 (பதில்)


 தயாஜி; அழகுநிலா; அலையும் முதல் சுடர்!

 

கவிஞர் ம.நவீன்

 


 தயாஜி, முதலில் உங்கள் கடிதம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான் எதிர்ப்பார்ப்பது இத்தகைய உரையாடலைத்தான். ‘காவ்யா பதிப்பக’ வெளியீட்டில் வந்த க.நா.சு வின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இலக்கியப் படைப்புகளை ஒப்பிட்டு; மதிப்பீடு செய்து தன் முடிவுகளை எந்தவித  மழுப்பலும் இல்லாமல் அவர் முன்வைக்கிறார். வாசிக்க வாசிக்க அவர் விரிவான பார்வை ஆச்சரியம் தருகிறது. அவர் சிபாரிசு செய்துள்ள பல நூல்களை இன்னும் கண்ணால் கூட கண்டதில்லை என நினைக்கும்போது வெட்கமாகத்தான் இருக்கிறது. நான் அவரை மிக முக்கியமான வாசகராகப் பார்க்கிறேன். ஒரு தீவிரமான வாசகனால்தான் எந்தப்படைப்புக்குள்ளும் நுழைய முடிகிறது. அது குறித்த புதிய கருத்தாக்கங்களை உருவாக்க முடிகிறது.

நான் அவ்வாறான ஒரு வாகசனாக  பயிற்சியில் மட்டுமே இருக்கிறேன். என் வாசிப்பை ஒட்டிய அபிப்பிராயங்களை மட்டுமே சொல்ல விளைகிறேன். அதில் என்னுடைய ரசனையை அல்லது முடிவை முன்வைத்து வாதிடும் நோக்கம் எனக்கு இல்லை . தனிமனித ரசனை ஒரு சமூகத்தின் ரசனை ஆகாது. ஆனால் இதுபோன்ற கலந்துரையாடல்கள் மூலமே ஒரு படைப்பை பல்வேறு கோணங்களில் ஆராய முடியும். வாழ்வு எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு அனுபவம் தருகிறதோ அதேபோல அந்த வாழ்வை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு படைப்பு புதிய புதிய அர்த்தங்களைத் திறந்துவிடலாம். உங்கள் கட்டுரை அப்படியான ஒரு நல்ல பார்வை.

தயாஜி, அவதூறுகளை வல்லினம் தொடங்கியது முதல் நான் பார்த்து வருவதுதான். என்னால் அதை இயலாமையின் கெக்கலிப்பாக மட்டுமே பார்க்க முடிகிறது. வல்லினத்தின் செயல்பாட்டில் தவறுகள் இருப்பின் அதை நேருக்கு நேர் சொல்ல முடியாதவர்களிடம் என்னவென்று சம்பாஷிப்பது? சில சமயங்களில் நம்மால் குழுவில் இயங்க முடியாது. அப்படியானால் ஒதுங்கிவிடுவது நலம். அல்லது உடன்படும் தளத்தில் நின்று பணியாற்றலாம். தன் இயலாமையை அல்லது ஒவ்வாமையை ஒப்புக்கொண்டு அமைதியாக இருப்பதுதானே பக்குவம். மருத்துவர் சண்முகசிவா, ஶ்ரீதர், வழக்கறிஞர் பசுபதி, பாண்டியன் போன்றவர்கள் வல்லினம் செயல்பாட்டில் தங்களுக்கு இருக்கும் அதிருப்திகளை அவ்வப்போது சொல்பவர்கள்தான். அதுபோன்ற சமயம்தான் நாம் நம்முடைய தவறுகளைத் திருத்திக்கொள்ள முடிகிறது. திருத்துவதற்கான வாய்ப்பைக் கொடுக்கும் சுட்டிக்காட்டல்கள் மட்டுமே எப்போதும் பரிணாமத்திற்குத் துணைப்புரிகிறது. மற்றபடி நான் எனக்கென தனியாக எந்த ஆளுமையையும் கட்டமைத்து அலையவில்லை. அது சிதைந்துபோவதில் எவ்விதமான வருத்தமும் இல்லை. தனிமனித வாழ்க்கைக் குறித்த அவதூறுகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.

சரி, ‘பங்பங்’ மற்றும் ‘ஒற்றைக்கண்’ குறித்த உங்கள் பார்வை சரியே. இன்னும் சொல்லப்போனால் இத்தொகுப்பில் பல சிறுகதைகள் செரிவு செய்யப்பட்டால் மிகச்சிறந்த சிறுகதைகளாக இருக்கும்.  ‘ஒற்றைக்கண்’ சிறுகதையில் வரும் சம்பவங்கள் ஒரு சீரியல் போல கசகசவென உள்ளது. ‘பங்பங்’ சிறுகதைபோன்ற பாணியில் குமுதம் ஒரு பக்க கதைகளில் பலநூறு கதைகளைப் படித்திருப்பேன். வாசகனை அதிர்ச்சியடைய வைக்க முனையும் மாதிரிகள் இலக்கியச்சூழலில் கசந்துவிட்டது
.
ஆம் தயாஜி! ‘அலையும் முதல் சுடர்’ சிறுகதையை நான் முக்கியமான சிறுகதையாகவே பார்க்கிறேன். நீங்கள் சொல்லும் உதாரணத்தையே பார்ப்போம். உங்களுக்கு  ‘காகம் பாடுவதற்கு முன் வாயில் இருந்த வடையில் காலில் பிடித்துக்கொண்டது’ என முடித்தால் தெரிந்த கதையாக இருந்தாலும் ரசிக்கலாம் என்கிறீர்கள். நான் இதே கதையில் ஏன் அந்த வடை விற்கும் பாட்டியைப் பற்றி நாம் கவலைப்படவில்லை எனக்கேட்கிறேன். இந்த தள்ளாத வயதில் வடை விற்கும் அந்தப்பாட்டி யார்? அவருக்கு ஏன் இந்த வெயிலில் வந்து வடை விற்க வேண்டும். ஏன் அவர் வடைதான் விற்க வேண்டும்? ஈசாப் கதையில் பாட்டி கதாபாத்திரமே இல்லை. தமிழகத்தில் இக்கதை நுழைந்ததும் பாட்டி கதாபாத்திரம் வருகிறது. நாம் எப்படி அந்த பாட்டி கதாபாத்திரத்தை கவனத்தில் வைப்பதில்லையோ அதேபோல புராணங்களிலும் சில பாத்திரங்களை எழுதப்பட்ட கோணத்தில் இருந்தே அணுகுகிறோம்.

புதுமைப்பித்தனின் சாப விமோசனம் இராமயணத்தின் ஒரு பகுதியை மீள் உருவாக்கம் செய்கிறது. கங்காதுரையின் ஆதிசேடன் சிறுகதையும் அவ்வாறானதுதான். அழகு நிலா சம்பவங்களை மாற்றாமல் தருமர் என்பவரின் உளவியலில் நுழைகிறார். அது பேசப்படாத பகுதி. அந்த வகையில் அது முக்கியமான கதை என நினைக்கிறேன்.

மற்றபடி சிறுகதை குறித்த உங்கள் பார்வை உரையாடலுக்கான ஒரு தளமாக அமையும் என நினைக்கிறேன். நன்றி
 -நவீன்



http://vallinam.com.my/navin/?p=2286#more-2286

ம.நவீனின் வலைப்பக்கத்துக்கு இங்கே சொடுக்கவும்,

 http://tayagvellairoja.blogspot.my/2015/12/1.html


முந்தைய கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக