Pages - Menu

Pages

ஜூன் 20, 2012

தூது போகும் போராளிகளும், போராடும் தூதுவர்களும்...



வட்ட மேஜையில் ஒருவர் பின் ஒருவராக அறிமுகம் செய்துக் கொண்டார்கள். என் முறை வந்தது. எழுந்தேன்.

“வணக்கம். நான் தயாஜி. மின்னல் fm-ன் அறிவிப்பாளராகப் பணிசெய்கிறேன். கண்ணாடித் துண்டுகள் எனும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இருந்தேன். அது உண்மை சம்பவங்களை மக்களுக்கு எடுத்து சொல்லும் நிகழ்ச்சி. அப்பறம் எழுத்துத் துறையிலும் ஆர்வம் உண்டு” என சொல்லி அமரத்தயாராகும் அடுத்த வினாடியில்;

“ம்... தயாஜி. தெரியும். உங்களை வல்லினத்தில் படிச்சிருக்கேன்.” என்றார். வட்டமேஜையில் உள்ளவர்கள் படித்திருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. வந்திருந்தவர் கவனித்திருக்கிறார்.

கடந்த 23, 24-ம் தேதிகளில் 'வணக்கம் மலேசியா', ஊடகப் பயிலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. வானொலி அறிவிப்பாளர் என்ற முறையில் என்னையும் நண்பர் ஆனந்தையும் எங்கள் மேலாளர் அனுப்பிவைத்தார். பிற்பகல் 2 மணிக்கெல்லாம் தொடங்கிவிடும் என்ற பதட்டத்தில் ஷா அலாம், சௌஜானா தங்கும் விடுதிக்கு அவசர அவசரமாக சென்றோம். இருபது நிமிட முன்னதாகவே சேர்ந்தோம். நிகழ்ச்சி பிற்பகல் மூன்றுக்கு தொடங்கும் என்றும் அதுவரை எங்கள் அறையில் ஓய்வெடுக்கலாம் என்றார்கள். உடமைகளை அறையில் வைத்துவிட்டோம். வரவேற்பறையில் அமர்ந்து வருவோர் போவோரை நோட்டமிட்டுக்கொண்டிருந்தோம்.

எதிர்ப்பார்க்காத ஊடகத்துறை நண்பர்கள் வந்து அதிர்ச்சி கொடுத்தார்கள். பயிலரங்கில் பேச்சாளர் குறித்து வினவிய போது தமிழகத்திலிருந்து பத்திரிகையாளர் மாலன் என்றார்கள். மாலன் குறித்த வேறெந்த அறிமுகமும் சொன்னவர்களுக்குப் புலப்படவில்லை. ஆனாலும் மாலன் எங்கோ படித்த, தெரிந்த பெயராகவே பட்டது.

(பின் குறிப்பை முன் குறிப்பாக சொல்லிவிடுகிறேன் - இந்த பதிவு மாலன் வருகையும் எனது எண்ணத்தின் பகிர்வும். ஆகவே பயிலரங்கில் வந்த பிரமுகர்கள், சக நண்பர்கள், செய்த சேட்டைகள், விட்ட கோட்டைகள், தூங்கியவர்களின் குறட்டைகளுக்கும் இதில் அவ்வளவாக இடம் இருக்காது; தேடிப்படிக்க ஆசைப்படாதீர்கள்.)

‘சமுதாய மேம்பாட்டிற்கு ஊடகங்களின் பங்கு’ என்ற தலைப்பில் மாலன் பேசவேண்டும். முதல் நாள் வழக்கம் போல பிரமுகர் கவனிப்பு, தாமதம், தேவையற்ற பேச்சு, மாலன் குறித்த அறிமுகம், இப்பயிலரங்கின் நோக்கம் என இரவு வரை நீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டிடிடிடிடிடிடினார்கள்.

இரவு உணவை முடித்த பிறகு; மறுநாள் காலைக்கான வேலை ஒன்றையும் கொடுத்தார்கள். திரையில் காட்டப்படும் காட்சியினை கொண்டு பத்திரிகை செய்தி ஒன்றை தயார் செய்யவேண்டும். வந்திருந்தவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்தார்கள். எண்ணிக்கையின் குறைவு வேலையை சுலபமாக்கியது. பாதி தூங்கியும் மீதி குழம்பியும் வேலையை எங்கள் குழு ஓரளவிற்கு முடித்தது.

மறுநாள் காலை கொடுத்த வேலைகளுக்கான காரணம் சொல்லப்பட்டது. ஒவ்வொரு குழுவும் முன்னிலையில் வந்து செய்தியை வாசித்து அதன் காரணங்களை விவாதித்தோம். முழு அமர்வும் நிறைவடைந்ததும். கற்றுக்கொண்ட திருப்தியில் கிளம்பினேன்.

திரு. மாலன். 70-களில் சிறுகதைகளை எழுதத் தொடங்கி தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். ‘எழுத்து’ பத்திரிக்கை மூலம் கவிதையில் இவர் எழுத்துப் பயணத்தை ஆரம்பித்தார். 70களில் வெளிவந்த பெரும்பாலான சிற்றிதழ்களில் எழுதியிருக்கிறார். கணையாழி ஆசிரியர் குழுவில் பணியாற்றியிருக்கின்றார். அதோடு இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம் ஆகிய முன்னனி இதழ்களில் ஆசிரியராக இருந்திருக்கிறார். வெகுஜன இதழ், நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய எல்லா ஊடகங்களிலும் அனுபவம் பொற்றவர் இவர். தற்போது ‘புதிய சமுதாயம்’ என்ற மாத இதழை நடத்திவருகின்றார். அதே பெயரில் செய்தி தொலைக்காட்சியும் உண்டு. இணையத்திலும் அதனை பார்க்கலாம்.

பயிலறங்கில் ஊடகம் குறித்த அவரது பேச்சு எனக்கு பெரும் உதவியாக இருந்தது.

"மக்களுக்கு தேவையான தகவல்களைக் கொடுக்கும் ஊடகங்களும்; வெறும் பொழுது போக்குகளில் ஈடுபாடு காட்டும் ஊடகங்களும் எல்லா நாள்களிலும் இருக்கத்தான் செய்கின்றன. என்னதான் பொழுது போக்கு அம்சங்கள் கொண்டதை தொடக்கத்தில் மக்கள் விரும்பினாலும் ஒரு காலகட்டத்திற்கு மேல் சலிப்பு நிலை வந்தே தீரும்.

ஆபாசம் விற்கப்படும்; ஆனால் எவ்வளவு காலம் அது விற்கப்படும்?

மக்கள் ஊடகங்களில் வைத்திருக்கும் நம்பகதன்மைதான் நிலைக்கும். ஊடகத்துறையில் இருப்பவர்கள்தான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் பாலமாக இருக்கின்றார்கள். அரசாங்கத்தின் செயல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் அதே நேரத்தில், மக்களின் தேவைகளையும் அரசாங்கத்திடம் கொண்டு செல்ல வேண்டும்.

நாம் போராளிகள் அல்ல.... தூதுவர்கள். ஒரு தூதுவனுக்கு தன் பலமும் தன் எதிரியின் பலமும் முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். மக்களைச் சுற்றி நடப்பவைகளை மக்களுக்கு சொல்லவேண்டுமே தவிர வெறும் கேளிக்கைகள் மட்டும் மக்களுடன் ஊடகத்துறையினரை இணைத்திடாது.

எதை எழுதுகிறோம்.
யாருக்காக எழுதுகிறோம்.

இவை இரண்டும் ஒவ்வொரு முறையும் கவனிக்கவேண்டும். தனிப்பட்ட கோபங்களை வெளிக்கொணர்வது இத்துறைக்கு ஏற்புடையது அல்ல. நமது எல்லா செயல்களும் சமுதாயத்தின் வளர்ச்சி என்பதை நன்கு உணர வேண்டும்.

தொடக்கத்தில் அதிகார வர்க்கத்திடமும் அரசாங்கத்திடமும் நாம் கட்டுபட்டு இருந்தாலும்; நாம் கொண்டிருக்கும் ‘உண்மை’ நிச்சயம் மக்களுக்கும் நமக்கும் வழியை அமைக்கும். கைகட்டப்படிருப்பதாகக் கவலையும் கண்ணீரும் அநாவசியங்கள்.

வாழைப்பழ ஊசி என்பது பொருந்தும் தொழில் இது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்றால்; நாம் காணாமல் போய்விடுவோம். அல்லது காணடிக்கப்படுவோம். எதனையும் நன்கு திட்டமிட்டு; நேரம் பார்த்து; ஆதாரங்கள்; அவசியங்களைக் கருத்தில் கொண்டே செயல்படவேண்டும்.

குறிப்பாக அரசியல் நிலைபாடு அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நம்மை நாமே மேல்நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். நாம் சொல்வதிலும்; எழுதுவதிலும் நம்பகத்தன்மை முதன்மையானது. அரசியல் மாற்றம் முதல் ஆட்சி மாற்றம் வரை அதன் வேகம் இருக்கும். மக்களிடம் மக்கள் மொழியிலேயே தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

குறிப்பாக அரசாங்கம் குறித்து விமர்சிக்கையில். ‘நீ தப்பு’ என இல்லாமல்; நாசுக்காக ‘நல்லதுதான், ஆனால் மக்களுக்கு இதன் தேவை குறைவுதான்’ என்பது போல சொல்லுதல் அவசியம். இருக்காது என்றும் இல்லையென்றும் சொல்லும் போது ஏன் எப்படி என்பதையும் விவரிக்க வேண்டும்.

ஊடகத்துறையில் இருப்பது வெறும் தொழில் அல்ல; அதனையும் தாண்டிய மக்கள் சேவை என்பதனை எப்போதும் மறக்கக்கூடாது."

பேசி முடித்த மாலன், இப்போதும் என் மனதில் வார்த்தைகளால் நிழலாடிக்கொண்டிருக்கிறார். என்னை அறிமுகம் செய்த போது வல்லினத்தில் படித்திருப்பதாக சொன்னது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

மாலன் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் சிலரிடம் இருந்தாலும்; ஊடகத்துறை பணியாளாராக இருக்கும் நான் அவரிடம் கற்றுக்கொள்ள இன்னமும் இருக்கின்றன.



நன்றி
இதழ் 34
அக்டோபர் 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக