( நண்பர் நவின் அவரது வலைப்பூவில் என்னைக் குறித்து எழுதியிருந்தது - நன்றி ம.நவின்)
ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று!
26 & 27 பிப்ரவரி நடக்கவிருந்த மலேசியா – சிங்கப்பூர் உறவுப்பால மாநாட்டிற்கு வெள்ளிக்கிழமையே ஜொகூர் செல்வதாகத் திட்டம். பாலமுருகன் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கே கோலாலம்பூர் வந்துவிட்டார். சிவாபெரியண்ணன் 3 மணிக்கு வேலையிலிருந்து திரும்புவதாகச் சொன்னார். அதற்குள் தயாஜியைப் பார்த்துவிட்டு கொஞ்சம் கதைக்கலாம் என நானும் பாலமுருகனும் திட்டமிட்டிருந்தோம்.
தயாஜி மின்னல் வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகப் பணியாற்றுகிறார். வல்லினத்தில் அவர் எழுதும் ‘பயணிப்பவன் பக்கம்’ குறித்தும் அவர் வானொலியில் இருந்துகொண்டு இலக்கியத்தை நகர்த்த கூடிய சாத்தியங்கள் குறித்தும் பேசலாம் என்றுதான் அன்றையச் சந்திப்பை ஏற்பாடு செய்தேன். நாங்கள் செல்வதற்கு முன்பே சிவா பெரியண்ணன் அங்கு அவரோடு மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். உடை மேசையின் அளவு சிறியதாக இருந்தது. எனக்கு சாப்பிடும் போது வசதியாக அமரவேண்டும். இடம் மாற்றி அமரலாமா என்று கேட்டேன். சிவா ‘சாப்பிடும்போது கையும் வாயுதானே வேலை செய்யப்போகிறது … நீச்சல் அடித்துக்கொண்டா சாப்பிடப்போகிறோம்’ என்றார். பின்னர் அவரே கொஞ்சம் இடத்தைத் தாராளாப் படுத்தினார். சிவாவின் ‘பிளாஞ்சா’வில் மதிய உணவு சுவையாக இருந்தது.
கொஞ்ச நேரம் இலக்கியம் குறித்தும் வல்லினம் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். மிக முக்கியமாக எழுத்தாளர் சங்கத்தின் சுரண்டல் பற்றியது. தயாஜிக்கு அது குறித்த பிரக்ஞை இருந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால் அது போதாது என்றும் தோன்றியது. இலக்கியத்தில் தீவிரமாக நுழையும் ஒருவனுக்கு தொடக்கத்தில் இருக்கும் அத்தனை அசட்டுத்தனமான நம்பிக்கைகளும் ஆர்வமும் அவரின் பேச்சில் இருந்தது. நானும் முன்பு அவ்வாறு இருந்ததால் என்னால் எளிதில் தயாஜியை அறிய முடிந்தது. இன்னும் சொல்லப்போனால் அவர் புழங்கும் வானொலி எனும் ஊடகம் சமரசங்களுக்கான அத்தனை சாத்தியங்களையும் கொண்டது. அதை மீறி அவர் அடுத்தடுத்து செயல்பட முடியுமா என்பதில் எனக்குக் கேள்விகளும் இருந்ததன.
தயாஜி
இடையில் சிவா பயணத்துக்கான தனது உடமைகளைத் தயார் செய்ய அருகில் இருந்த தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதன்பின்னர் தயாஜி விஸ்தாரமான ஓர் உரையாடலுக்கான வாய்ப்பினைக் கொடுத்திருந்தார். சிவா தான் பணிபுரியும் அமைச்சின் அதிகாரி உடையில் இருந்தது அவருக்கு அவ்வளவு நேரம் கிலியைக் கொடுத்திருக்கலாம்
தயாஜியிடமிருந்து பெரும்பாலும் நேர்மறையான பதில்களே இருந்தன. அதன் வழி தடைகளில்லாமல் சில விடயங்களைப் பகிர வாய்ப்பிருந்தது. உரையாடல் தனிப்பட்ட வாழ்வு குறித்து சென்றது. காதல் தொடர்பாகவும். காதல் ஏற்படுத்தும் வன்முறை தொடர்பாகவும்.
நான் ‘காதல் என்பதே வன்முறைதான்’ என்றேன்.” நாம் இதற்கு முன்பு நமது தமிழ்ப்படங்கள் கற்பித்த காதலை நமது காதலாகக் காண்கிறோம். அக்காதல் அவ்வாறாக இல்லாத உண்மை தெரியும் போது சலனம் அடைகிறோம். நமது ஆழமான நம்பிக்கைகள் நிஜத்தை சில சமயம் மறைக்கிறது. நாம் நமது காதலை விரும்பாத கணத்தையும்.” தயாஜி நான் சொல்வதை ஏற்றுக்கொண்டது போல தோன்றியது. அவருக்கு அதற்கான அனுபவங்கள் இருந்தன. என்னுடைய சில அனுவங்களைக் கூறினேன். பாலாவும் கூறினார்.
மீண்டும் பேச்சு இலக்கியத்திற்குள் புகுந்த போது வாசிப்பைத் தீவிரப்படுத்தக் கூறினேன். ஆழமான நம்பிக்கைகள் நிஜத்தை மறைப்பதை இலக்கியத்திலும் கவனிக்கவேண்டியிருப்பதை வழியுறுத்தவேண்டும் எனத் தோன்றியது. அடுத்தடுத்தச் சந்திப்பில் அது குறித்து பேசலாம் என விடைப்பெற்றேன். தொடர்ந்து சந்திக்கலாம் என்றேன். தொடர்ச்சியான உரையாடலும் வாசிப்பும் தீவிரத்தன்மையை அதிகரிக்கும் எனக்கூறினேன். தயாஜி சரி என்றார்.
மகிழுந்தில் ஏறியபின் பாலாவிடம் சொன்னேன், ” தயாஜி போலதான் நானும் வாசிக்கவும் எழுதவும் தொடங்கினேன். அப்போது சுஜாதாதான் எனக்குப் பிடித்த எழுத்தாளர். எனக்கு வழிக்காட்ட எம்.ஏ.இளஞ்செல்வன் தொடங்கி சண்முகசிவா வரை இருந்தனர்.
வாசிப்பைத் தீவிரப்படுத்தி அதிகாரத்திடம் தன்னை சமரசப்படுத்தாமல் தொடர்ந்து செயல்பட்டால் தயாஜி முக்கிய எழுத்தாளராக வருவார். அதற்கு வழிக்காட்டுதலும் அவர் எழுத்துகளை செம்மைப்படுத்தி பிரசுரிக்கும் ஊடகங்களும் தேவை. அதைதான் நாம் செய்ய வேண்டும். மற்றபடி உட்காரவைத்து உன் எழுத்தில் அது நொட்டை இது நொட்டை எனச்சொல்வதில் நம் மேதாவிதனம் வெளிப்படுமே தவிர அடுத்த தலைமுறை வளராது” என்றேன்.பாலா முழுதுமாக ஆமோதித்தார்.
நன்றி
http://vallinam.com.my/navin/?p=425
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக