Pages - Menu

Pages

மே 27, 2026

- கவிதையைச் சுமப்பவர்கள் -


மூடாத
ஜன்னல் ஓரத்தில்
அமர்ந்தபடி
கவிதை எழுதுகிறவன் நான்

என் வீட்டில்
எழுதுவதற்கென
கொடுக்கப்பட்ட மாளிகைவாசல்
அதுதான்

சாலையோர மனிதர்களில்
ஒருசிலரையாவது
எனக்கு
கொஞ்சம் தெரியும்

கவிதை வராத நாட்களில்
போவோர் வருவோர்
முகங்களில்
ஏதாவது தட்டுப்படுகிறதா என
பார்ப்பதுதான்
என்
பொழுது போக்கு

எழுதி முடித்த கவிதைகளின்
கடைசி வரிகளை
அழித்துவிடுகிறேன்
அவற்றை
காற்றில் பறக்கவிடுகிறேன்

ஜன்னலின் வழி
அவை
பறந்திறங்கும் போது
பறவைகளில் நிழலைப்
போலிருக்கும்

விலாசமற்ற வாசலைத் தேடி
கண்டடையும்
தபால்காரன் போல

கடைசி வரிக்கு
ஏற்ற யாரோ ஒருவரை
அந்தக் கவிதைகள்
தேடி தவழ்கின்றன

என் கவிதைக்கான
கடைசி வரியை
நீண்ட காலமாக
சுமந்தபடி வாழும்
யாரோ ஒருவர்
இந்த வழியே
எப்போதாவது
வராமலா போய்விடுவார்...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக