Pages - Menu

Pages

பிப்ரவரி 20, 2026

பெயர் சொல்லி அழைக்கிறேன்...

இன்று எனக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை. முன்னமே எடுத்த பரிசோதனை முடிவுகளும் இனி அடித்தடுத்த பரிசோதனைகளுக்கான நாட்களையும் சொல்லுவார்கள்.

எப்போதும் சொல்வதுதான் தலையில் அடி படாதவரை நான் வேறொரு ஆள். தலையில் அடிவாங்கிய பின் நான் வேறொரு ஆள். இந்தப் புதிய ஆளுக்கு தலையில் தொடங்கி தலைகால் புரியாத சிக்கல்கள் பல உள்ளன.

எல்லாவற்றையும் கடந்துதான் வரவேண்டியுள்ளது. நம்பிக்கையோடு வாழ வேண்டியுள்ளது.

ஒவ்வொரு முறையும் மருத்துவ பரிசோதனைக்கு வரும்போதும் மருத்துவரின் ஆலோசனைகளோடு மனதுக்கு தேவையான சிலரின் கதைகளும் கிடைக்கவே செய்கின்றன.

இன்றும் ஒருவரைச் சந்தித்தேன். வயதானவராக தெரிந்தார். சோர்ந்து போயிருந்தார்.  அவருக்கு நாற்பது வயதாவதைச் சொன்னவர், இதுவரையில் பெயர் சொல்லும் வகையில் எதையுமே செய்ததில்லை என்று சொல்லி முடிக்கவும் அவர் பெயரை நர்ஸ் அழைக்கவும் சரியாக இருந்தது.

"தோ... உங்க பேரை சொல்லிட்டாங்க நீங்களும் பெரிய ஆளுதான்... இன்னொரு நாற்பது வருசத்தை இதை வச்சே ஓட்டிடலாமே..." என்றேன்.

சிரித்துக்கொண்டே மருத்துவரின் அறைக்கு சென்றார். எனக்கும் சிரிக்கத் தோன்றியது. நான் சொன்னது அவருக்கு மட்டுமல்ல. அவர் சொன்ன கதை எனக்கு மட்டுமல்ல.

எல்லோரிடமும் எல்லோருக்குமான குறைந்தபட்சம் யாரோ ஒருவருக்கான கதைகள் இருக்கவே செய்கின்றன.

அவருடன் நிகழ்ந்த உரையாடலை ஏதாவது ஒருவகையில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அதுவரை, நானும் உங்களைப் பெயர் சொல்லி அழைத்ததாய் நினைத்து கொண்டு உற்சாகமாக களம் இறங்குங்கள். இல்லை. வேண்டாம். இறங்க வேண்டாம். களம் ஏறுங்கள். இனி வரும் காலம் நமக்கு ஏற்றங்களோடே இருக்கட்டும்...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக