Pages - Menu

Pages

ஜனவரி 16, 2026

- ஒழுகிய அன்பு -


எதார்த்தமாக சிலர் பார்த்துவிடுகிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லாமலிருந்தால் அருகில் வந்து நலம் விசாரிக்கிறார்கள். அடுத்த கேள்வியாக 'என்ன வேலை செய்றிங்க..?' என்ற கேள்வி வந்து விழுகிறது.

அவர்களிடமும் வேலை கேட்டிருக்கிறேன். விபரங்களை வாங்கி கொண்டு எனக்கு பதில் சொல்வதாகச் சொன்ன அவர்கள் மறந்திருக்கலாம். நான் மறக்க முடியாதே.

நான் திரும்ப கேட்டிருக்கலாம்தான். "ஏன் தொந்தரவு செய்றீங்க. வேலை இருந்தா நாங்களே சொல்லமாட்டோமா? எங்க வேலைக்கே இவ்வளவு பிரச்சனை இருக்கு.. நீங்க வேற..." என யாரும் உங்களிடம் கேட்டிருந்தால் என் தயக்கம் உங்களுக்கும் புரியும்.

நமக்கு வேலை இல்லை என்பதுதான் பிரச்சனை. அவ்வளவுதான். ஆனால் அவர்களுக்கு செய்கிற வேலையிலேயே ஆயிரம் பிரச்சனைகள். அவர்கள் ரொம்பவும் பாவம்தான் இல்லையா?

மனதில் இவையெல்லாம் ஓடினாலும், கொஞ்சமாய்ப் புன்னகித்து எல்லாவற்றையும் மறைத்தபடி, 'வழக்கம் போலவே இப்போதும் புத்தகங்கள் விற்பதாக' சொல்கிறேன்.

"ஓ இன்னும் புக்குதான் விக்கறீங்களா..." என்றபடி ரொம்பவும் அன்பொழுக சிரித்தபடி கடந்துவிடுகிறார்கள்.

அவர்கள் சிரிப்பிலிருந்து ஒழுகிய அன்பு என் கண்ணெதிரிலேயே சாலையோற சாக்கடையில் கலக்கிறது.

நமக்கு உதவுவதாகக் கூறிய பலரிடமிருந்து ஒழுகிய அன்பு எல்லாமே அங்குதான் வந்து சேர்கிறது போல.

சாக்கடைகள் அடைத்துக்கொள்வதற்கு குப்பைகள்தான் காரணம் என நினைத்து கொண்டிருந்தேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக